விருந்தோம்பல் பற்றிய கட்டுரை

virunthombal katturai tamil

விருந்தோம்பல் ஆனது வந்தோரை வரவேற்று உபசரித்து அனுப்புவதோடு அடுத்தவர்களையும் அன்போடு உபசரிக்கும் சிறந்த பழக்கமாகும்.

பசியோடும் களைப்போடும் வருபவர்களுக்கு உணவளிப்பது உயர்ந்த புண்ணியம் என்கிறது மதங்கள். ஆனால் இந்த விருந்தோம்பல் முறையானது இன்றைய நவநாகரிக காலத்தில் குறைந்து வருகிறது.

விருந்தோம்பல் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • விருந்தினர்
  • விருந்தோம்பலும் அதிலுள்ள அறிவியலும்
  • மறக்கப்பட்ட விருந்தோம்பல் பண்பு
  • சமகாலத்து பயன்பாடு
  • முடிவுரை

முன்னுரை

‘மருந்தே ஆயினும் விருந்தோடுண்’ என்கிறார் ஒளவையார் அதாவது நாம் உண்கின்ற உணவை புதிதாய் வருகின்றவர்களுக்கும் கொடுத்து உபசரிக்கும் பண்பு இருக்க வேண்டும்.

சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம், திருமந்திரம், அகத்தியம், திருக்குறள் என பல நூல்கள் விருந்தோம்பலை பற்றி அழகாக கூறுகின்றன.

ஆனால் இன்று அடுத்தவர்களை உபசரிக்கும் பண்பு குறைந்து விட்டது. இன்றைய தொழில்நுட்ப உலகம் சமூக வலைத்தளங்கள் உறவுகளுக்கிடையிலான நெருக்கத்தை குறைத்து ஒற்றுமை இல்லாத போலியான வாழ்க்கையை ஒவ்வொரு மனிதர்களும் வாழ்ந்து கொண்டிருப்பது வெளிப்படையான உண்மையாகும்.

விருந்தினர்

தமிழர் பண்பாட்டின் சிறப்பம்சமாக விருந்தோம்பல் பண்பாடு யாரை உபசரிக்க தோன்றியது என்பதனை இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. தொல்காப்பியத்தில் விருந்தினர்கள் என்போர் யார் எனக் கூறப்படுகின்றது.

விருந்து எனும் சொல்லிற்கு புதுமை என்று பொருள். விருந்தினர் என்பது புதிதாக வந்து இருக்கக்கூடியவர்கள். அவர் தமது உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் விருந்தினராக மாட்டார்கள். எமக்கு யார் என்று தெரியாத புதியவர்கள் தான் விருந்தினர்கள் என்று இலக்கியங்கள் நமக்கு கூறுகின்றன.

விருந்தோம்பலும் அதிலுள்ள அறிவியலும்

தமிழர்களின் ஒவ்வொரு கலாச்சாரப் பின்னணியிலும் ஓர் அறிவியலுள்ளது. வரும் விருந்தினர்களுக்கு வாயில்களில் நீர் வைக்கப்பட்டிருக்கும். இதில் விருந்தினர்கள் கை, கால்களை கழுவிய பின்னரே உள்ளே வருவார்கள். இதனால் கிருமிகளால் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

வாழை இலையில் உணவை பரிமாறுவார்கள். வாழை இலையின் குறுகிய பாகம் அமர்ந்து இருப்பவரின் இடது புறமாக வைக்கப்படும். சாதம், அதற்கான கூட்டு வகைகள் போன்றன அடிக்கடி எடுத்து உண்ணக்கூடியவை இதனால் அவை தடிப்பான பகுதியிலும் அடிக்கடி பயன்படுத்தப்படாத ஊறுகாய், உப்பு போன்றவை மற்றைய பகுதியிலும் இருக்கும்.

மறக்கப்பட்ட விருந்தோம்பல் பண்பு

இன்று தமிழர் பெருமை பேசும் மரபுகள் எத்தனையோ மறக்கப்பட்டு விட்டது. நம் முன்னோர்கள் நமக்கு கற்றுத்தந்த பண்புகளை நாம் நமது இயல்பிற்கும் நவீன வாழ்க்கை முறைக்கும் ஏற்ற வகையில் மாற்றி அமைத்துள்ளோம்.

பசித்தவர்களுக்கு உணவளிக்கும் பண்பில்லாமல் பகட்டுக்கு உணவளிக்கும் நிலை வந்துள்ளது. பகுத்துண்டு விருந்தோம்பலை மேற்கொண்ட இனம் இன்று நெறி தவறிப்போய் கொண்டிருக்கின்றது.

சமகாலத்து பயன்பாடு

சமகாலத்து மேற்கத்திய உலகில் விருந்தாளிகளை மதிப்பது, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது போன்றவை இன்னமும் இருக்கின்றது.

விருந்தோம்பல் சேவைத் தொழிற்துறை என்பது உணவகங்கள், சூதாட்டக்களங்கள், சுற்றுலா விடுதிகள் ஆகியவற்றை உட்படுத்தும். ஹாஸ்பிடல், ஹாஸ்டல் எனும் சொற்கள் அனைத்துமே விருந்தோம்பல் எனப் பொருள்படுவதான ஹாஸ்பிடாலிட்டி எனும் சொல்லிலிருந்து பெறப்பட்டவையே.

இந்த நிறுவனங்கள் தனிப்பட்ட முறையில் கவனிப்பு அளிப்பதை இன்னும் கைக்கொண்டுள்ளன.

முடிவுரை

முன்னோர்களின் வழிப்போக்கர்களை உபசரிக்கும் விருந்தோம்பல் பண்பினை முழுமையாக பின்பற்ற முடியவில்லை என்றாலும் பசியால் வருவோருக்கு அவர்களை புறக்கணிக்காமல் இன்முகத்துடன் வரவேற்று உணவளிக்க வேண்டும்.

நம் பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் என்றைக்கும் மங்காதவை. இவற்றை நாமும் பின்பற்றி வாழ்வதே சிறப்பானதாகும்.

You May Also Like:

நுகர்வோர் மன்றம் கட்டுரை

ஒலி மாசுபாடு கட்டுரை