உளவியலை “விஞ்ஞானத்தின் விஞ்ஞானம்” (Science of Science) என்கிறார் விவேகானந்தர். உளவியல் தனியான துறையாக வளர்ச்சி அடைவதற்கு முன்னரே யோகாவானது உளம் பற்றிய ஆய்வியலாக இருந்து வந்திருக்கிறது.
தனிநபர்களின் ஆரோக்கியம், மன அமைதி மற்றும் சமூக அமைதி போன்றவற்றை அடைவதற்கான ஒரு கருவியாக யோகா காணப்படுகின்றது.
யோகாவின் தேவையும் முக்கியத்துவமும் இன்று அதிகம் தேவைப்படுகின்றது. யோகாவைப் பற்றிய விழிப்புணர்வு இன்று மக்களிடையே அதிவேகமாக பரவிவருகின்றது.
மனித பாரம்பரியத்தின் சிறப்பான பொக்கிசத்தை அங்கீகரித்த ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21ம் திகதியை சர்வதேச யோகா தினமாக நினைவுகூரும் ஒரு தீர்மானத்தை 2014 டிசம்பரில் நிறைவேற்றியது.
யோகாவின் முக்கியத்துவத்தை மக்களிடையே அறிய செய்ததில் ஐக்கிய நாடுகள் சபையின் வகிபங்கு அதிகமாக இருக்கின்றது.
யோகா உளவியல் என்றால் என்ன
“யுஜ்” என்ற சமஸ்கிருத சொல்லிருந்தே யோகா என்ற சொல் தோன்றியது. இதன் அர்த்தம் ஐக்கியப்படுதல் அல்லது ஒற்றுமைப்படுதல் என்பது ஆகும்.
அது மட்டுமல்லாமல் உடல், உள, ஆன்மா, எமது சிந்தனைகள் மற்றும் செயற்பாடுகள் ஆகியவற்றின் ஒருங்கிணைவுக்கும் யோகா உதவியாக அமைகின்றது.
யோகா உளவியல் மனித உடல், மனித உளவியல் மற்றும் சூழலுடனான நமது தொடர்புகள் போன்றவற்றின் செயற்பாடுகளின் அடிப்படையிலான ஆழமான அறிவினை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.
மனதினைப் பற்றிய விரிவான ஆராய்ச்சியும், மன ஆற்றலால் உண்டாகின்ற பல்வேறுபட்ட சாதனைகளும், மனம், உடல், செயலுணர்வுகளின் கட்டுப்பாடு, மற்றும் இயற்கைக்கும் மனிதனுக்குமான ஒத்திசைவு முதலியனவும் இணைந்தவொரு உருவாக்கமாக யோகதத்துவம் உள்ளது.
இதன் விளைவாகவே யோக தத்துவத்தினை “மன விஞ்ஞானம்” (Science of mind) எனச் சுட்டிக் கூறுவர்.
யோகா உளவியலின் நன்மைகள்
உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் யோகா அளிக்கும் பலன்கள் ஏராளம். நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கவும், ஆரோக்கியமாக வாழவும், நேர்மறையான எண்ணங்களை வளர்க்கவும் யோகா நமக்கு உதவுகிறது.
யோகா என்பது தன்னை உணர வைக்கும் கலை ஆகும். ஒரு மனிதன் தாழ்வு மனப்பான்மையில் இருந்து மீண்டு ஆளுமை மிக்க ஒருவராக மாற துணையாக உள்ளது.
இளைய சமுதாயத்தினரிடையே காணப்படுகின்ற மன அழுத்தங்கள், மன உளைச்சல்கள், பழிவாங்கும் எண்ணங்கள், விட்டுக்கொடுப்பற்ற தன்மைகள், புரிதலின்மைகள், வன்முறைகள், முறையற்ற பாலியல் நடத்தைகள் போன்ற சமூகப் பிறழ்வுகளில் இருந்து விலகி ஆரோக்கியமான உடலமைப்பையும், உளநலத்தையும் மேம்படுத்துவதற்கு யோகா பெரும்துணையாக உள்ளது.
முதியவர்கள் நாளாந்தம் தங்களால் செய்யக்கூடிய பயிற்சிகளை தவறாமல் செய்து வந்தால் உடல் உள ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். முதுமையில் தோன்றும் ஏக்கம், மனக்கவலை, மன உளைச்சல், உடற்சோர்வு போன்றவை நீங்கி மகிழ்வுடன் வாழ யோகா உதவியாக இருக்கும்.
தொடர்ச்சியான பயிற்சிகளால் மனோதிடம் அதிகரித்து வாழ்வில் ஏற்படும் சிக்கலான சவால்களை எதிர்கொள்ளும் பக்குவ நிலை உருவாகும்.