மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் தம் வாழ்வில் இன்பம், துன்பம் ஆகிய இரண்டையும் அனுபவிக்கின்றனர்.
ஒருவர் தம்முடைய முற்பிறவியில் செய்த வினைகளுக்கு ஏற்பவே அவர்களுக்கு மறுபிறவி உண்டு எனவும் அந்த மறுபிறவியில் அவர்கள் அனுபவிக்கும் இன்பம், துன்பம் அனைத்திற்கும் அதுவே காரணம் என்பது ஐதீகம். அந்தவகையில் ஊழ்வினை பற்றி நோக்குவோம்.
கர்ம வினை என்றால் என்ன
வினை என்பது செயல் என பொருள்படும். அந்த வகைகள் கர்ம வினை என்பது முற்பிறவியில் நாம் செய்த, செய்ய நினைத்த, செய்ய விரும்பிய, செய்ய நினைத்து செய்யாமல் விடுத்த அனைத்தும் சேர்ந்தவையே ஆகும்.
இந்தக் கர்ம வினையானது ஊழ்வினை, தொல்வினை என இரண்டு வகைப்படும்.
ஊழ்வினை என்றால் என்ன
ஊழ்வினை என்பது முற்பிறவியில் நாம் செய்த நல்ல செயல்பாடுகளினதும், தீய செயல்பாடுகளினதும் விளைவாக இப்பிறவியில் அனுபவிப்பதற்காக எஞ்சியிருப்பவை ஆகும்.
மனிதனின் வாழ்க்கை நிகழ்வுகள் சில கூறுகளின் கலவை ஆகும். அவையாவன,
- ஊழ் = விதி
- வினை = கருமம்
- இரஞ்சுவதால் கிடைக்கும் இறைவனின் அருள் = நாட்டம்
இதில் ஊழ் என்பது இறைவனால் ஏற்கனவே வகுக்கப்பட்டது. திருவள்ளுவர் ஊழ் வினை பற்றிய கருத்துக்களை கூறும் முகமாக திருக்குறளில் “ஊழ்” என்னும் ஓர் அதிகாரத்தை உருவாக்கியுள்ளார்.
“பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை”
அதாவது, இழப்பதற்கான ஊழ் ஒருவனைப் பேதையாக்கும்; ஆவதற்கான ஊழ் வந்தால் ஒருவனது அறிவை விரிவாக்கி அவனுக்குப் பல நன்மைகளைத் தரும் என திருவள்ளுவர் கூறுகின்றார்.
“ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி”
என்ற குறட்பாவினூடாக, ஆவதற்குரிய ஊழ் வந்தால் சோர்வில்லாத முயற்சிகள் தோன்றும்; கைப்பொருள் போவதற்குரிய ஊழ் வந்தால் சோம்பல் தோன்றும் என்கிறார்.
இந்துமதம் கூறும் ஊழ்வினைகள்
இந்துமதமானது மூன்று வகையான ஊழ்வினைகள் பற்றி குறிப்பிடுகின்றது. அவற்றைப் பற்றி சுருக்கமாக நோக்குவோம்.
நுகர்வினை எனப்படும் பிராரப்த கர்மா. முற்பிறவிகளில் நாம் செய்த, செய்ய நினைத்த பாவங்களின் மூட்டை ஆகும். இப்பாவங்களில் இருந்து நாம் தப்ப முடியாது.
18ஆம் நூற்றாண்டில் நாராயண தீர்த்தர் என்ற கிருஷ்ண பக்தர் ஒருவர் இருந்தார். அவர் ஏழு ஆண்டுகள் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார். ஒருசமயம் அவர் கிருஷ்ணரிடம் முறையிட்டார். தனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று கேட்டார்.
அதற்கு கிருஷ்ணர்,”நீ முற்பிறவியில் சிறிது காலம் வணிகம் செய்தாய். அதிக இலாபம் பெறுவதற்காக, தானியங்களில் கல்லையும், மண்ணையும் கலந்து விற்றாய். அதன் பலனையே இப்போது அனுபவிக்கிறாய்” என்று கூறினார்.
தொல்வினை எனப்படும் சஞ்சித கர்மா. முற்பிறப்பில செய்த சில பாவங்கள் இனி வரப்போகும் பிறவியிலும் நமக்கு விளைவுகளை ஏற்படுத்தும். இப்பிறவியில் இறைவழிபாடு செய்வதன் மூலம் இதை மாற்றலாம். “சஞ்சித பாப வினாசக லிங்கம்” என்று லிங்காஷ்டகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் வினை எனப்படும் ஆகாமய கர்மா. இது முழுவதும் மனிதன் கையிலேயே உள்ளது.
நாம் இப்பிறவியில் நல்ல செயல்களைச் செய்தால், இப்பிறவியிலேயே நமக்கு நன்மைகள் கிட்டும். நன்கு படித்தால், நல்ல வேலை கிடைக்கும், நல்ல சம்பளம் கிடைக்கும் என்பது ஓர் உதாரணமாகும்.
You May Also Like: