தமிழர்களின் தொன்மை குடிகளான ஆயர்களின் மரபு வழி வந்த தொன்மை வாய்ந்த விளையாட்டுக்களால் ஒன்றாக இன்று வரை பாரம்பரியமாக விளையாடும் விளையாட்டு ஜல்லிக்கட்டு ஆகும்.
ஜல்லிக்கட்டு பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- வரலாறு
- ஜல்லிக்கட்டு பெயர் காரணம்
- ஜல்லிக்கட்டின் வகைகள்
- ஜல்லிக்கட்டுக்கு எதிரான பிரச்சினைகள்
- முடிவுரை
முன்னுரை
தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்தமான விளையாட்டு ஆகும். இது ஏறு தழுவல், மஞ்சு நீராட்டு, ஏறு கோள், மாடு பிடித்தல், பொல்லெருது பிடித்தல் மற்றும் ஜல்லிக்கட்டு என பலவாறு அழைக்கப்படுகிறது.
இன்றைய நாட்களில் ஜல்லிக்கட்டு பொங்கலுக்கு மறுநாளான மாட்டுப்பொங்கல் தினத்தின் அன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது.
வரலாறு
ஜல்லிக்கட்டு(ஏறு தழுவல்) என்பது தற்காலத்தில் உருவாகிய விளையாட்டு அல்ல. இது பாரம்பரியமாக ஆரம்பகால தொடக்கம் இன்று வரை சிறப்பாக விளையாடப்படும் விளையாட்டாக காணப்படுகின்றது.
பழந்தமிழரின் வாழ்க்கை காதலையும் வீரத்தையும் அடிப்படையாகக் கொண்டே காணப்பட்டது. இதில் வீரத்தை வெளிப்படுத்தும் நிகழ்வாக ஏறு தழுவல் காணப்படுகிறது.
ஐந்திணைகளில் ஒன்றான முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன மக்களில், பெண்கள் காளையை அடக்குபவனையே தனது மணவாளனாக தேர்வு செய்யும் முறை காணப்பட்டது. இதனை எட்டுத்தொகை நூல்களில் கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை பாடல்களிலே சிறப்பாக கூறப்பட்டுள்ளது.
இது வேட்டையிலும் போரிலும் விலங்குகளை அடக்கம் பயிற்சியாகவும் கருதப்படுகிறது. அத்துடன் ஆயர் குலத்தவர்கள் தான் ஏறு தழுவுதலை வாழ்வியல் பண்பாடாக கருதி செம்மைப்படுத்தி இருக்கின்றனர்.
ஜல்லிக்கட்டு பெயர் காரணம்
ஜல்லிக்கட்டு என்ற பெயர் தற்காலத்தில் உருவான பெயர் ஆகும். இது ஆரம்ப காலத்தில் ஏறு தழுவல், மஞ்சுவிரட்டு என அழைக்கப்பட்டது.
சல்லி என்பது விழாவின்போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகின்ற வளையத்தினை குறிக்கும். புளியங்கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் அன்று தொடக்கம் இன்று வரை பழக்கத்தில் உள்ளது.
மேலும் 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தல் இருந்த சல்லிக்காசு என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டி விடப்படும் பழக்கம் இருந்தது. மாட்டை அடக்கும் வீரருக்கு அந்த பண முடிப்பு சொந்தமாகும்.
இந்த பழக்கம் பிற்காலத்தில் சல்லிக்கட்டு என்ற மாறியது. பின்னர் பேச்சு வழக்கில் அது திரிபடைந்து “ஜல்லிக்கட்டு” என்ற பெயர் உருவாகியது.
ஜல்லிக்கட்டின் வகைகள்
ஜல்லிக்கட்டு நிகழ்வானது தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு விதமாக சிறப்பாக நடைபெறுகின்றது. இவை நடைபெறும் இடங்களைப் பொறுத்து வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது.
அவையாவன வேலி ஜல்லிக்கட்டு, வாடிவாசல் ஜல்லிக்கட்டு, வடம் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு என பல வகைகளில் இது விளையாடப்படுகிறது.
விளையாடப்படுகின்ற மைதானங்கள், விதிமுறைகள், மாடு அவிழ்த்து விடப்படும் முறைகள் என்பன ஒவ்வொரு பிரதேசத்திற்கும் வேறுபட்டவையாக காணப்படுகின்றன.
ஜல்லிக்கட்டுக்கு எதிரான பிரச்சினைகள்
ஜல்லிக்கட்டு நிகழ்வின் போது மாடுகளை இளைஞர்கள் அடக்க முற்படுகின்ற போது தேவையற்ற காயங்களும், உயிரிழப்பும் ஏற்படுவதாக கருதி இந்திய விலங்கு நல வாரியம், பீட்டா(PETA) இந்திய நீல சிலுவை சங்கம் போன்ற அமைப்புகள் ஜல்லிக்கட்டை தடை செய்யக்கோரி இந்தியா நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்தது.
இது இந்திய விலங்கு வகை தடுப்புச் சட்டம் 1960 இனை ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் மீறுகிறது என்பது இவர்களது கருத்தாக காணப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் தொடர்ந்து நீதிமன்றங்களில் வழக்காடி வந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெற நீதிமன்றங்கள் அனுமதி வழங்கியது. 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் மாணவர்களும் பொதுமக்களும் மற்றும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களும் பல நாட்களாக போராட்டங்களை நடத்தினர்.
முடிவுரை
தமிழர்களின் சிறப்பு பண்டிகளில் ஒன்றான தைத்திரு நாளுக்காக அடுத்த நாள் சிறப்பாக கொண்டாடப்படுகின்ற ஜல்லிக்கட்டானது தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும்.
தமிழரின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விளையாட்டாகவும் காணப்படுகிறது. இது தற்காலத்தில் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டும் இந்தியாவின் பல இடங்களில் சிறப்பாக நடைபெறுகிறது.
You May Also Like: