ஒன்றே குலம் ஒருவனே தேவன் கட்டுரை

ondre kulam oruvane devan katturai in tamil

இந்த வையகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வகையில் இன்னொரு மனிதனுக்கு உதவுபவனாகவே காணப்படுகின்றான்.

நாம் வாழும் இந்த உலகில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதனை “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனும் வரிகள் எடுத்துச் சொல்வதனைக் காண முடியும்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • திருமூலரின் கருத்து
  • சமய பாகுபாடுகள்
  • சாதி வேற்றுமைகள்
  • மனிதகுலம் ஒன்றே என வலியுறுத்தும் பெரியோர்கள்
  • முடிவுரை

முன்னுரை

நாம் வாழும் உலகில் ஒவ்வொரு நாட்டிலும் ஏன் ஒவ்வொரு பிரதேசத்திலும் கூட இன, மத, சாதி பாகுபாடுகளை காரணம் காட்டி ஒருவருக்கு ஒருவர் எதிரிகளைப் போலவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

பண்டைக்காலம் தொட்டு இன்று வரைக்கும் இந்த பாகுபாடுகளை கலைவதற்கு பலரும் முன்வந்துள்ளனர் இந்த வகையிலேயே திருமூலரின் இந்த “ஒரே குலம் ஒருவனே தேவன்” எனும் வரிகளும் காணப்படுவதனை அவதானிக்கலாம்.

திருமூலரின் கருத்து

திருமூலர் “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமன் இல்லை நாணமே…..”எனும் வரிகளினூடாக பின் வருமாறு தன்னுடைய புரட்சிகர கருத்தை தெரிவித்துள்ளார்.

அதாவது மனித குலம் என்பது ஒன்றுதான் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என அங்கு பாகுபாடு கிடையாது. இறைவன் கூட ஒருவனாகவே காணப்படுகின்றான். என குறிப்பிட்டுள்ளமையைக் காணலாம்.

சமய பாகுபாடுகள்

சமயம் எனும் சொல்லானது பக்குவப்படுதல் எனும் கருத்தையே தருகின்றது. எல்லா சமயங்களுமே இறைவனடி சேர்தல் என்பதனையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

இதனை முழுமையாக அறிந்து கொள்ளாதவர்களே தங்களுடைய சமயங்கள் மாத்திரம் உயர்வானது, ஏனையவர்களது சமயங்கள் தாழ்வானது என்ற கருத்தை கொண்டு சமூகத்தில் பாகுபாடுகளையும், பிரிவினை எண்ணங்களையும் தோற்றுவிக்கின்றனர்.

சமய பாகுபாடுகளை தவிர்த்து முழு மனித சமூகமும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதனையே, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற வரிகள் உணர்த்தி நிற்கின்றன.

சாதி வேற்றுமைகள்

ஆரம்ப காலங்களில் செய்யும் தொழிலையே தெய்வமாக போற்றிய மக்கள் பிற்பட்ட காலங்களில் தங்களுடைய தொழில்களை அடிப்படையாகக் கொண்டு, சாதி கட்டமைப்புகளை வகுத்துக் கொண்டனர்.

இவ்வாறாக சாதி வேற்றுமைகள் உருவானமையினால் தீண்டாமை, வேற்றுமைகள் என்பன உருவாகியது.

ஒரே மொழியை பேசக்கூடிய ஒரே சமூகத்தில் வாழக்கூடிய மக்களுக்குள்ளேயே இவ்வாறான பிரிவினைகள் ஏற்பட்டமையை நிவர்த்தி செய்யும் நோக்கிலேயே இந்த ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் திருமூலரின் கருத்து இச் சமூகத்துக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மனித குலம் ஒன்றே என வலியுறுத்தும் பெரியோர்கள்

சமூகத்தில் உருவான இன, சமய, மத, சாதி பிரிவுகளை களைந்து அனைவரையும் ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செய்யப்பட்ட பல பெரியோர்கள் உள்ளனர்.

அவர்களுள், கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர் என வினவிய நாவுக்கரசர், சாதிகள் இல்லையடி பாப்பா எனக் கூறிய பாரதியார், வேறுபடும் சமயங்களில் எல்லாம் மாறுபடும் கருத்துக்கள் இல்லை எனக் கூறிய தாயுமானவர் போன்றவர்கள் மனித குலம் ஒன்றே அவர்களுக்கான இறைவன் ஒருவனே என்பதனை வலியுறுத்தியவர்களாவார்கள்.

முடிவுரை

எமது சமூகத்தில் இன, மத, சமூக, சமய மற்றும் சாதி வேறுபாடுகள் என்று உருவானதோ அன்றிலிருந்து இன்று வரைக்கும் ஏற்றத்தாழ்வுகளும், பாகுபாடுகளும், தீண்டாமை உணர்வும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது.

இவ்வாறான வேறுபாடுகளை களைந்து “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற உண்மையை புரிந்து கொண்டு, நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ முன்வர வேண்டும்.

You May Also Like:

யாதும் ஊரே யாவரும் கேளிர் கட்டுரை

மனிதநேயம் மலரட்டும் கட்டுரை