தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியவர் யார் | மனோன்மணீயம் பெ. சுந்தரனார் |
தமிழ்த்தாய் வாழ்த்து இடம் பெற்ற நூல் | மனோன்மணீயம் |
தமிழ்த்தாய் வாழ்த்து
“நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடர்நல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!”
தமிழ்த்தாய் வாழ்த்து அறிமுகம்
இந்தியாவில் உள்ள மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாக கொண்டுள்ள இடங்களில் பாடப்படும் வாழ்த்துப் பாடலே தமிழ்த்தாய் வாழ்த்து ஆகும். இந்த வாழ்த்துப் பாடல் தமிழ்த்தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்தும் விதமாக எழுதப்பட்டுள்ளது.
இத்தகைய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் அரசு விழாக்கள், பாடசாலைகளில் காலையில் தினமும் இறைவணக்க கூட்டம் ஆகிய நிகழ்வுகளில் ஆரம்பத்தில் பாடப்படும்.
இவ்வாறு தமிழ் நாட்டு அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலினை மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பவர் எழுதினார். இவர் 1891 இல் எழுதிய நூலான மனோன்மணீயம் என்ற நூலில் பாயிரத்தில் தமிழ்த் தெய்வ வணக்கம் எனும் தலைப்பிலுள்ள ஒரு பகுதியே இந்த பாடலாகும்.
மனோன்மணீயம் பெ. சுந்தரனார் வரலாறு
சுந்தரனார் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் மற்றும் மாடத்தி அம்மாள் தம்பதியினருக்கு மகனாக 1855 ஆம் ஆண்டு பிறந்தார்.
சுந்தரனார் தன்னுடைய இளம் வயதில் பல தேவாரங்கள், திருவாசகங்கள் மற்றும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றுத் தேர்ந்தார்.
இவருடைய தமிழ் ஆசிரியர் நாகபட்டினம் நாராயணசாமி ஆவார். சுந்தரனார் கல்வியில் சிறந்து விளங்கியது மட்டுமல்லாது 1876 இல் B.A தேர்வில் வெற்றி பெற்றார். பின்னர் 1877இல் சிவகாமி அம்மாள் என்பவரைத் திருமணம் செய்தார்.
மனோன்மணீயம் பெ. சுந்தரனார் பணிகள்
பல துறைகளில் சுந்தரனார் பணி ஆற்றியுள்ளார். 1877இல் இவருடைய ஆசிரியப்பணி ஆரம்பித்தது.
திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்க் கல்விச் சாலையில் இரண்டு ஆண்டுகள் தலைவராகவும் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியராகவும் பின்னர் தத்துவத்துறை பேராசிரியராகப் பணி புரிந்த ஹார்வித் துரையின் ஓய்வின் பின்னர் அவருடைய பதவியை ஏற்றுக் கொண்டு அப்பணியில் இறுதிவரை திறம்பட செயற்படுத்தினார்.
சைவப் பிரகாச சபை எனும் சமய அமைப்பை திருவனந்தபுரத்தில் உருவாக்கி அந்த அமைப்பில் பல தரப்பட்ட சமயத் தொண்டுகளையும் ஆற்றினார். இவர் F.M.U, S.M.R.A.S, F.R.H போன்ற பட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
1891இல் மனோன்மணீயம் என்ற நூலை எழுதியுள்ளார். சுந்தரனாருடைய ஞான ஆசிரியர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் ஆவார். மனோன்மணீயம் என்ற நூலில் சுந்தர முனிவர் என்ற பாத்திரம் உருவாக காரணம் அவருடைய ஞான ஆசிரியர் ஆவார்.
நூற்றொகை விளக்கம், திருவிதாங்கூர் பண்டை மன்னார் கால ஆராய்ச்சி, கல்வெட்டு ஆராய்ச்சி, திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி, பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வு ஆங்கிலத்தில் கிறிஸ்தவக் கல்லூரி இதழில் வெளியிட்டமை போன்றன இவருடைய இலக்கியப் பணிகள் ஆகும்.
சுந்தரனார் தன்னுடைய 42ஆவது வயதில் 1897 ஏப்ரல் 26 இறைவனடி சேர்ந்தார்.
You May Also Like: