சுகாதாரம் என்றால் என்ன

sugatharam in tamil

மனிதனானவன் உடல் மற்றும் உள ரீதியாக நலமாக வாழ வேண்டும். நலமான வாழ்வின் மூலமே ஒருவனின் வாழ்வு சிறப்பாக காணப்பட முடியும். அந்த வகையில் நல வாழ்விற்கு வழியமைப்பதே சுகாதாரமாகும்.

சுகாதாரமாக வாழ்வது என்பது அனைவருடைய கடமையாகும். இதன் மூலமாகவே நோயற்ற சிறந்த வாழ்கையினை அனைவராலும் வாழ முடியும். உடலின் தூய்மையினை பராமரிப்பதற்கு சுகாதாரமானது வழிவகுக்கின்றது.

சுகாதாரம் என்றால் என்ன

சுகாதாரம் என்பது ஆரோக்கியத்தை பேணுவதற்கும், நோய்கள் பரவுவதை தடுப்பதற்கும் உதவும் நிலமைகள் மற்றும் நடைமுறைகளை குறிக்கின்றது. நம்மை மட்டும் சுத்தமாக வைத்திருப்பது அல்ல நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பதை சுகாதாரம் எனலாம்.

மேலும் நலம் மற்றும் நலமான வாழ்வு கருதி ஒரு சமூகத்தினால் பேணப்படும் பழக்கவழக்கங்களையும் சுகாதாரம் எனலாம்.

சுகாதாரத்தின் முக்கியத்துவம்

சிறந்த ஆரோக்கியமான உடல் நலத்திற்கு சுகாதாரமானது முக்கியமானதாக கருதப்படுகின்றது. சுத்தம் மற்றும் சுகாதாரம் இல்லாவிடின் இலகுவாக நோயாளியாகி விடுவோம். நல்ல சுகாதாரம் என்பது மிகப்பெரிய வரமாகும்.

அந்த வகையில் சுத்தமான காற்று, உணவு கட்டுப்பாடு, தினமும் உடற்பயிற்சி செய்தல் மற்றும் ஒழுங்கான ஓய்வு போன்றவற்றினை நாம் கடைப்பிடிப்பதன் மூலமே சுகாதாரமான வாழ்வினை வாழ முடியும்.

சுகாதாரத்தின் நன்மைகள்

நாம் தினமும் உடற்பயிற்சி செய்தல், நடத்தல், ஓடுதல் போன்றவற்றை மேற்கொள்வதோடு சுகாதாரமான ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் உண்பதனால் நோயற்ற சுகாதாரமான வாழ்வை வாழ முடியும்.

ஒரு குடும்பத்தில் ஒருவர் நோயாளியாக இருந்தால் அது அக் குடும்பத்தையே பாதிக்கும். ஆகவே நாம் சுகாதாரமாக இருந்தால் நம்மை நம்பி இருக்கின்ற குடும்பம், பிள்ளைகள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் போன்றவர்களும் சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள்.

இன்று சுகாதாரமற்ற உணவு பழக்கவழக்க முறையின் காரணமாக பல்வேறு நோய்கள் இன்றைய சமூகத்தினரை பாதிப்படையச் செய்கின்றது. சுகாதாரமான முறையில் உணவுப்பழக்கவழக்கங்களை மேற்கொள்வதினூடாக சிறந்த வாழ்க்கையினை வாழலாம்.

சுகாதாரமும் நல்வாழ்வும்

ஒவ்வொரு மனிதர்களுக்கும் இருக்க வேண்டிய எதிர்பார்ப்பே நாம் நலமாக வாழ வேண்டும் என்பதாகும். சுகாதாரம் என்பது மனிதனுடைய உடல் சார்ந்த ஆரோக்கியம் மற்றும் மனம் சார்ந்த ஆரோக்கியம் என்பன தொடர்பானதாகும்.

அந்தவகையில் ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ணல், நிம்மதியாக உறங்குதல், மகிழ்ச்சியான குடும்பம், தரமான சுகாதார சேவைகளை வழங்கும் வைத்தியசாலைகள் என இவை அனைத்தும் கிடைக்கப் பெறுவதே சிறந்த நல்வாழ்வாகும்.

ஒவ்வொரு பிரஜைக்கும் நல்வாழ்வை வழங்குவது என்பது அரசங்கத்தினுடைய கடமையாகும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அனைத்து மக்களுக்கும் இவை கிடைப்பதில்லை.

ஏனெனில் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு இவர்களது பொருளாதார நிலை அவர்களது சுகாதார பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகின்றது. எனவேதான் எந்த வகையான காரணங்கள் இருந்த போதிலும் எம்மால் முடிந்தளவிற்கு சுத்தமாக இருக்க வேண்டும். இதனூடாக சுகாதாரமான நல்வாழ்வினை எங்களால் வாழ முடியும்.

You May Also Like:

சுத்தம் சுகம் தரும் கட்டுரை