சிறு சேமிப்பு கட்டுரை

siru semippu katturai in tamil

சிறு சேமிப்பு என்பது சிறியோர் முதல் பெரியோர் வரை கட்டாயமாக இருக்க வேண்டிய நற்பழக்கங்களில் ஒன்று என்பதை சிறு துளி பெரு வெள்ளம் என்ற பழமொழியே நமக்கு சொல்லி தருகிறது.

நாம் இளம் வயதிலேயே சிறுக சிறுக சேமிக்க தொடங்கினால் தான் நம்முடைய பிற்கால வாழ்க்கை சிறப்பாக அமையும். எனவே நாம் சேமிப்பின் அவசியத்தை குழந்தைகளுக்கும் சொல்லி கொடுக்க வேண்டும்.

சிறு சேமிப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • பணத்தின் அவசியம்
  • சேமிப்பின் முக்கியத்துவம்
  • சேமிப்பும் பாதுகாப்பும்
  • சேமிப்பதற்கான வழிகள்
  • முடிவுரை

முன்னுரை

தண்ணிரை குளங்கள், ஆறுகள், ஏரிகள், கிணறுகள் போன்றவற்றில் சேமித்து வைத்து பின்னர் எவ்வாறு பயன்படுத்துகின்றமோ அதுபோலவே தான் நாம் சம்பாதித்த பணத்தை சேமிப்பது மட்டுமல்ல, நம்மிடம் தேவைக்கு அதிகமாக இருக்கும் பணத்தையும் சேமித்து பயன்படுத்த வேண்டும்.

இந்த உலகத்தில் திடிரென நமக்கு உருவாகும் நோயாகட்டும் அல்லது தேவைகளாகட்டும் அனைத்து பிரச்சிகளுக்கும் ஒரே தீர்வு பணமாகதான் இருக்கும். பணம் இல்லாதவனை இச்சமூகம் மதிக்காது எனவே நாம் சிக்கனத்துடன் சேமித்தாக வேண்டும்.

பணத்தின் அவசியம்

சமூகத்தில் புகழும் மதிப்பும் வேண்டும் என்றால் அதற்கு பணம் மிகவும் அவசியமாகும். பணம் இல்லாதவரை இவ் உலகத்தில் யாரும் மதிக்கமாட்டார்கள். நம்மிடம் ஏதாவது ஒரு இக்கட்டான சூழலில் பணம் இல்லையென்றால் அப்போது உதவுவது நாம் சேமித்து வைத்திருக்கும் பணம் மட்டுமே ஆகும்.

பணத்தை சேமிப்பது எவ்வளவு முக்கியமோ அது போலவே சேமித்த பணத்தை தேவையில்லாமல் செலவு செய்யாமல் இருப்பதும் முக்கியம். பணத்தின் அருமை வறுமையில் தான் தெரியும் ஆகவே சேமிப்பு மிகவும் முக்கியமாகும்.

சேமிப்பின் முக்கியத்துவம்

சிறு வயதிலிருந்தே நாம் சேமிக்க தொடங்கிவிட்டால் பிற்காலத்தில் எந்த விதமான கடினமான சூழ்நிலைகளையும் எளிமையாக சமாளிக்க முடியும். சேமிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொள்வதன் மூலம் தேவையற்ற செலவுகளையும் நம்மால் தவிர்க்க முடியும்.

இளம் வயதிலேயே சேமிக்க தொடங்கினால் தான் முதுமையில் அது உதவியாக இருக்கும். இன்றைய கால கட்டத்தில் அதிக பொருள் ஈட்டுவதை விட அதை பேணிக் காப்பதே ஒவ்வொருவரதும் முதல் கடமையாக பார்க்கப்படுகிறது.

சேமிப்பும் பாதுகாப்பும்

இன்றைக்கு எமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எம்மிடம் போதுமான வசதி இருந்தாலே நாம் பாதுகாப்பை உணரலாம். அப்படி இல்லாவிட்டால் ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்கு நாம் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

இன்றைய காலத்தில் ஒரு மனிதனின் உயிரை காக்கும் மருத்துவம் பணமாக மாறிவிட்டது. உணவும் நீரும் மட்டுமல்லாது கல்வியும் பணம் திரட்டும் தொழிலாக மாறிவிட்டது. அதுமட்டுமா ஒருவனின் இறுதி கிரியைக்கு கூட பணம் தான் வேண்டும். எனவே நம்மை நாம் பாதுகாக்க சேமிக்க வேண்டும்.

சேமிப்பதற்கான வழிகள்

பணத்தை சேமிப்பதற்கு பல விதமான வழிகள் உள்ளன. அஞ்சல் அலுவலகங்கள், அரசு வங்கிகள் போன்றவற்றில் நம்முடைய பணத்தை சேமிக்கலாம்.

சிறுவர்களுக்கு சேமிப்பின் அவசியத்தை உணர்த்துவதற்காக பெற்றோர் உண்டியல்களை வாங்கி கொடுத்து சேமிப்பை ஊக்கப்படுத்தலாம்.

அதுமட்டுமல்லாது பள்ளி கல்வித்துறை பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இத்திட்டங்களின் மூலம் மாணவர்களுக்கு கிடைக்கும் சிறு தொகைகளை சேமித்து அதனை அவர்களின் படிப்பு செலவுக்காக பயன்படுத்தி கொள்ளலாம்.

முடிவுரை

சேமிப்பின் மூலம் நம்முடைய பணம் வீணாகாமல் இருப்பதோடு பொருளாதார நிலை உயர்வுக்கும் உதவுகிறது. இதனால் சக மனிதர்களிடம் கடமைப்படாது சுயமாக தலை நிமிர்ந்து வாழ்வதோடு பிறருக்கு உதவி செய்யவும் எம்மால் முடியும்.

You May Also Like:

தூக்கம் வர எளிய வழிகள்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் கட்டுரை