பெண்ணே நீ பெருமை கொள் கட்டுரை

pengal patri katturai

இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு ஜீவராசியும் பிறப்பதற்கு எதுவாக அமைவது தாய்மை என்ற ஒன்றுதான்.

அந்த வகையில் மனிதப் பிறவியில் மனிதனின் பிறப்புக்கும், அவனது சந்ததிகளின் தோற்றத்துக்கும் அடிப்படையாக அமைவது பெண் என்பவள் தான்.

பெண்ணின்றி இவ்வுலகத்தில் மானிடர்களின் ஜனனம் நிரந்தரம் இல்லை என்றே கூற முடியும். எனவே போற்றத் தகுந்த ஓர் படைப்பினமாகவே பெண் என்பவள் காணப்படுகின்றாள்.

பெண்ணே நீ பெருமை கொள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • பெண்மையின் உன்னதம்
  • தாய்மையின் வடிவம் பெண்
  • பெண்மையின் குணாதிசயங்கள்
  • பெண்களைப் போற்றுவதன் அவசியம்
  • முடிவுரை

முன்னுரை

எமது மானுட சமுதாயம் இன்று இயங்கிக் கொண்டிருப்பதற்கு ஏதுவாக அமைவதே இந்த பெண்கள் தான். “மாதராய் பிறந்திட நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்” என்ற ஔவையாரின் கருத்துக்கு இணங்க பெண்கள் சிறந்த படைப்பினர் என்பதனை உணர்ந்து கொள்ள முடிகின்றது.

பெண்மையின் உன்னதம்

இறைவனின் படைப்பில் ஆண்களை விட பெண்கள் சிறப்பு வாய்ந்தவர்களாகவே காணப்படுகின்றார்கள். அந்த வகையில் தான் பல்வேறு கடவுள்கள் கூட பெண்களாகவே காணப்படுகின்றனர்.

தாய்மை, அன்பு, இரக்கம், அரவணைப்பு ஆகியவற்றை ஒருங்கே பெற்றவளாகவே பெண் காணப்படுகின்றாள். இதனால் தான் பெண் இல்லாத ஊரில் பிறந்தவர்கள் மனிதத் தன்மையற்றவர்கள் என்ற கருத்து நிலவுகின்றது. இதன் வழியாக பெண்களின் உன்னதத்தை புரிந்து கொள்ள முடிகின்றது.

தாய்மையின் வடிவம் பெண்

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனின் பிறப்புக்கும் தாய் என்பவள் அடிப்படையாகவே காணப்படுகின்றாள். அந்த தாயின் தியாகத்தின் காரணமாகவே மண்ணில் ஒவ்வொரு குழந்தையும் பிறக்கின்றது, என்பது ஒவ்வொருவரும் அறிந்த உண்மையாகும்.

இவ்வாறாக பெண்கள் தியாகிகளாக மாறாவிட்டால் இந்த உலகத்தில் மனிதப்பிறவியே இருக்காது என கூற முடியும். இவ்வாறாக போற்றப்படும் தாய்மை எனும் வரத்தினைக் கொண்ட பெண்கள் அனைவரும் போற்றத் தகுந்தவர்களாகவே காணப்படுகின்றனர்.

பெண்களின் குணாதிசயங்கள்

இறைவனின் படைப்பில் ஒரு அதிசய பிறவியாகவே பெண் காணப்படுகின்றாள். அந்த வகையில் அன்பின் மறு வடிவம் பெண் என கூற முடியும். அதாவது தாயாக, சகோதரியாக, மனைவியாக என பல்வேறு அந்தஸ்து நிலைகளில் நின்று அன்பாக அரவணைக்கக் கூடியவளாகவே காணப்படுகின்றாள்.

மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை களைவதற்கு உறுதுணையாக நிற்பதோடு, பொறுமை தன்மையும், சகிப்புத்தன்மையும் நிறைந்த தியாகியாகவே காணப்படுகின்றாள்.

இறைவன் பெண்களை உடலளவில் மென்மையானவர்களாக படைத்திருந்தாலும் மனதளவில் அவர்கள் வலிமையானவர்கள் என்பதனை அவர்களது தன்னம்பிக்கை எனும் குணம் வெளிப்படுத்துகின்றது. குழந்தைகளை வளர்ப்பதிலும், பராமரிப்பதிலும் பெண்களை வெல்ல யாருமே இல்லை என்பது அவர்களின் பெருமையே எடுத்துக்காட்டுகின்றது.

பெண்களைப் போற்றுவதன் அவசியம்

மனித தர்மமானது பெண்கள் போற்றப்படுவதின் அவசியத்தை பின்வருமாறு குறிப்பிடுவதனைக் காணலாம்.

அதாவது பெண்கள் எங்கு போற்றப்படுகின்றார்களோ அங்கு தேவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்,

எங்கு பெண்கள் போற்றப்படுவதில்லையோ அங்கு செய்யும் புண்ணியங்கள் எதுவுமே ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை மற்றும் எந்த குலத்தில் பெண்கள் போற்றப்படுகின்றார்களோ அந்த குலம் விருத்தி அடைந்து கொண்டே செல்லும் என குறிப்பிடுகின்றது. இதன் அடிப்படையில் பெண்களை போற்றுவதன் அவசியத்தைக் காண முடிகின்றது.

முடிவுரை

இந்த உலகத்தில் பல்வேறு அந்தஸ்து நிலைகளை வகிக்கும் பெண்கள் தங்களது வயதுக்கு ஏற்ற வகையில் பக்குவத்துடன் செயல்படக்கூடியவர்களாகவே காணப்படுகின்றனர்.

காலமெனும் சங்கிலியின் போர்வைக்குள் சிக்குண்ட பெண்கள் தங்களது ஆசைகள், கனவுகள் யாவற்றையும் குடும்பம் எனும் உறவுகளுக்காக தியாகித்து, சகித்துக் கொண்டு வாழ்வதனைக் காண முடியும்.

எனவே உலகில் பிறந்த ஒவ்வொரு பெண்ணும் பெருமை கொள்ள வேண்டியவளே! போற்றித் தகுந்தவளே! என ஐயமின்றி குறிப்பிட முடியும்.

You May Also Like:

தற்காப்பு கலையில் பெண்கள் கட்டுரை

பெண்மை பற்றிய கட்டுரை