திரைப்படங்களின் நன்மை தீமைகள் கட்டுரை

இன்று திரைப்படங்கள் சமுதாயத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. திரைப்படங்களால் நன்மைகள் இருந்தாலும் பல தீமையான விளைவுகளுக்கும் அடித்தளமாக இருக்கின்றது.

ஒவ்வொருவரும் திரைப்படம் என்பது கலை மற்றும் பொழுதுபோக்கு என்பதையும் நடிப்பவர்களை கலைஞர்கள் என்று புரிந்து கொண்டு இவற்றிற்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும்.

திரைப்படங்களின் நன்மை தீமைகள் கட்டுரை

திரைப்படங்களின் நன்மை தீமைகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. திரைப்படங்களின் வரலாறு
  3. வாழ்வியலில் திரைப்படங்கள்
  4. திரைப்படங்களின் நன்மைகள்
  5. திரைப்படங்களின் தீமைகள்
  6. முடிவுரை

முன்னுரை

மனித வாழ்வானது பல்வேறு கலையம்சங்களுடன் பின்னிப்பிணைந்த ஒன்று. அந்தவகையில் திரைப்படங்களும் சமுதாயத்தில் முக்கிய இடம் வகிக்கிறது.

மக்களை எளிதில் வசப்படுத்தும் ஊடகமாக உலகை ஆக்கிரமித்துள்ள திரைப்படங்கள் பெரும்பாலான மக்களின் பிரதான பொழுது போக்கு அம்சமாகவும் விளங்குகிறது. திரைப்படங்கள் சமூகத்தில் பல்வேறு நேர், எதிர் விளைவுகளை ஏற்படுத்துகிறது.

திரைப்படங்களின் வரலாறு

திரைப்படங்கள் எண்ணங்கள், கதைகள், உணர்வுகள், அழகு ஆகியவற்றை உணர்ச்சிப்பெருக்குடன் பதிவு செய்யப்பட்ட காட்சிப்படமாக தரும் ஒரு கலை ஆகும்.

இவை பொதுவாக மக்களின் பொழுதுபோக்கிற்காக தயாரிக்கப்பட்டு முன்னர் திரையரங்குகளில் திரைகளில் காண்பிக்கப்பட்டு, இப்பொழுது திரையரங்குகள் தவிர தொலைக்காட்சி, குறுந்தட்டு, இணையம் போன்ற ஊடகங்கள் மூலமும் விநியோகிக்கப்படும் படங்களையும், அப்படங்களின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள துறையையும் குறிக்கும் சொல்லாக திரைப்படங்கள் அமைகின்றன.

வாழ்வியலில் திரைப்படங்கள்

இயந்திர உலகில் இயந்திரங்களோடு இயந்திரங்களாக பயணித்து கொண்டிருக்கும் மனிதர்களின் இரசனைக்கு விருந்தளிப்பவையாக திரைப்படங்கள் அமைகின்றன.

சரித்திரம், புவியியல், விஞ்ஞானம், பாரம்பரியம், பக்தி என பலதரப்பட்ட விஷயங்களை தத்ரூபமாக காட்சிப்படுத்துகின்றது.

நல்லதையும், தீயதையும், நாட்டு நடப்புக்களையும் கண்முன்னே காட்சிகளாக கொண்டு வந்து நிறுத்துகிற திரைப்படங்கள் சமூகத்திற்கு பல்வேறு விழிப்புணர்வுக் கருத்துக்களை கூறுவதோடு பொருளாதாரத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது.

ஔவையாரும், திருவள்ளுவரும் நீதி நூல்களை கொண்டு நெறிப்படுத்த முடியாததை, தமக்குப் பிடித்த திரைப்படக் கலைஞர்கள் சொல்லுகிற போது எவ்வித சிந்தனையும் இன்றி அப்படியே ஏற்றுகொள்கிற சமூகமாக இது மாறியுள்ளது.

மனிதனுக்கும் மனிதனுக்குமான பிரச்சினை, மனிதனுக்கும் இயற்கைக்குமான பிரச்சினை, மனிதனுக்கும் அவனது உள்ளுணர்வுக்குமான பிரச்சினை, மனிதனுக்கும் சமூகத்திற்குமான பிரச்சினை எனப் பல விடயங்களை யதார்த்த உணர்வோடும், கற்பனை ஆற்றலுடனும் கதையமைத்து உலக மக்களுக்கு வழங்கும் திரைப்படங்கள் மக்கள் வாழ்வியலோடு ஒருமித்துப் பயணிக்கிறது.

திரைப்படங்களின் நன்மைகள்

எளிய மக்களும் கிணற்றுத்தவளைகளாக அல்லாமல் வெளி உலகத்தையும், பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கை முறையையும் அறிய வாய்ப்பளிக்கிறது.

இதிகாசக்கதைகளையும், இலக்கியங்களையும் எளிமைப்படுத்தி சுவைபட வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகளை அக்கறையோடு எதிர்கால சந்ததிக்கும் வெளிப்படுத்துகிறது.

அத்தோடு திரைப்படங்களிலுள்ள சிறந்த கருத்துள்ள பாடல்கள், பலரது வாழ்க்கையில் ஆறுதலாகவும், சில மாற்றங்களை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்துவதாகவும் நன்னெறிகளை அறிவுறுத்துவதாகவும் இருக்கிறது.

திரைப்படங்களின் நகைச்சுவை இறுக்கமாக இருக்கும் மக்களது மனதின் சோர்வை நீக்கி மகிழ்ச்சியை அளிப்பதோடு சிறந்த கருத்துக்களை எளிமையாக மனதில் பதியவைக்கிறது.

இன்பமும் துன்பமும் கலந்த இந்த வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு பல தடைகளை சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதையும் எத்தடை வரினும் அவற்றை நம்பிக்கையோடு எதிர்கொண்டால் வெற்றி பெறலாம் என்பதையும் சிறந்த கதைக்களத்தை கொண்ட திரைப்படங்கள் மக்கள் மனதில் விதைக்கிறது.

திரைப்படங்களின் தீமைகள்

மனித மனங்களில் விரைவாக ஊடுருவிப் பதியக்கூடிய திரைப்படங்கள் வன்முறைகள், ஆபாசக்கட்சிகள், கொடுமைப்படுத்தல் போன்ற அபாயகரமான காட்சிகளை வைக்கும் போது அவை மக்கள் மத்தியில் எதிர்மறை சிந்தனையை தூண்டி உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

திரைப்படங்களில் காட்டப்படும் நிஜ வாழ்க்கைக்கு முரணான கொள்ளை அடித்தல், கொடூரத்தன்மைகளை வளர்த்தல், பழிவாங்குதல், சமூக விரோத செயல்களில் ஈடுபடுதல் போன்ற காட்சிகளினால் ஈர்க்கப்பட்டு சமூகம் தவறாக வழிநடத்தப்படுகிறது.

முடிவுரை

தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை தன்னகத்தே கொண்டுள்ள திரைப்படங்கள் மனிதாபிமானம் நிறைந்த தன்னம்பிக்கையும் தைரியமும் ஊட்டக்கூடியதாக கலாசார நெறிமுறைகளுக்கு உட்பட்டதான கதைக்கருவுடன் உருவாக்கப்பட வேண்டும்.

மக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவல்ல திரைப்படங்கள் தீய பாதையை விடுத்து சமூகத்துக்கு நன்மை பயக்கும் விடயங்களை வழங்க வேண்டும்.

அத்தோடு நாமும் பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி மனதில் ஊடுருவும் தன்மை கொண்ட திரைப்படங்களில் அப்படியே மூழ்கி விடாது ஆராய்ந்தறிந்து  வாழ்வை வளப்படுத்தும் விடயங்களை சிரமேற்கொண்டு சிறப்புறுவோமாக.

You May Also Like:

அறிவியல் அழிவு கட்டுரை