எமது தாய் மொழி தமிழ் என்பதன் பொருள் இனிமை. உலகில் காலத்தால் மிக மூத்த மொழிகள் பலவுள்ளன அவற்றுள் தமிழ் மொழி முக்கியமானது.
தமிழ் மொழியின் சிறப்பு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- தமிழ் மொழியின் அறிமுகம்
- தமிழ் புலவர்களின் மதிப்பு
- தமிழ் மொழியின் விரிவு
- பண்டைக்கால தமிழ் சங்கங்கள்
- தமிழ் தாயை பரப்பியவர்கள்
- முடிவுரை
தமிழ் மொழியின் அறிமுகம்
தமிழ் மொழி பிறந்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆகியும் இளமையும், எழிலும் குன்றாமல் இருந்து வருகின்றது. தமிழ் மொழி இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் வாழ்ந்த மக்களிடையே பெருமளவு வழங்கி வந்தது.
தமிழ் புலவர்களின் மதிப்பு
தமிழ் நாட்டைப் பண்டை நாளில் சேர, சோழ, பாண்டியர் எனும் முடியுடைய மூவேந்தர் ஆட்சி புரிந்து வந்தனர். அவர்களின் கீழ், குறு நில மன்னர்களும் வேளிர்களும் அதிகாரம் செலுத்தினர்.
இவர்கள் தமிழ் மொழியை வளர்ப்பதில் அரும் பெரும் பாடுபட்டனர். தமிழ் மொழியைக் கற்று உணர்ந்த பெரியோர்களை பொன்னும், பொருளும் தந்துப் போற்றினர். புலவர்களைப் பாதுகாத்தலில் பெருமை கொண்டனர்.
தமிழ் மொழியின் பிரிவுகள்
தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. இயற்றமிழ் இலக்கணத்துடன் கூடியது. இசைத்தமிழ் இசையுடன் இயைந்தது. நாடகத்தமிழ் கதையும் இசையும் கூத்தும் கலந்து வருவது.
பண்டைக்கால தமிழ் சங்கங்கள்
பண்டைத்தமிழ் மன்னர்கள் மூன்று சங்கங்களை அமைத்தனர். அவை முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்பன ஆகும். சங்கங்கள் பாண்டி நாட்டு மதுரை மாநகரில் இருந்தன.
இச்சங்கங்களில் மன்னர்களும், கடவுளரும், புலவர்களும் உறுப்பினர்களாய் இருந்தனர். பல பல நூல்களை இயற்றினார்கள், ஆராய்ந்தார்கள். நூலின் தரத்தை அறிய சங்கப்பலகை போன்ற அமைப்பும் இருந்தது.
கடைச் சங்கப் புலவர்கள் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளின் முன் வாழ்ந்தனர். அவர்கள் படைத்த நூல்களுள் சில இந்நாளிலும் கிடைக்கின்றன. பல அழிந்தொழிந்தன.
தமிழ் தாயை பரப்பியவர்கள்
தமிழ் நூல் பரப்பு மிகவும் பரந்துப்பட்டது. திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பெரியபுராணம், தேவாரம், திருவாசகம், திவ்வியபிரபந்தம் என்பன அவற்றுள் சிலவாகும்.
பாரதியார், ”யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் எங்காயினும் கண்டதில்லை” என்று அறுதியிட்டு உரைத்துள்ளார்.
மிகப் பிற்காலத்தே நாவலர் பெருமான், பாரதியார் போன்ற சான்றோர் பலர் தோன்றினர். தமிழ் மொழிக்கு அரும் பெரும் தொண்டு புரிந்தனர்.
”நல்லூர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல் சொல்லு தமிழ் எங்கே” என்று சொல்லும் அளவிற்கு நாவலரின் தொண்டு அமைந்திருந்தது. பாரதியார் புதுமைக்குப் புரட்சிக்கு வழி சமைத்தார்.
முடிவுரை
இந்நாளில் அரசும், பல்கலைக்கழகங்களும், ஆதீனங்களும், தமிழ் மன்றங்களும், கல்வி நிறுவனங்களும் பிறவும் தமிழ் மொழியைப் பேணுவதில் ஈடுபட்டு உழைத்து வருகின்றன.
தமிழ் கற்று வல்ல சான்றோர் பலர் அவற்றுடன் இணைந்து அன்னை மொழிக்கு அயராது சேவை செய்து வருகின்றனர்.
தமிழ் எங்கள் உயிராகும். எளிமை, இனிமை, தொன்மை படைத்த தமிழ் மொழியைச் சான்றோர் தமிழ்த்தாய் என்றும், தமிழ் தெய்வம் என்றும் போற்றுவர்.
எங்கள் தாய், தமிழ் பேசும் பல கோடி மக்களின் இதயங்களில் இருந்து நல்லாட்சி புரிந்து வருகின்றாள். வாழ்க தமிழ் அன்னை!
You May Also Like: