ஒவ்வொரு மாதத்திலும் வரும் பரணி நட்சத்திரம் உயர்வானது என்றாலும், கார்த்திகையுடன் பௌர்ணமி இணையும் நாளில் வரும் பரணி மேலும் சிறப்பு வாய்ந்தது.
அமாவாசைக்கு அடுத்தபடியாக முன்னோர்கள் வழிபாட்டிற்கு உகந்தது பரணி நட்சத்திர தினமாகும். எமனை தெய்வமாக நினைத்து வழிபாடு செய்வதற்கும் எமபாதங்களைப் போக்குவதற்கும் கொண்டாடப்படுகின்றது.
திருக்கார்த்திகைத் தீபத் திருவிழாவின் மிகச் சிறப்பு வாய்ந்தது பரணி தீபமாகும். இது பல்லாயிரம் ஆண்டு காலமாக நடைபெற்று வருகின்றது.
பாவங்களைப் போக்கும் பரணி தீபத்தினை ஏற்றி நாம் மனதால் கூட பாவம் நினைக்கக் கூடாது. பிறருக்குத் தீங்கு செய்யவும் நினைக்கக் கூடாது. இதனையே நம் முன்னோர்களும் நமக்கு உணர்த்தியுள்ளனர்.
எனினும் பாவங்கள் அதிகரித்து வரும் கலியுகத்தில் தான் நாம் வாழ்ந்து வருகின்றோம். இத்தகைய பாவங்கள் நிறைந்த இப்புவியில் வாழும் நாம் அறிந்து மட்டுமல்ல அறியாமல் கூடப் பாவங்களைச் செய்வதற்கும் வாய்ப்புக்கள் நிறையவே உள்ளன.
எனவே நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்க திருக்கார்த்திகைக்கு முந்தய நாளான பரணி நட்சத்திரமன்று தீபமேற்றி வழிபட வேண்டும்.
பரணி தீபம் ஏற்றும் முறை
கார்த்திகை தீபத்திற்கு முந்திய நாள் அன்று மாலை 6 மணி வளமையாக ஏற்றுவது போல் நிலை வாசலில் இரண்டு தீபங்களும் அத்தோடு பூஜை அறையில் தனியாக ஒரு தாம்பூல தட்டில் அரிசி, மா கோலமிட்டு புதிதாக வாங்கிய ஐந்து அகல் விளக்குகளை ஒன்றுக்கொன்று பார்த்தவாறு வட்ட வடிவில் விளக்கை ஏற்ற வேண்டும்.
அனைத்து விளக்குகளும் அனைத்து திசை நோக்கி எரியும் என்பதால் திசை கணக்கு கிடையாது. விளக்குகளை பூக்களை கொண்டு அலங்கரிக்கலாம். எண்ணெய்க்குப் பதிலாக நெய் கொண்டு ஏற்றினால் சிறப்பாகும். விளக்கேற்றிய பின்பு சிவபெருமானின் வேண்டி தியானிப்பது கூடுதல் பலன்களை தரும்.
பரணி தீபம் அன்று 5 தீபங்கள் ஏற்றுவதன் தத்துவம் யாதெனில் பஞ்ச பூதங்களுக்கு சமர்ப்பிக்கவே நாம் இந்த ஐந்து விளக்குகளை ஏற்றுகின்றோம்.
அதாவது பஞ்சபூதங்களும் நமது உடலிலும், வெளியிலும் சரியாக இருந்து நமக்கு அருள் செய்ய வேண்டும் என்பதற்காகவும் சிவபெருமானின் பஞ்ச தொழில்களை விளக்குவதாலும் ஐந்து தீபங்கள் ஏற்றுகின்றோம்.
மேலும் சிட்டி விளக்குகளை வீட்டின் வாசல் படிகளிலும் உள்ளே உள்ள வாசல்களிலும் படிக்கு மூன்று வீதம் ஏற்றி வைப்பதும் மரபாகும்.
திருவண்ணாமலை பரணி தீபம்
தமிழ்நாட்டிலுள்ள மிகப்பெரிய கோவில்களில் திருவண்ணாமலைக் கோவிலும் ஒன்றாகும். சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் ஒன்பது கோபுரங்களையும், ஆறு பிரகாரங்களையும், 142 அடி சன்னதிகளையும், 306 மண்டபங்களையும் உள்ளடக்கிய சிறப்புமிகு திருக்கோவிலாகும்.
திருவண்ணாமலையில் பரணி தீபம், அண்வாமலையார் தீபம் (மகா தீபம்), விஷ்ணு தீபம், நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக் கார்த்திகை தீபம் என ஐந்து நாட்கள் தீபம் ஏற்றப்படும். இதில் முதல்நாள் பரணி தீபம் ஏற்றுவர்.
சிறப்பு வாய்ந்த திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருநாளன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் சன்னிதியில் பரணி தீபம் ஏற்றப்படும். ஒவ்வொரு ஆண்டும் தீப ஜோதியாக அருள் பாலிக்கும் பரஞ்சோதியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்வர்.
You May Also Like: