மனித செயற்பாட்டின் ஓர் அங்கமாக வணிகம் உள்ளது. அன்றாட மனிதச் செயற்பாட்டில் வணிகம் இன்றியமையாததாக உள்ளது. இந்த வணிகம் இருக்கும் வரை நுகர்வு என்பது நீடித்திருக்கும். நுகர்வு நீடிக்கும் வரை நுகர்வோரும் இருப்பர்.
உலகமயமாக்கல் செயற்பாட்டின் பின்னர் சந்தைப்படுத்தல் அதிகரித்து வருகின்றது. வணிகச் சந்தை, போட்டி மற்றும், விளம்பர உலகின் நவீனத்துவம் போன்றவற்றின் காரணத்தால் நுகர்வு கலாச்சாரத்தில் இருந்து ஒருவரால் விலகி விட முடியாத நிலை என்பது உருவாகிவிட்டது.
இன்று விளம்பரம், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றால் நமக்கே தெரியாமல் நாம் நுகர்வோராக மாறிவிட்டோம். எனவே இவ்வுலகில் பிறந்த அனைவருமே நுகர்வோர் என்றால் அது மிகையல்ல.
நுகர்வோர் என்றால் என்ன
இந்த மண்ணில் பிறந்த மனிதர்கள் சேவையைப் பயன்படுத்தும் போதோ அல்லது பொருளை வாங்கும் போதோ நுகர்வோர் ஆகின்றனர். எனவே, உலகில் பொருட்களை வாங்குபவர் அனைவரும் நுகர்வோர் ஆவர்.
காசு கொடுத்து ஒரு பொருளையோ, பணியினையோ அல்லது சேவையையோ தன் சொந்த உபயோகத்திற்காகப் பெறும் ஒருவர் நுகர்வோர் எனப்படுவர். சந்தையில் முக்கிய எஜமானர்கள் நுகர்வோராக உள்ளனர். இவர்கள் இல்லையெனில் சந்தை இல்லை என்றே கூறவேண்டும்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்
பொருட்களை வாங்கும் நுகர்வோரை பாதுகாப்பது நுகர்வோர் பாதுகாப்பு சட்டமாகும். மனிதனுக்கு தேவையான பொருட்களை தரமாகவும், சரியான அளவீட்டிலும், உரிய விலையிலும் கிடைக்கக்கூடிய வகையில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் வழிவகை செய்கின்றது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமானது 1964 ஆண்டுகளிலேயே அமெரிக்காவில் அமுலில் இருந்தது. எனினும் இந்தியாவில் 1986 ஆம் ஆண்டிலேயே கொண்டுவரப்பட்டது. அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் டிசம்பர் 24-ம் தேதி தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் “மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்கள்” அமைக்கப்பட்டுள்ளன. மாநில அளவில் மாநில ஆணையமும், தேசிய அளவில் தேசிய ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் உரிமை
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் படி கலப்படம், போலியான பொருட்கள் உள்ளிட்டவைகளுக்கு நுகர்வோர் ஏமாந்து விடாது பாதுகாக்கப்படுகின்றனர்.
உலக அளவில் நுகர்வோர் உரிமைகள் பற்றிப் பேசிய முதல் உலகத் தலைவர் கென்னடி ஆவார். நுகர்வோர் பாதுகாப்பு, அடிப்படை உரிமை, தகவல் அறியும் உரிமை பற்றி இவர் வலியுறுத்தியதுடன், நுகர்வோர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்.
இந்திய நாட்டின் நுகர்வோரின் உரிமைகள் இந்திய சட்டத்தில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. பொருட்களைக் குறித்தும், சேவைகள் குறித்தும் தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் உரிமை நுகர்வோருக்கு உள்ளது.
மேலும் இந்தியாவில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 இன் படி ஆறு வகையான உரிமைகளை நுகர்வோர் பெறுகின்றனர். அவையாவன,
- பாதுகாப்பு சார்ந்த உரிமை
- தகவல் பெறும் உரிமை
- தேர்ந்தெடுக்கும் உரிமை
- கருத்துரைக்கும் உரிமை
- குறைதீர் உரிமை
- நுகர்வோர் விழிப்புணர்வுக்கான உரிமை
இந்தச் சட்டம் அமுலுக்கு வந்தது முதல் 2021 ஆம் ஆண்டு காலம் வரையில் 5,485,267 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. பதிவு செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படும் புகார்கள் 90 நாட்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும்.
You May Also Like: