சிவபெருமானின் முதல்வராக காணப்படும் முருகப்பெருமான் அசூரர்களுக்கு எதிராக புரிந்த போர்களுள் சிறப்பாக போற்றப்படும் போராக சூரசம்ஹாரம் எனும் போர் காணப்படுகிறது.
சூரபத்மன் என்னும் அசுரனுக்கு எதிராக ஐந்து நாட்கள் போர் புரிந்து ஆறாவது நாள் வெற்றிகரமாக அவனை கொன்றழித்த நிகழ்வாக காணப்படுகிறது. இதன் காரணமாகவே கந்த சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் எனும் நிகழ்வு சிறப்பாக அனைத்து ஆலயங்களிலும் நடைபெறுகிறது.
சூரபத்மன்
தந்தை :- காசியப்ப முனிவர்
தாய் :- மாயை
சகோதரர்கள் – சிங்கமுகன், தாரகன்
சூரபத்மனும் அவனது சகோதரர்களும் தமது குலகுருவான சுக்கிலாச்சாரியாரிடம் உபதேசம் பெற்று கடும்தவம் செய்தனர். தவத்தின் பலனாக 1008 அண்டங்களை ஆட்சி செய்யும் வரத்தை பெற்றனர்.
மேலும் சூரபத்மன் தனக்கு சாகா வரம் வேண்டும் என்று சிவனை நோக்கி தவம் இருந்தான். சிவபெருமான் “பிறந்தவன் என்றாவது ஒருநாள் மடிந்தே தீர வேண்டும் என்பது விதி அதை எவராலும் மாற்ற இயலாது உனக்கு எந்த வகையில் அழிவு வரவேண்டும்” என்று வினவினார்.
சூரபத்மன் ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்தே ஓர் உயிரானது தோன்றுகிறது. எனவே, “பெண்ணின் வயிற்றில் பிறக்காத ஒரு பிள்ளையால் தான் எனக்கு இறப்பு நிகழ வேண்டும்.” என்று புத்திசாலித்தனமாக வரத்தை சிவபெருமானிடம் கேட்டு பெற்றுக் கொண்டான்.
வரங்களைப் பெற்ற மமதையில் சூரபத்மனும் அவனது சகோதரர்களும் உலகை அச்சுறுத்த தொடங்கினார்கள். சூரியன், சந்திரன், அக்னிதேவன், குபேரன் முதலிய தேவர்கள் அனைவரும் அசுரர்களின் பணியாட்களாக மாறினார்.
இந்திரதேவன் பாதாளம் சென்று மறைந்து கொண்டான். அசுரர்களின் கொடுமைகளை தாங்க இயலாமல் தேவர்கள் அனைவரும் பிரம்மதேவனிடம் சென்று தமது நிலையை கூறி வருந்தினர்.
“சூரபத்மனை அழிக்க சிவபெருமானால் மாத்திரமே முடியும் அதனால் அவரிடம் சென்று முறையிட்டால் கட்டாயம் விடுதலை கிடைக்கும்.” என்றார் பிரம்மா. தேவர்களும் கைலாயம் சென்று சிவபெருமான் முறையிட்டனர்.
முருகப்பெருமான்
சூரபத்மனை அழிப்பதற்காக, சிவபெருமான் தன்னுடைய தற்புருடன், அகோரம், வாமதேவம், சத்தியோபாதம், ஈசானம், அகமுகம் ஆகிய ஆறு முகங்களில் இருந்து ஆறு தீப்பொறிகளை உண்டாக்கி சரவணாப் பொய்கையில் வீழச்செய்கிறார்.
அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு திருக்குழந்தைகளாக மாறுகின்றன. இது நடந்தது வைகாசி மாதத்தில் விசாக நாளில் ஆகும்.
ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி வளர்க்கிறார்கள். இந்த கார்த்திகேயனைக் காண சிவபெருமான் உமையம்மையோடு சரவணப் பொய்கைக்கு வருகிறார்.
அங்கு அம்மை குழந்தைகள் அறுவரையும் சேர்த்து எடுத்து அணைக்கிறாள். தன் மார்பகத்தில், ஆறு குழந்தைகளும் சேர்ந்து ஆறுமுகத்தோடு கூடிய ஒரே பிள்ளையாக மாறுகிறான். கந்தன் எனப் பெயர் பெறுகிறான். ஆறுமுகன் என்று எல்லோராலும் அருமையாக அழைக்கப்படுகிறான்.
சூரபத்மனுக்கு எதிரான போர்
தேவகுரு, பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றை அறிந்த முருகப்பெருமான் தனக்கு தேவையான படைகளை திரட்டிக்கொண்டும்,
தனது திருக்கரங்களில் அவரது அன்னையான ஆதிபராசக்தி என்று அழைக்கப்படும் உமையம்மை வழங்கிய வேலை ஏந்தி கொண்டு சூரபத்மனுக்கு எதிராக போர் புரிய நினைத்த முருகன் முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான்.
தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், “பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் காக்க யாராலும் முடியாது.” என்று வீராவேசமாகக் கூறினான்.
உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப் பெருமானை சூரனுடன் போர் புரிய அனுப்பினர். சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். அங்கே செல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால், உலகினை ஆள வந்த முருகனுக்கு இது சாதாரண விஷயம்.
அவர் அந்த நகரை அடைந்தார். சூரன் அவரைப் பார்த்து ஏளனம் செய்தான். முருகன் அசரவில்லை. தன் உருவத்தைப் பெரிதாக்கி அவரைப் பயமுறுத்தினான். அதன் மீது சக்தி வாய்ந்த ஏழு பாணங்களை எய்தார் முருகன்.
உடனே அவன் மகாசமுத்திரமாக உருமாறினான். மிகப்பெரிய அலைகளுடன் முருகனைப் பயமுறுத்திப் பார்த்தான். உடனே நூறு அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார் முருகன். கடல் பயந்து பின் வாங்கியது.
பின்னர், மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான். முருகப்பெருமான் தன் தாயிடமிருந்து ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதன் ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார்.
சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பினான். அதற்காகக் கடற்கரையில் திருச்செந்தூர் கோவில் எனும் ஆலயத்தை அமைத்தனர்.
இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தைக் காணலாம். இந்த திருச்செந்தூர் ஆலயத்தில் ஆண்டுதோறும் சூரசம்ஹார நிகழ்வானது வெகு விமர்சையாக நடைபெறுகின்றது.
You May Also Like: