கார்த்திகை தீபம் ஏன் கொண்டாடப்படுகிறது

கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபத் திருவிழா நமது பாரம்பரிய வழிபாடுகளில் ஒன்று. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படுகிறது. நம் முன்னோர்கள் மிகச் சிறந்த அறிவாளிகள் என்பதற்கு கார்த்திகை தீப கொண்டாட்டம் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இந்த உலகம் தோன்றிய காலத்தில் இருந்து மனிதன் வழிபட்ட இரண்டு தெய்வங்கள் என்றால் அது சூரியன் மற்றும் சந்திரன் ஆகும். இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற எல்லா மதங்களின் அடிப்படை கூறுகளும் சூரிய, சந்திர வழிபாட்டிலேயே தொடங்குகின்றது.

கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தின் அன்று கொண்டாடப்படுவதாகும். இந்த கார்த்திகை தீபவிழா “திருக்கார்த்திகை விழா” என்றும் அழைக்கப்படுகின்றது.

கார்த்திகைத் திருவிழாவை குமார ஆலய தீபம், சர்வா ஆலய தீபம், விஷ்ணுவ ஆலய தீபம் என மூன்றாகப் பிரித்து கோயில் மற்றும் வீடுகளில் கொண்டாடுவர்.

குமார ஆலய தீபம் என்பது முருகப்பெருமானினுடைய ஆலயங்களில் கொண்டாடப்படுவதாகும். இது கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் கூடி வரும் நாளாகும்.

விஷ்ணுவ ஆலய தீபம் என்பது விஷ்ணு ஆலயத்தில் ரோகினி நட்சத்திரம் அன்று கொண்டாடப்படுவதாகும்.

அனைத்து ஆலயங்களிலும், வீடுகளிலும் கொண்டாடப்படும் கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி அன்று கொண்டாடப்படுவது சர்வாலய தீபமாகும்.

கார்த்திகை தீபம் ஏன் கொண்டாடப்படுகிறது

கார்த்திகை தீபம் ஏன் கொண்டாடப்படுகிறது

கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுவதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும் கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணத்தில் வரும் நிகழ்வைத்தான் அதற்கான அடிப்படையாகப் பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் இடையில் தங்களில் யார் பெரியவர் என்ற விவாதம் எழுந்தது. இந்த சர்ச்சையை நீக்குவதற்கு சிவபெருமானது அடியையும், முடியையும் தேடும்படி அசரிரி ஒலித்தது.

படைத்தல் தொழிலுக்குரிய பிரம்மாவும், காத்தல் தொழிலுக்குரிய விஷ்ணுவும் பலத்த முயற்சிக்கு பின்னர் அடி, முடியைக் காண முடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர் என்று பல புராணங்கள் கூறுகின்றன.

இவ்வாறு தம் கண்ட ஜோதியை உலகமே காணும்படி காட்டி அருள வேண்டும் என்று பிரம்மனும், விஷ்ணுவும் கேட்டுக் கொண்டனர். அதன்படி சிவபெருமான் திருக்கார்த்திகை நட்சத்திரத்தில் ஜோதி வடிவாய் தோன்றி அருளினார் என்ற தத்துவத்தை விளக்குவதற்காகவே கார்த்திகை அன்று தீபம் ஏற்றிக் கொண்டாடப்படுகின்றது என்பது ஐதீகம்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் காலையில் வரணி தீபம் ஏற்றப்படும். மாலையில் மலையில் தீபம் ஏற்றப்படும். சிவபெருமான் அக்கினிப்பிலம்பாய் நெருப்பு மழையாய் நின்றார். என்பதனை உணர்த்தும் திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகின்றது.

சுமார் 2668 அடி உயரம் கொண்ட மலை மீது தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இந்த கார்த்திகை தீபம் அன்று சொக்கப்பனை கொளுத்துவதும் வழக்கமாகும். சொக்கப்பனை என்பது சிவாலயங்களில் கார்த்திகை தீபத்திருவிழாவின் போது நடைபெறும் ஒரு நிகழ்வாகும்.

சிவபெருமான் அடிமுடி தெரியா வண்ணம் பிரம்மா, விஷ்ணுவுக்கு காட்சியளித்ததை நினைவூட்டும் விதமாக சொக்கப்பனை ஏற்றப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன.

சிவனுக்கு “சொக்கன்” என்ற பெயரும் உள்ளதால் சொக்கப்பனை என்ற சொல் ஏற்பட்டது. இந்நிகழ்வானது திருமால் மற்றும் முருகன் கோவில்களிலும் நடைபெறும். இருப்பினும் சிவாலயங்களிலும் முருகன் ஆலயங்களிலும் சொக்கப்பனை கொளுத்துவது வழக்கம். இதற்கு “சுட்டப்பனை” என்றும் பெயர் உள்ளது.

எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

You May Also Like:

யோகா உளவியல் என்றால் என்ன