உலகில் பல புயல் சீற்றங்கள் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில சீற்றங்களே மிக அதிக பாதிப்புகளை உண்டாக்கும். காலநிலை மாற்றம் காரணமாக அண்மைக்காலங்களில் நாம் அடிக்கடி புயல்களை சந்தித்து வருகின்றோம்.
சில புயல்கள் சில வேளையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே வலுவிழந்துவிடுகின்றன. சில புயல்கள் அதிதீவிர புயலாக மாறி பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, புயலின் போது உண்டாகும் பலத்த சூறாவளிக் காற்று, கடல்சீற்றம் மற்றும் போன்றவற்றால் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன.
கடலில் எங்கெல்லாம் வெப்பம் அதிகமாக இருக்கிறது என்பதை செயற்கைக்கோள் படங்கள் விவரிக்கின்றன. அதன் அடிப்படையாக கொண்டு எந்தப் பகுதியில் புயல் பயணிக்கும் என்பதை எளிதாக வானியல் அறிஞர்களால் கணிக்க முடியும். அதன் அடிப்படையிலேயே புயல் எந்தப் பகுதியில் கரையைக் கடக்கும் என்பதையும் கணிக்கின்றனர்.
ஒரு புயலினுடைய வலுவான காற்றானது அதன் மையப் பகுதியில் அமைந்திருக்காமல் மையத்தின் வெளிப்புறத்தில் அமைந்திருக்கும் போது புயல் கரையை அடையும் போது இடியுடன் கூடிய கனமழையைத் தருகின்றது.
புயல் முழுவதும் கரையைக் கடந்தவுடன் புயலுக்கும் கடல் நீருக்கும் இடையிலான தொடர்பானது துண்டிக்கப்படும். இதனால் புயலின் வேகமும், தீவிரமும் படிப்படியாகக் குறைவடையை தொடங்குகின்றது.
இதனால்தான் புயலின் வலுவான தாக்கம் நிலத்திற்கு பதிலாக கடலில் இருக்கும் போது அதிக அளவில் காணப்படுகின்றது.
புயல் கரையை கடப்பது என்றால் என்ன
கடலில் உருவாகும் புயல் கடல்பகுதியை விட்டு நிலப்பகுதியை அடைவதையே புயல் கரையை கடப்பது எனப்படுகின்றது.
அமெரிக்கத் தேசிய புயல் மையம், “கடலோரத்துடன் ஒரு வெப்பமண்டல சூறாவளியின் மேற்பரப்பு மையத்தின் குறுக்குவெட்டு” என்று வரையறுக்கிறது.
புயல் கரையைக் கடக்கும் போது செய்யக்கூடாதவை
புயல் கரையை கடக்கும் நேரத்தில் சம்மந்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், செய்யக்கூடாதவற்றை பற்றி மக்கள் அறிந்து வைத்திருப்பதோடு விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டியதும் அவசியமாகும். புயல் கரையை கடக்கும் வழிகளில் கடற்கரைப் பகுதிகளுக்கு, சென்று வீடியோ எடுப்பது அல்லது, செல்ஃபி எடுப்பது போன்றவற்றில் ஈடுபடக் கூடாது. இது உயிருக்கே ஆபத்தாக மாறக்கூடும்.
பாழடைந்த அல்லது சிதலமடைந்த கட்டிடங்களுக்கு உள்ளேயோ அல்லது அருகிலோ இருப்பதை தவிர்க்க வேண்டும். பலத்த மழை மற்றும் காற்றின் காரணமாக கட்டிடம் இடிவதற்கு வாய்ப்புண்டு.
புயலானது கரையை கடக்கும் போது பலத்த மழை மற்றும் காற்று வீசக்கூடும் இதனால் போக்குவரத்து சிக்கல்கள் ஏற்படலாம்.
எனவே, அவசர காலத்தில் பயன்படுத்துவதற்காக விரைவில் கெட்டுப்போகாத உணவுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அல்லது ஓரிரு நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைக்க வேண்டும்.
அதுமட்டுமன்றி புயல் கரையைக் கடக்கும்போது பொதுமக்கள் வெளியே நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும். விலைமதிப்புள்ள பொருட்களையும் முக்கியமான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களைப் பத்திரப்படுத்திவிட்டு, பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும்.
அதாவது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது நல்லது. பலத்த மழை மற்றும் காற்றின் காரணமாக மின்சாரம் தடைபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதனால் எண்ணெயில் எரியும் விளக்குகள் மற்றும் மின்கலத்தில் இயங்கும் விளக்குகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
You May Also Like: