இன்று சுயநலம் அதிகம் கொண்டவர்களாக மனிதர்கள் மாறி வருகின்றார்கள். இரக்கம், கருணை போன்ற உயரிய குணங்கள் அருகி வருகின்றன. மனித நேயம் என்பது மனிதர்களை பிற உயிர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் உயரிய குணமாகும்.
நாம் அனைவரும் மனிதநேயம் எனும் உயரிய குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். உலக அமைதிக்கும் ஒற்றுமைக்கும் மனிதநேயம் பாதை அமைக்கும்.
மனிதநேயம் மலரட்டும் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- மனிதநேயம்
- வரலாற்றில் மனிதநேயம்
- வாழும் மனிதநேயம்
- அருகிவரும் மனிதநேயம்
- முடிவுரை
முன்னுரை
இயற்கையின் அதி உன்னத படைப்பான மானிடப்பிறவி மனிதநேயத்தினால் மகத்துவமடைகின்றது.
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என சாதி, மத, மொழி, இன பேதங்களின்றி சகமனிதனை மனிதனாக மதித்து அன்பு பாராட்டி மகிழ்வுடன் மனிதநேயத்துடன் வாழ்தலிலேயே மனித வாழ்வானது முழுமை பெறுகின்றது.
மனிதநேயமிக்க உயரிய மனிதர்களினாலேயே இவ்வுலகமானது இன்றும் உயிர்ப்புடன் திகழ்கிறது.
மனிதநேயம்
சக மனிதர்களிடம் அன்பு செலுத்துவதோடு, அனைத்து உயிர்களிடத்தும் கருணை, இரக்கம் கொண்டு வாழ்தலும் வாழவைத்தலும் மனிதநேயம் எனப்படுகிறது. மக்களை மாக்களிடம் இருந்து வேறுபடுத்துவது மனிதநேயமாகும்.
இந்த உலகில் யாரும் தனித்திருந்து வாழ முடியாது. ஒருவருக்கொருவர் உதவி செய்து, பிற உயிர்களை தன்னுயிர் போல் எண்ணி வாழ வழிகாட்டுவது அத்தியாவசியமாகின்றது.
இன்பமும் துன்பமும் இயற்கையின் நியதியான இவ்வாழ்வில் துன்பத்தில் துவள்வோருக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்தல், பசித்தவருக்கு உணவளித்தல், தாகத்திலிருப்போர்க்கு நீர் வழங்குதல், வறுமையில் வாடுவோருக்கு உதவுதல் என வாழ்வின் பல சந்தர்ப்பங்களில் மனித நேயத்தை உணர முடியும்.
யாரென்று அறியாத இன்னொரு மனிதன் துன்பப்படுகின்ற போது உதவி செய்கின்ற அந்த மனம் தான் மனிதநேயமாகின்றது.
வரலாற்றில் மனிதநேயம்
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் மனிதநேயம் எல்லைகள் தாண்டியது.
உலகப் பொதுமறையான திருக்குறளும் மனித நேயத்தை வலியுறுத்துகிறது. புறாவுக்காக தன் உடலை தானம் செய்த சிபிச்சக்கரவர்த்தி, பசுக்கன்றுக்காக தன் மகனையே தண்டித்த மனுநீதி சோழன், முல்லைக்கு தேர் கொடுத்த பாரி என சுயநலம் கருதாது மனிதநேயத்திற்கு முன்னோடியாக பண்டைய காலம் முதல் நம் முன்னோர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
தன்னைத் தாக்கிய பகைவர்களுக்குக் கூட துன்பம் விளைவிக்காது போராட்டத்தினை வென்ற அகிம்சாவாதி மகாத்மாகாந்தி, பிற உயிர்களுக்கு சேவை செய்வதற்கென தன் வாழ்நாளையே அர்ப்பணித்த அன்னை தெரசா, தென்னாபிரிக்காவில் நிற வெறி அமைப்பை முடிவுக்குக் கொண்டு வர போராடிய நெல்சன் மண்டேலா என மனிதநேயம் காத்த புனிதர்கள் பட்டியல் நீள்கிறது.
