நாம் வாழும் உலகானது பசுமை நிறைந்ததாகவும் இயற்கை அழகு மிக்கதாகவும் காணப்படுவதற்கு மரங்கள் அவசியமானதாக காணப்படுகின்றன.
அதாவது நாம் நடுகின்ற ஒவ்வொரு மரங்களும் எமது அடுத்த தலைமுறையினரை வாழ வைப்பதாகவே காணப்படும். மற்றும் மரங்களின் அழிவு மனிதர்களின் அழிவை உருவாக்கும் என்பதனையும் புரிந்து கொள்ள வேண்டும்.
மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- மரங்களின் முக்கியத்துவம்
- மரங்களின் தொழிற்பாடுகள்
- மரங்களினால் கிடைக்கும் நன்மைகள்
- மரங்களை அழிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள்
- முடிவுரை
முன்னுரை
இயற்கையின் மிக முக்கியமான ஒரு அம்சமாகவே இந்த மரங்கள் காணப்படுகின்றன. அதாவது நாம் வாழும் உலகத்தில் மனிதர்களின் வாழ்வுக்கு அத்தியாவசியமானவையாக இந்த மரங்கள் காணப்படுகின்றன.
மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான நல்ல காற்று மரங்களின் மூலம் தான் கிடைக்கின்றது. எனவே நாம் அதிகமாக மரங்களை நட வேண்டும். எம்முடைய அடுத்த தலைமுறையினர் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு மரம் வளர்ப்பது அவசியமான ஒன்றாகும்.
மரங்களின் முக்கியத்துவம்
மனிதன் உயிர் வாழ்வதற்கு அவனை அண்டியுள்ள சூழல் மிகவும் முக்கியமானது. அதாவது மனிதன் மரங்கள் அல்லாத பாலை நிலங்களிலோ, துருவப்பிரதேசங்களிலோ வாழ்வது மிக கடினமானது.
மரங்கள் அதிகமாக காணப்படும் காடுகள் இருப்பதினால் தான் காலநிலை சீராக செயல்பட்டு போதுமான மழை வீழ்ச்சி, வெப்பநிலை, காற்று, ஈரப்பதன் போன்றவற்றை பெற்றுக்கொள்ள முடிகின்றது.
மனிதனுக்கு அத்தியாவசிய தேவையான உணவு, நீர், வளி ஆகியவற்றை தருவதாகவும் இந்த மரங்கள் காணப்படுகின்றன.
அதாவது தாவரங்கள் சுவாசிப்பதற்கு தேவையான ஒட்சிசனை வெளியிடுகின்றன, வளிமண்டலத்தில் முகில்களை உருவாக்கி மழையை உருவாக்க காரணமாக அமைகின்றன மற்றும் உண்பதற்கு தானியங்களையும், பழங்களையும், காய்கறிகளையும் தருகின்றன.
மரங்களின் தொழிற்பாடுகள்
பொதுவாகவே தாவரங்கள் அனைத்தும் வளிமண்டலத்தில் ஒட்சிசனை வெளியிட்டு, காபனீரொக்சைட்டை உறிஞ்சுவதனால் சமநிலையை பேணுவதாக காணப்படுகின்றன.
அதிகமான தாவரங்கள் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் உணவை தருவதாக அமைவதோடு, தரைக்கீழ்நீர் உருவாக்கம், வளமான மண் உருவாக்கம் இவை போன்ற பல செயற்பாடுகள் தாவரங்களின் உதவியுடன் நிகழ்வதனை காண முடிகின்றது.
மரங்களினால் கிடைக்கும் நன்மைகள்
மனித வாழ்க்கையில் மிக முக்கிய பங்காற்றுகின்ற மரங்கள் மனிதனுக்கு தேவையான காற்றினை தருகின்றன. அத்தோடு வளிமண்டலத்துக்கு நீரை அனுப்பி இந்த உலகின் பசுமைக்காக மழையை பொழிவிக்கச் செய்கின்றன. நிழல் தரக்கூடியவைகவும் மரங்கள் காணப்படுகின்றன.
மண்ணை வளப்படுத்துவதற்கும், மண் அரிப்பிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கும் மரங்கள் உறுதுணையாக அமைவதோடு, விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் வாழிடமாகவும் காணப்படுகின்றன.
மற்றும் மனிதனின் உணவுக்கான காய்கறிகள், தானியங்கள், பழங்கள் போன்றவற்றையும், தளபாடங்களான மேசை, கதிரை, கட்டில் முதலானவற்றின் உருவாக்கத்திற்கும் மரங்கள் உதவுவதோடு எரிபொருளாகவும் மரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதனை காண முடியும்.
மரங்களை அழிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள்
நாம் வாழும் நவீன யுகத்தில் தொழில்நுட்ப மாற்றங்களின் காரணமாக இயற்கையில் அழிவுகளை மக்கள் அதிகமாக உருவாக்குகின்றனர்.
இந்த வகையில் மரங்கள் அழிக்கப்படுவதனால் தான் பல இயற்கை சீற்றங்களான மண்ணரிப்பு, வறட்சி, மண் சரிவு, புவி வெப்பமாகுதல் போன்றவை உருவாகின்றன.
மேலும் காலநிலை மாற்றங்கள், பச்சை வீட்டு விளைவு, கடல் மட்ட நீர் உயர்வு இவை போன்ற அசாதாரண நிலைமைகள் இன்று பூமியில் ஏற்படுவதற்கு காரணமாக அமைவதும் இந்த மரங்களை அழிப்பதனால் ஏற்படும் பாதிப்புகளாகவே காணப்படுகின்றன.
முடிவுரை
இந்த உலகில் மனிதனுக்கு அருட்கொடையாக மரங்கள் காணப்படுகின்றன. இந்த மரங்களே சூழலுக்கு அதிகமான நன்மைகளை வழங்குவதோடு, பூமியின் நிலை பேற்றுத் தன்மையையும் பாதுகாக்கின்றது.
அதாவது மனிதர்கள் மரங்களுக்கு எவ்வளவு தீமை செய்தாலும் மரங்கள் ஒருபோதும் மனிதர்களுக்கு தீங்கிழைப்பது இல்லை. மரங்களை வளர்க்காவிட்டாலும் கூட அவற்றை அழிக்காமல் இருப்பது எமதே கடமையாகும். எனவே எம் எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதி வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது சிறந்ததாகும்.
You May Also Like: