தாய்ப்பால் பற்றிய கட்டுரை

thaipal katturai in tamil

பத்து மாதம் சுமந்து குழந்தையினை பக்குவமாக பெற்றெடுக்கும் ஓர் தாய், தன்னுடைய இரத்தத்தை பாலாக்கி குழந்தைக்கு ஊட்டுகின்றாள். இந்த தாய்ப்பால் புனிதமானதாக கருதப்படுகின்றது. பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலை ஈடு செய்யும் அளவுக்கு வேறு எந்த உணவு பொருட்களும் இல்லை என்பதே உண்மையாகும்.

தாய்ப்பால் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. இயற்கை தந்த அமுதம் தாய்ப்பால்
  3. தாய்ப்பாலினால் குழந்தைகள் அடையும் பயன்கள்
  4. குழந்தைகளுக்கு எவ்வளவு காலம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்
  5. தாய்ப்பால் புகட்டுவதனால் தாய்க்கு உண்டாகும் நன்மைகள்
  6. முடிவுரை

முன்னுரை

குழந்தை பிறந்தவுடன் கிடைக்க வேண்டிய முதல் பரிசு தாய்ப்பால் ஆகும். அவ்வாறான சிறப்பு வாய்ந்த தாய்ப்பாலினால் தாய் சேய்க்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணமே ஆகஸ்ட் 1 முதல் 7ம் திகதி வரை உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகின்றன.

இயற்கை தந்த அமுதம் தாய்ப்பால்

தாய்ப்பால் என்பது பெண்களிடம் மாத்திரமே உருவாகக்கூடிய ஓர் அமுதமாகும். அதாவது ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் பெண்களிடத்தில் அதிகம் இருப்பதினால் பருவ காலத்தில் பால் சுரப்பிகளின் வளர்ச்சி பெண் பிள்ளைகளுக்கு ஏற்படுகின்றது.

அதேபோல் கற்பகாலம் முழுவதும் ப்ரொஜெஸ்டரோன் என்னும் ஹார்மோன் உச்ச நிலை பெறுவதனால் பால் சுரப்பிகளின் வளர்ச்சி கற்பகாலத்தில் அதிகமாகி பால் சுரக்க தயார் நிலை அடைகின்றது.

இவ்வாறாக பிள்ளை பேறுக்கு பின் ப்ரொலக்டின் எனும் ஹார்மோன் சரியான சமயத்தில் தாயின் இரத்தத்தில் உயர்வதனால் அமுதமான தாய்ப்பால் சுரக்கின்றது.

தாய்ப்பாலினால் குழந்தைகள் அடையும் பயன்கள்

குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கு கொடுக்கக்கூடிய முதலாவது பாலாகிய சீம்பால் குழந்தையின் நோய் தடுப்பு மருந்தாகவே கணிக்கப்படுகின்றது.

இவ்வாறாக தாய்ப்பாலின் மூலம் குழந்தைக்கு கிடைக்க கூடிய நோய் எதிர்ப்பு மூலக்கூறுகள் குழந்தையின் உணவு குழாயில் பாதுகாப்பு கவசமாக படிந்து விடுகின்றன.

இதனால் உணவு சார்ந்த அலர்ஜி ஏற்படும் வாய்ப்பு மிக குறைந்த அளவிலேயே காணப்படும்.

மேலும் கிருமித் தொற்றால் ஏற்படும் வயிற்றுப்போக்கு, காது வலி, மூளை காய்ச்சல், சளி போன்றன வராமல் தடுக்கவும் அப்படி வந்தால் அதன் தீவிர தன்மையை குறைவாகவும் குழந்தைகளுக்கு உதவுவதாகவே இந்த தாய்ப்பால் காணப்படுகின்றது.

குழந்தைகளுக்கு எவ்வளவு காலம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்

தாய்ப்பால் குழந்தைகளின் வாழ்நாள் ஆரோக்கியத்தை உறுதி செய்வதாக காணப்படுகின்றமையினால், குழந்தை பிறந்ததில் இருந்து முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.

பின்னர் இரண்டு வருடங்கள் வரை தாய்ப்பாலுடன் சேர்த்து வேறு உணவுப் பொருட்களையும் பிள்ளைகளுக்கு வழங்குவது சிறப்பானதாகும்.

தாய்ப்பால் புகட்டுவதனால் தாய்க்கு உண்டாகும் நன்மைகள்

குழந்தைகளுக்கு தாய்மார்கள் பால் ஊட்டுவதன் மூலம் பேறு காலத்தின் மனச்சோர்வு குறைவடைவதோடு, மார்பக புற்றுநோயின் வாய்ப்பும் குறைவடைகின்றது. மேலும் உடல் ஹார்மோன் நிலையில் சமநிலை ஏற்படுவதனால் கர்ப்பப்பை பலமடைந்து சீரான மாதவிடாயை மீண்டும் ஏற்பட வாய்ப்பளிக்கும்.

இன்னும் தாய்ப்பால் ஊட்டுவதனால் தாய் உண்ட உணவில் உள்ள கலோரி குழந்தைக்கும் ஊடுகடத்தப்படுவதனால் பிரசவ காலத்தில் அதிகரித்த உடல் எடையை குறைக்க உதவும்.

இரத்த அழுத்தத்தை சீராக பேணுதல் மற்றும் மார்பகப் பகுதியில் ஏற்படும் இரத்த நாளப் புடைப்பு உண்டாகாமல் தடுத்தல் போன்ற நன்மைகளை தாய்மார்களுக்கு தாய்ப்பால் ஊட்டுதல் என்பது வழங்குவதாக ஆய்வுகளின் முடிவுகளில் இருந்து தெரிய வந்துள்ளன.

முடிவுரை

தற்காலத்தில் வாழக்கூடிய பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதனை பெரும்பாலும் விரும்புவதில்லை. அதாவது தங்களுடைய அழகு குறைவதற்கான காரணமாக இதனை எண்ணுகின்றனர்.

ஆனால் ஆய்வுகளின் படி தாய்ப்பாலூட்டுவது உடல் எடையை எவ்வாறு குறைக்கின்றதோ, அதேபோல ஹார்மோன்களை அதிகளவில் சுரக்கச் செய்து முகப்பொலிவையும், அழகையும் கூட்டுகின்றது என கூறப்படுகின்றது.

ஓர் தாய்க்கும் சேய்க்கும் இடையிலான உணர்வு ரீதியான தொடர்பை வாழ்நாள் முழுவதுமே வலுப்படுத்தும் வல்லமை இந்த தாய்ப்பாலுக்கு உண்டு என்பதனால், அதன் மகிமைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

You May Also Like:

பெண்ணே நீ பெருமை கொள் கட்டுரை

உணவை வீணாக்காதீர்கள் கட்டுரை