கல்வி கண் திறந்தவர் கட்டுரை

kalvi kan thiranthavar katturai in tamil

தான் பட்டப்படிப்பு பயிலாதுவிடினும் பல ஏழை எளிய மாணவர்கள் கல்வி பயில வழிவகுத்து வழங்கிய தமிழ்நாட்டின் தலைசிறந்த முதலமைச்சராக காமராஜர் காணப்படுகிறார்.

கல்வி கண் திறந்தவர் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. ஆரம்ப வாழ்க்கை
  3. விடுதலைப் போரில் பங்குப்பற்றியமை
  4. கல்விப் பணி
  5. முடிவுரை

முன்னுரை

“கேடில் விழுச்செல்வம் கல்வியொருவற்கு
மாடல்ல மற்றை மலை.”

என்ற திருவள்ளுவரின் திருக்குறளுக்கு இணைவாக, கல்விச்செல்வமே எத்தனை காலமானாலும் அழியாத செல்வம் என்பதை நன்கு உணர்ந்த தமிழ்நாட்டின் முதலமைச்சராக காணப்பட்ட காமராஜர் ஆரம்பகாலத்தில் குறிப்பிட்ட வர்க்கத்தாருக்கு மட்டுமே உரியதாக காணப்பட்ட கல்வியை இலவசக் கல்வியாக மாற்றி ஏழை மாணவர்களும் கல்வி பயில வழி வகுத்து வழங்கினார்.

இதனால் இவர் கல்வியின் கண் திறந்த மகான் என சிறப்பாக அழைக்கப்படுகிறார். இவரது இந்த செயலினூடாக இன்றும் பல ஏழை மாணவர்கள் நன்மையடைகின்றனர்.

ஆரம்ப வாழ்க்கை

காமராஜர் அவர்கள் குமாரசாமி என்பவருக்கும் சிவகாமி அம்மைக்கும் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி விருதுநகரில் பிறந்தார்.

1908 ஆம் ஆண்டு திண்ணைப் பள்ளியிலும் ஏனாதி நாயனார் வித்யாலயத்திலும் கல்வி பயின்றார்.

1914 ஆண்டளவில் ஆறாம் வகுப்பு படிக்கும் வேலை அவரது தந்தை காலமானதன் விளைவாக வறுமை ஆட்கொள்ள அவர் தனது  கல்வியை நிறுத்திவிட்டு தனது மாமாவின் துணிக்கடைக்கு வேலைக்கு சென்று குடும்பத்தை பார்த்து கொண்டார்.

விடுதலைப் போரில் பங்குப்பற்றியமை

தந்தையை இழந்த பின்னர் குடும்ப சூழ்நிலையின் காரணமாக அவருடைய மாமாவின் துணைக்கடையில் வேலை செய்யும் போது அங்கு வரும் செய்திதாள்களை படித்து, தலைவர்களின் சொற்பொழிவுகளை கேட்டு அரசியல் அறிவையும், நாட்டுப் பற்றையும் வளர்த்துக் கொண்டார்.

இவை அவரை விடுதலைப் போரில் ஈடுபட தூண்டியது. பின்னர் நாட்டின் மீது இருந்த பற்றினால், காங்கிரஸ் கட்சியில் தொண்டராக சேர்ந்தார். அண்ணல் காந்தியின் கொள்கைகளால் கவரப்பட்ட காமராஜர் அவர்கள், உப்பு சத்தியாகிரகப் போரில் கலந்து கொண்டார்.

கல்விப் பணி

தமிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் பொறுப்பேற்றதன் பின்னர், கல்விச் செல்வத்தை ஏழைச் சிறார்களும் பெற்று அவர்களுடைய வாழ்வில் முன்னேற வேண்டும் என்று ஆவல் கொண்டு பதினோராம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் இலவச கல்வி திட்டத்தை அறிமுகம் செய்தார்.

சிறார்கள் மூன்று மைல் தூரத்திற்கு மேல் நடந்து சென்று கல்வி பயில்வதை கண்டு கவலையுற்று மூன்று மைல் தூரத்திற்கு ஒரு பள்ளிகளை அமைத்தார்.

அத்துடன், பசியுடன் மாணவர்களால் படிக்க இயலாது என்பதற்காக இலவசமாக உணவு வழங்கும் பொருட்டு பல இன்னல்களை எதிர்கொண்டு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.

மாணவர்களின் மனங்களில் சாதி, மத பேதங்களை களைவதன் பொருட்டு பள்ளி சீருடை முறையை அமல்படுத்தி இலவச சீருடை மாணவர்களுக்கு வழங்கினார்.

ஆங்கிலேயரினுடைய ஆட்சி காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்விக் கற்றோர் விகிதம் காமராஜரினுடைய ஆட்சிக்காலத்தில் 37 சதவீதமாக உயர்ந்தது.

மருத்துவம், பொறியியல், விவசாய படிப்பிற்கான கல்வி உதவித் தொகைகள் ஏழை மாணவர்களுக்கு கிடைக்க வழி வகுத்து வழங்கினார்.

அத்துடன் உடற்கல்விக் கல்லூரிகள், ஆசிரியர்ப் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் இவரது காலத்தில் ஆரம்பிக்கப்பட்டன.

கல்வி அறிவுடன் பொது அறிவையும், விழிப்புணர்வையும் மாணவர்கள் மாத்திரமின்றி  பொதுமக்களும் பெறவேண்டும் என்பதற்காக 638 பொது நூலகங்கள், 12 மாவட்ட மைய நூலகங்கள் அமைக்க திட்டம் வகுத்துக் கொடுத்து அதில் வெற்றியும் கண்டார்.

முடிவுரை

கல்வியின் வளர்ச்சிக்கு தனது மேலான பங்களிப்பை வழங்கி உள்ள மாமனிதரான காமராஜர் அவர்கள் கல்விக் கண் திறந்தவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு முன்னோடியாய் விளங்கிய இவரின் தன்னலமற்ற சேவையின் பயனை இன்றளவிலும் நாம் அடைந்து வருகின்றோம் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

இவர் கல்வி கற்பதற்கு வகுத்து தந்த நன்மைகளை சிறந்த முறையில் பயன்படுத்தி கல்வி கற்பது மாணவர்கள் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.

You May Also Like:

சுவாமி விவேகானந்தர் கட்டுரை

ஜல்லிக்கட்டு பற்றிய கட்டுரை