தேசப்பற்று என்பது ஒருவன் தேசத்தின் மீது கொண்டுள்ள அளவு கடந்த அன்பு ஆகும். அதாவது ஒவ்வொரு மனிதனும் தான், தன்னுடைய குடும்பம், தன்னுடைய உறவுகள், தன்னுடைய இனம், மதம், மொழி, பண்பாடு என்று தான் சார்ந்த தேசத்திலும் அன்பு கொள்ளுதல் தேசப்பற்று ஆகும்.
தேசப்பற்று பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- தேசப்பற்றின் அவசியம்
- சிறந்த தேசப்பற்று உடையவர்கள்
- தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதம்
- மாணவர்களின் தேசப்பற்று
- முடிவுரை
முன்னுரை
தன்னுடைய தேசத்துக்கு எந்த வகையிலேனும் ஏதேனும் சேவை செய்ய வேண்டும் என்ற ஆசையினையும், ஆர்வத்தையும் தூண்டுவதாகவே இந்த தேசப்பற்று காணப்படுகின்றது.
தன்னுடைய சொந்த நாட்டின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக தன்னுடைய நாட்டுக்காக எதையும் செய்ய தயாராகும் நிலையே தேசப்பற்று ஆகும்.
தேசப்பற்றின் அவசியம்
ஒரு நாடு முன்னேற்ற பாதையில் தடம் பதித்து அபிவிருத்தி அடைந்து ஒரு வல்லரசு நாடாக மாறுவது என்பது அரசியல்வாதிகளின் கையிலோ அல்லது தலைவர்களின் கையிலோ அல்ல மாறாக அது அந்நாட்டு மக்களிடமும் அவர்களின் தேசப்பற்றிலுமே தங்கி உள்ளது.
இனம், மதம், மொழி என பிரிந்து இருந்தாலும் தாய் நாடு என்ற ரீதியில் ஒற்றுமையுடன் செயற்பட்டாலே அந்நியர்களின் ஆதிக்கத்தினை எதிர்க்க முடியும்.
நாம் நம்முடைய நாடு என தேசப்பற்றுடன் செயற்படும்போதே சமாதானமும், சகோதரத்துவமும் ஏற்பட்டு அங்கு ஒற்றுமை பிறக்கும்.
சிறந்த தேசப்பற்று உடையவர்கள்
எமது நாட்டின் சுதந்திரத்துக்காக போராடி எமக்கான சுதந்திரத்தை பெற்று தந்தவர்கள் சிறந்த தேசப்பற்று உடையவர்கள் என உதாரணம் கொள்ள முடியும்.
அந்த வகையில் அகிம்சை வழியில் போராடிய மகாத்மா காந்தியடிகள், போர்வழி போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், எழுத்து புரட்சியால் போராடிய மகாகவி பாரதி, ராணி இலட்சுமி பாய், வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் போன்றவர்களை குறிப்பிடலாம்.
தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதம்
இந்த தேசப்பற்றை பல்வேறு வகைகளில் எம்மால் வெளிப்படுத்த முடியும். அந்த வகையில் தேசிய பண்பாடு மற்றும் கலாச்சாரங்களை மதித்து நடத்தல், நாட்டின் நேர்மையான வரிகளுக்காக வரிப்பணம் கட்டுதல், நாட்டின் தேசிய பண்பாட்டுச் சின்னங்களை பாதுகாத்தல், கட்டாய கல்வியை பயிலுதல், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக உழைத்தல் போன்றவற்றை குறிப்பிடலாம்.
மேலும் நாட்டின் எல்லை பகுதிகளில் காவல் நிற்பவர்களுக்கு உதவியாக இருத்தல், நாட்டில் வேலை இல்லாதோரை பணிக்கு அமர்த்துதல் போன்றவற்றின் மூலமும் எம்முடைய தேசப்பற்றினை நாம் வெளிக்காட்டிக் கொள்ள முடியும்.
மாணவர்களின் தேசப்பற்று
தம்முடைய நாட்டுக்காக மாணவர்கள் செய்ய வேண்டிய பணிகள் உள்ளன. இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள் எனவே அவர்கள் தேசப்பற்று கொண்டவர்களாக வளர்ந்தால்தான் நாடு நலம் பெறும்.
நாம் வாழும் சமூகம் அறியாமை, வறுமை, சாதி மத வேறுபாடுகள், மூட நம்பிக்கைகள், தீண்டாமை ஆகிய கொடுமைகளில் சிக்குண்டுள்ளது. இந்த நிலையினை மாற்றி அமைக்க சமுதாயத்தின் மையமாக விளங்கும் மாணவர் சமுதாயமே பணியாற்ற வேண்டும்.
அவ்வாறு அவர்கள் பணி புரிவதற்கு அவர்களிடம் தேசப்பற்று வளர்க்கப்பட வேண்டும். தாய்நாட்டின் எதிர்கால பாதுகாவளாளிகள் மாணவர்கள் சமுதாயமே, என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
முடிவுரை
நம் நாட்டினை அந்நியர்களிடம் இருந்து சுதந்திரம் அடையச் செய்தமைக்கு, சுதந்திர போராட்ட வீரர்களினுடைய நாற்றுப்பற்று தான் காரணமாக அமைந்தது. தாயை நேசிக்கும் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தாய் நாட்டினையும் நேசிக்க வேண்டும் என்பது தலயாயக் கடமையாகும்.
எனவே நம்முடைய இந்திய தேசம் அபிவிருத்தியின் உச்சத்தை தொட வேண்டுமாயின் நாம் அனைவரும் தேசப்பற்றுடன் செயற்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
You May Also Like: