சங்க இலக்கியத்தின் சிறப்புகள் கட்டுரை

sanga ilakkiyam katturai in tamil

தமிழில் தோன்றிய பெருமைமிகு இலக்கியங்களில் பல சங்க காலத்தில் தோன்றியவை ஆகும். மன்னர்களும் மக்களும் தமிழை உயிர் போல நேசித்து வாழ்ந்தார்கள் என்பது தமிழ் மீது அவர்கள் கொண்ட பற்றினை எமக்கு காட்டுகின்றது.

சங்க இலக்கியத்தின் சிறப்புகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • சங்ககால இலக்கியங்கள்
  • சங்ககால புலவர்கள்
  • அறக்கருத்துக்கள்
  • புறத்திணை
  • வாழ்வியல்
  • முடிவுரை

முன்னுரை

தமிழ் இலக்கிய வரலாற்றின் முதல் காலமாக சொல்லப்படுகின்ற காலமான சங்ககாலம் கி.மு 1-3 வரையான காலப்பகுதியாக உள்ளது. எமது முன்னோர்கள் முச்சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த காலம் ஆகையால் இது சங்க காலம் என்று அழைக்கப்படுகின்றது.

இக்கால கட்டத்தில் எமது முன்னோர்களின் பல சிறப்புக்களை உள்ளடக்கிய அகத்திணை, புறத்திணை சார்ந்த பதினெண் மேல்கணக்கு நூல்கள் எழுந்தன அவை என்றும் அழியா தனி சிறப்புடையவையாகும்.

சங்ககால இலக்கியங்கள்

சங்க காலத்தில் எழுந்த இந்த இலக்கியங்களை பாட்டும் தொகையும் என்று குறிப்பிட்டனர். அதாவது எட்டுத்தொகை, பத்துப்பாடல் என்பவையே அவை.

பொருள் அடிப்படையில் அகத்திணை சார்ந்த இலக்கியங்களும் புறத்தினை சார்ந்த இலக்கியங்களும் தோன்றியிருந்தன.

அவை ஐவகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பவற்றை களமாக கொண்டு நமது முன்னோர்களுடைய காதல், வீரம், அறம், வாழ்க்கை, கலை போன்ற பல கோணங்களில் தனித்துவமான தமிழில் இவ் இலக்கியங்கள் படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சங்ககால புலவர்கள்

சங்ககாலத்தில் பல புகழ்பெற்ற புலவர்கள் வாழ்ந்தனர். அவர்கள் மக்களுக்கும் மன்னனுக்கும் நல்வழி காட்டியிருந்தார்கள். மன்னனும் மக்களும் அவர்களை ஆதரித்து காத்தனர்.

இந்த நட்புறவினை அக்கால புலவர்கள் தங்களது பாடல்களில் சிறப்பாக பாடி சென்றிருக்கின்றனர்.

உதாரணமாக ஒளவையார், கபிலர், பரணர், நக்கீரர், கணியன் பூங்குன்றனார், வெள்ளிவீதியார் என பல புலவர்கள் வாழ்ந்த சிறந்த சங்க பாடல்களை பாடியிருப்பதாக தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அறக்கருத்துக்கள்

சங்ககாலத்தில் வாழ்ந்த மன்னர்கள் அடிக்கடி போர்களில் ஈடுபட்டனர் பிற நாடுகள் மீது படையெடுத்து செல்வது ஒரு வழக்கமாக அன்று இருந்தது. இதனால் கடுமையான உயிரிழப்புக்கள், அழிவுகள் இடம்பெற்றன.

இவற்றினை மாற்றவும் மக்களுக்கு அறிவுரை புகட்டவும் அக்கால புலவர்கள் முயன்றனர்.

உதாரணமாக “யாது மூரே யாவருங் கேளிர்” என்ற ஒரு புகழ்பெற்ற பாடல் வாயிலாக மனிதர்களுக்கு தேவையான அத்தனை அறங்களையும் இது போதிப்பதனை எம்மால் அவதானிக்க முடிகிறது.

புறத்திணை

சங்ககாலத்து மக்கள் வீரத்தில் தலைசிறந்தவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு திணைக்கும் உரிய போரியல் ஒழுக்கங்களும் காணப்படுகின்றது.

உதாரணமாக பாலை நிலத்து மக்கள் போரில் வெற்றி பெற்றால் வாகை பூவை சூடுவதனால் தான் பிற்காலங்களில் போரில் வெற்றி பெறுவதை வாகை சூடுதல் என்ற ஒரு வழக்கமானது உருவானது.

மூவேந்தர்கள் மற்றும் கடையேழுவள்ளல்கள் இடையான போரும் சங்க இலக்கியங்களில் மிக சிறப்பாக காட்டப்படுகின்றது.

வாழ்வியல்

இந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் இயற்கையோடு இணைந்த ஓர் வாழ்க்கையினை வாழ்ந்தனர். இவர்களது வாழ்வியல் ஓர் அழகியலாக சங்க இலக்கியங்களில் சுட்டிகாட்டப்படுகின்றது.

அறத்தின் வழி வாழ்ந்த இவர்களது வாழ்க்கை சிறப்பானது. பிற மனிதர்களையும் இயற்கையினை அவர்கள் நேசித்த விதமானது போற்றுதலுக்குரியது.

கலை மீதும், இறைவன் மீதும், தாய்மொழி மீதும் பற்றுடைய ஒரு நாகரீகம் நிறைந்த ஒரு அழகானான வாழ்வியலை நாம் சங்ககாலத்தில் காணமுடியும்.

முடிவுரை

எமது வரலாற்றை புரட்டி பார்க்கையில் எமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையானது எமக்கு ஒரு சிறந்த பாடமாகும்.

அவர்கள் காலத்தில் அவர்கள் தமிழை வளர்க்க எத்தகைய தியாகங்களை புரிந்து மிக சிறந்த படைப்புக்களை உலகுக்கு அளித்தனர் என்பதற்கு சங்க இலக்கியங்கள் மிக சிறந்த சான்றாதாரமாக இருக்கின்றது.

ஆகவே இன்றைய தலைமுறையினர் இத்தகைய பெருமையும் செழுமையும் நிறைந்த இலக்கியங்களையும் கற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கின்றது.

You May Also Like:

மனிதநேயம் மலரட்டும் கட்டுரை