தவறான விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ளுதல் கட்டுரை

மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றக்கூடிய விளம்பரங்களை நாம் தவறான விளம்பரங்கள் என குறிப்பிட முடியும். அதாவது தவறான விளம்பரங்கள் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை வழங்க கூடியதாகவே காணப்படும்.

இவ்வாறான போலியான விளம்பரங்களை நம்புவதன் மூலம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இவற்றினை புரிந்து கொண்டு நாம் சரியான, தவறான விளம்பரங்களை விளங்கி செயற்பட வேண்டும்.

தவறான விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ளுதல் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • தவறான விளம்பரங்கள் என்றால் என்ன
  • தவறான விளம்பரங்களினால் ஏற்படும் பாதிப்புகள்
  • தவறான விளம்பரங்களுக்கு எதிராக எங்கே முறைப்பாடு செய்வது
  • தவறான விளம்பரங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள்
  • முடிவுரை

முன்னுரை

விளம்பரங்களின் ஆரம்பமும், உருவாக்கமும் தொன்மை காலத்துக்கு உரியதாக காணப்பட்ட போதும், தற்கால உலகம் விளம்பர உலகமாகவே மாறிவிட்டது. நாம் அன்றாடம் கொள்வனவு செய்யும் பொருட்களை பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும் ஓர் முக்கிய வழிமுறையாகவே இந்த விளம்பரங்கள் காணப்படுகின்றன.

எனினும் தற்காலத்தில் நுகர்வுச் சந்தையில் விபரீதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையிலும் விளம்பரங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த வகையில் தவறான விளம்பரங்கள் பற்றி அறிந்து கொள்வது எமது கடமையாகும்.

தவறான விளம்பரங்கள் என்றால் என்ன

ஒரு சேவை அல்லது ஒரு பொருள் தொடர்பான முழுமையாற்ற தகவல்களை அல்லது சந்தேகத்துக்கு இடமான தகவல்களை தரும் விளம்பரங்களை தவறான விளம்பரங்கள் எனலாம்.

அதாவது தவறான விளம்பரங்களில் குழப்பகரமான மற்றும் தெளிவற்ற தகவல்கள் காணப்படுவதோடு, விளம்பரத்தில் காட்சிப்படுத்துவது போல் அல்லாமல் சேவைகள், அம்சங்கள், தரம், நிறை மற்றும் விலை என்பவற்றில் தவறான கூற்றுக்களை கொண்டமைந்ததாகவும் காணப்படும்.

இவ்வாறு நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை கொண்ட விளம்பரங்களே தவறான விளம்பரங்கள் எனப்படுகின்றன.

தவறான விளம்பரங்களினால் ஏற்படும் பாதிப்புகள்

தற்கால யுகம் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி கண்டுள்ளமையினால், அதிகமான போலியான, தவறான விளம்பரங்கள் வலைத்தளங்களிலே பகிரப்படுகின்றன. இவ்வாறான தவறான விளம்பரங்களை நம்பி மக்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாகுவதோடு, பணமும் வீண் விரயமாகின்றன.

அத்தோடு தவறான பொருட்களினால் உடல் நலத்துக்கும் பாதிப்பு ஏற்படுவதோடு, கேடு விளைவிக்கும் நோய்களும், உபாதைகளும் ஏற்பட்டு உடல் பலம் குன்றி போவதனையும் காணமுடிகின்றது. இணையதளங்களில் இவ்வாறு வரும் தவறான விளம்பரங்களை கண்மூடித்தனமாக நம்பாமல் சிந்தித்து செயல்படுவது அவசியமானதாகும்.

தவறான விளம்பரங்களுக்கு எதிராக இங்கே முறைப்பாடு செய்வது

ஒவ்வொரு விளம்பரமும் இந்திய விளம்பர தர நிர்ணய ஆணையத்தின்(ASCI) விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் தயாரிக்கப்பட வேண்டும்.

விளம்பரங்கள் உண்மைகளை நேரடியாக வெளிப்படுத்துவதோடு பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமையக்கூடாது என்பதே இந்திய விளம்பர தர நிர்ணய ஆணையத்தின் கொள்கையாகும்.

எனவே போலியான வாக்குறுதிகளையும் தவறான செய்திகளையும் தரும் விளம்பரங்களுக்கு எதிராக நாம் விளம்பர தர நிர்ணய ஆணையத்திடம் எமது புகார்களை பதிவு செய்யலாம்.

தவறான விளம்பரங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறை

ஒரு விளம்பரத்தில் சொல்லப்பட்ட சேவையோ அல்லது வாக்குறுதியோ நிறைவேற்றப்படவில்லை என அறிந்தால் நுகர்வோர் விவகாரத் துறைக்கு புகார் அளிக்க முடியும் இதனை இணையதளம் மூலமாகவும் தெரியப்படுத்தலாம்.

தவறான விளம்பரங்களுக்கு எதிராக தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம்( ASCI) இந்திய விளம்பர தர நிர்ணய ஆணையத்திடம் உள்ளமையினால் அவர்களுடைய வாட்சப் வழியாகவும், மின்னஞ்சல் வழியாகவும் எமது முறைப்பாடுகளை முன் வைக்க முடியும்.

இவ்வாறான எமது முறைப்பாடுகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை எனின் தேசிய, மாநில மற்றும் மாவட்ட நிலைகளில் உள்ள நுகர்வோர் குறை தீர்ப்பு மையங்களை அணுகி எமது முறைப்பாடுகளுக்கு எதிரான தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறாக தவறான விளம்பரங்களில் இருந்து பாதுகாப்பு பெற முடியும்.

முடிவுரை

விளம்பரங்கள் என்பது சேவைகள் தொடர்பாகவும், பொருட்கள் தொடர்பாகவும் மக்களுக்கு உண்மையான தகவல்களை வழங்கக் கூடியதாகவே அமைய வேண்டும். இதனால்தான் விளம்பரங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என அரசும் நிர்ணயம் செய்துள்ளது.

அந்த விதிமுறைகளை பின்பற்றி விளம்பரங்கள் விளம்பரப்படுத்தப்படுமாயின் நுகர்வோருக்கு அது உதவியாக அமையும். ஆனால் தற்காலங்களில் தவறான விளம்பரங்கள் பரவலாகவே பகிரப்பட்டு வருகின்றன.

எனவே நாம் ஒவ்வொருவரும் தவறான விளம்பரங்கள் தொடர்பான விழிப்புணர்வுடன் செயல்படுவோமாயின், இந்த தவறான விளம்பரங்களினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து எம்மைக் காத்துக் கொள்ள முடியும்.

You May Also Like:

நுகர்வோர் மன்றம் கட்டுரை

நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய கட்டுரை