வாழும் மனிதநேயம்
இந்த உலகில் எத்தனையோ பேர் கண்ணுக்குத் தெரியாமல் மனிதநேயத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களால் தான் மனித குலம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
எடுத்துக்காட்டாக, இயற்கை அனர்த்தங்கள் மற்றும் கொரோனா பேரிடர் காலங்களில் அவதிப்பட்டவர்களுக்கு பலரும் இன, மொழி, மத, நாடு என்ற பேதம் கடந்து தாமே முன்வந்து தம்மாலான உதவிகளை செய்வதை நாம் காணக்கூடியதாயிருக்கிறது.
மேலும் பிறந்தநாள் மற்றும் இதர கொண்டாட்டங்களின் போது தமது உறவுகளுக்கு உணவளிப்பதோடு ஆதரவற்றவர்களுக்கும் உணவு மற்றும் பரிசுகளை வழங்குவதையும் இன்று இயல்பாக காணமுடிகிறது.
அதற்கும் மேலாக, இரத்த தானம் செய்தல், இறந்த பின் உடல் உறுப்புக்களைத் தானம் செய்தல் போன்றவற்றையும் ஆர்வத்துடன் செய்கிறார்கள்.
அருகிவரும் மனிதநேயம்
ஒருவன் எவ்வளவு அறிவாளியாக, அதிகாரம் படைத்தவனாக இருந்தாலும் மனிதநேயம் இல்லாமல் அவனால் எதையும் சாதித்த திருப்தி நிலையை அடைய முடியாது.
உயர்ந்த ஒழுக்கம், பண்பாடு, அவலக்குரல் கேட்டால் துடித்து எழும் மனிதநேயம் என அத்தனை நற்பண்புகளோடு உலகம் வியக்க வாழ்ந்து வழிகாட்டிய எம் முன்னோர்கள் ஈ, எறும்புக்கு கூட துன்பம் விளைவிக்காது வாழ்ந்தார்கள்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் மனித நேயத்தின் ஊற்றுக்கண்ணாகிய அன்பைத் தொலைத்து பொன், பொருளை தேடுவதில் நாட்டம் அதிகரித்து மனிதநேயம் என்பது அருகி வருகிறது.
பலரும் மதவெறி, பதவி வெறி கொண்டு நான், எனது என்ற குறுகிய வட்டத்துக்குள் சுருங்கி சுயநலவாதியாக சுற்றித்திரிகின்றனர்.
பணம் ஒன்றையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு மனச்சாட்சியை விற்று சுயநல நோக்கோடு கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், வணிகங்கள், அரசாங்கம் என அத்தனையும் சமுதாயத்தில் செயற்படுகின்றன.
மனிதநேயம் குறைய குறைய மனிதநேயமற்ற மனிதர்கள் வளர வளர உலகமானது அழிவுப்பாதையை நோக்கிச் செல்வது தவிர்க்க முடியாததாகின்றது.
முடிவுரை
உலகை அழிவிலிருந்து காப்பாற்றி முன்னோர்கள் எமக்களித்த பொக்கிசத்தை எம் எதிர்கால சந்ததிக்கு அவ்வாறே கையளிக்க வேண்டியது மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரதும் தார்மீக கடமையாகும்.
நாம் உலகில் வாழ்வது ஒருமுறை. அவ்வாழ்வானது பிறருக்கு பயனுடையதாக அமைந்தால் மட்டுமே வாழ்க்கை முழுமையடைகிறது.
எனவே வன்முறைகளற்ற அன்பும், அமைதியும், ஆனந்தமும் நிறைந்த வாழ்வுக்கு அடித்தளமான மனிதநேயத்தை பின்பற்றி நாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்போம்.
You May Also Like: