உலகப் பொதுமறை என மக்களால் போற்றப்படும் திருக்குறள் வாழ்விற்கு தேவையான பல அறக்கருத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அதில் ஒழுக்கம் பற்றி சிறப்பாக எடுத்துரைக்கின்றது.
வள்ளுவம் வலியுறுத்தும் ஒழுக்கம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- வள்ளுவரும் ஒழுக்கமும்
- ஒழுக்கப்பண்புகள்
- ஒழுக்கம் உயர்வு தரும்
- ஒழுக்கமின்மை துன்பம் தரும்
- முடிவுரை
முன்னுரை
மனிதனை நல்வழிப்படுத்தும் சிறந்த ஆயுதம் ஒழுக்கமாகும். ஒழுக்கமே சமூகத்தில் ஒருவருக்கு மரியாதையையும் உயர்வையும் பெற்றுத் தருவதாகும்.
இவ்வுலகில் மானிடராக பிறந்த அனைவரும் வாழ்தல் பொருட்டு பல்வேறு ஒழுக்கப்பண்புகளையும், நடைமுறைகளையும் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும் என்பது காலங்காலமாக, பின்பற்றப்பட்டு வருவதாகும்.
ஆகையால் ஒழுக்கத்தை ஒவ்வொருவரும் விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுவே அவர்களது வாழ்வில் முன்னேற அவர்களுக்கு துணையாக அமையும். ஒழுக்கம் தவறியவர்கள் வாழ்வில் முன்னேற முடியாது. மாறாக துன்பங்களையே சந்திக்க நேரிடும்.
வள்ளுவரும் ஒழுக்கமும்
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என மகாகவி பாரதியார் வள்ளுவரைக் கொண்டாடுகிறார்.
வள்ளுவர் இந்த உலகிற்கு அளித்த திருக்குறள் என்பது நீதி நூல் மட்டுமல்லாது எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியவாறு நற்கருத்துக்கள் செறிந்து இனம், மொழி, நாடு எனும் எல்லைகளைக் கடந்து மனித வாழ்க்கையை வளப்படுத்தும் வாழ்வியல் கருத்துக்கள் நிறைந்த நூல் ஆகும்.
இதனையே மதுரை தமிழ் நாகனார் “எல்லாப் பொருளும் இதன் பால் உள” என்று தெளிந்துரைத்துள்ளார். திருக்குறள் தான் தோன்றிய காலத்தோடு நின்று விடாமல் இந்த நூற்றாண்டு மனிதனுக்கும் வாழ்க்கையை சொல்லிக்கொடுக்கின்றது.
மனித வாழ்க்கையை பகுத்து நோக்கி அறம், பொருள், இன்பம் ஆகிய முதன்மைப் பயனை அறிய வைத்து ஒழுக்கமுடைய வாழ்வுக்கு வழிகாட்டுவதுடன் இயந்திரங்களைப் போல விரைவான வாழ்வு வாழும் இன்றைய மனிதனுக்கு உள்ளத்தை உறுதிப்படுத்தவும் வாழ்வியல் பொருண்மைத் தெளிவு பெறவும் வள்ளுவர் வாக்கு ஊன்றுகோலாக இருக்கின்றது.
ஒழுக்கப் பண்புகள்
ஒழுக்கத்தை தனிமனித ஒழுக்கம், சமுதாய ஒழுக்கம் என இரண்டாக பகுத்துப் பேசுகின்றனர். மது அருந்தாமை, புகை பிடிக்காமை, பாலியல் ஒழுக்கம் போன்றவை தனிமனித ஒழுக்கம் சார்ந்தவை.
லஞ்சம் வாங்காமை, பொதுச் சொத்துக்களை சுரண்டாமை போன்றவை சமுதாய ஒழுக்கம் சார்ந்தவை.
தனிமனித ஒழுக்கம் என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. அதனை யாரும் யார் மேலும் திணித்தலாகாது என்றும் சமுதாய ஒழுக்கமே முக்கிய தேவை என்று கருத்துச் சொல்லும் போக்கு இன்று மேலோங்கி இருந்தாலும் தனிமனித ஒழுக்கமின்மையே சமுதாய ஒழுக்கமின்மைக்கு வழிகோலுகிறது.
வள்ளுவம் தனிமனித ஒழுக்கம், சமுதாய ஒழுக்கம் இரண்டுமே முக்கியமானவை என்ற கண்ணோட்டம் உடையவராக இருக்கிறார்.
ஒழுக்கம் உயர்வு தரும்
ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால் அவ்வொழுக்கம் உயிரினும் மேலானதாக சிறப்பிக்கப்படுகிறது. இதனையே வள்ளுவர், “ஒழுக்கம் விழுப்பந்தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்ற குறளினுடாக வெளிப்படுத்துகிறார்.
திருக்குறள் அன்பு, பண்பு, இன்சொல், நன்றியறிதல், புறங்கூறாமை, நடுவுநிலைமை,ஈதல் அறம், ஆன்மீக அறம், காதல் அறம் போன்ற பல மாண்புகளை விளக்குகிறது.
அறம், பொருள், இன்பம் எனும் முப்பாலினூடாக அற வழியில் பொருள் ஈட்டி இன்பத்தை அடைதல் சிறப்பு என்பதை உணர்த்துகிறார்.
“அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்கம் இலான்கண் உயர்வு” என மற்றவர்கள் மேல் பொறாமை கொண்டு அவர்களின் அழிவைப்பற்றி எப்போதும் சிந்திப்பவனிடத்தே ஆக்கம் அமையாதது போல ஒழுக்கம் இல்லாதவன் வாழ்க்கையிலும் உயர்வு இல்லை எனத் தெளிவுபடுத்துகிறார்.
“பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை” என்ற குறளினூடாக வருந்தியேனும் ஒழுக்கத்தைப் பேணிக் காக்க வேண்டும், பலவழிகளில் ஆராய்ந்தாலும் ஒழுக்கமே வாழ்க்கைக்கு என்றும் துணையாக முடியும்.
மனதில் உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுதலால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்கமாட்டார்கள்.
ஒழுக்கமின்மை துன்பம் தரும்
“நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்” என்ற குறளினுடாக நல்லொழுக்கம் அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மையிலும், மறுமையிலும் இன்பம் தரும், தீயொழுக்கமோ தீராத துன்பம் தருவதாகும் என குறிப்பிடுகிறார்.
தீய ஒழுக்கம் சிறிது காலத்திற்கு இனிப்பாக இருந்தாலும் பின்னாளில் அது பெரும் துன்பத்தையே தரும்.
கூடாநட்பு, கள்ளுண்ணல், புலால் உண்ணல், வன்சொல் பேசுதல், பிறர்மனை நயத்தல், போன்ற தீய பழக்கங்களை விடுத்து அறவழியில் செயற்படும் சமுதாயத்தை உருவாக்குவதன் தேவையை உணர்ந்து ஈரடிக்குறளினூடாக எம் வாழ்வைத் செம்மைப்படுத்த முனைகிறார் வள்ளுவர்.
நல்லொழுக்கம் எவ்வாறு ஒருவரை உயர்த்துகிறதோ, அதேபோல ஒழுக்கமின்மையானது ஒருவரை தீய வழியில் செலுத்தி சமுதாயத்தை இழிநிலைக்கு இட்டுச் செல்லும்.
ஆகையால் நாம் தீய செயல்களை தவிர்த்து நன்னெறியில் வாழ்ந்தால் மட்டுமே சமூகத்தில் உயர்ந்து வாழ முடியும்.
முடிவுரை
வள்ளுவர் வலியுறுத்தும் கருத்துக்கள் சமுதாயத்தில் மலர்ச்சியை உண்டாக்கும் மருந்தாக கொள்ள முடியும். இன்றைய காலத்தில் பணத்துக்கும் புகழுக்கும் நம் சமூகம் தரும் மதிப்பில் கடுகளவு பங்கு கூட ஒழுக்கத்திற்கு தருவதில்லை என்பதே கசப்பான உண்மை.
ஒரு மனிதன் ஒழுக்கமாக வாழ்வதற்கு உணர்வுடைய மனிதனாக இருந்தால் மட்டும் போதுமானது.
ஆகையால் தனிமனித நிலை தொடங்கி சமுதாய நிலை வரை மனிதர்கள் பாதுகாக்க வேண்டிய பண்புகள், ஆற்ற வேண்டிய பணிகள் எனப் பன்முகக்கூறுகளை ஒழுங்குமுறை அமைத்து ஈரடிக்குள் ஒரு முழுமையான கருத்தாக்கத்தை தந்த வள்ளுவம் வலியுறுத்தும் வாழ்வியல் ஒழுக்கநெறியினை கடைப்பிடித்து உயர்வடைவோமாக.
You May Also Like: