ஒரு மொழியின் சிறப்பினையும், வளத்தினையும் அறிய அம்மொழியில் தோற்றம் பெற்ற காப்பியங்கள் பெரிதும் துணைபுரிகின்றன. அந்தவகையில், ஆரம்ப காலத்தில் அதிகப்படியான காப்பியங்கள் தோற்றம் பெற்றுள்ளன.
இரட்டை காப்பியங்கள் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- காப்பியம் என்பது
- இரட்டைக் காப்பியம் என்ற பெயருக்கான காரணம்
- சிலப்பதிகாரத்தின் நூலமைப்பு
- மணிமேகலை நூலமைப்பு
- முடிவுரை
முன்னுரை
தமிழ்மொழியில் பெரும் காப்பியங்கள், சிறு காப்பியங்கள் என இரு பிரிவுகள் காணப்படுகின்றது. இதில் ஐம்பெருங்காப்பியங்களுள் முதன்மையான இரண்டு காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை என்பன கதை கருத்தாலும், காலத்தாலும் ஒன்றாக தொடர்புடையதாக அமைந்துள்ளது.
மணிமேகலை ஒரு புரட்சிக் காப்பியம், சிலப்பதிகாரமும் புரட்சிக்கு வழிகாட்டும் காப்பியம், ஆனாலும் சிலப்பதிகாரம் உணர்த்தும் புரட்சிவழி வேறு மணிமேகலை உணர்த்தும் புரட்சிவழி வேறு சிலப்பதிகாரம் அரசியல் புரட்சி கூறுகிறது, மணிமேகலையோ சமுதாயப் புரட்சியை கூறுகிறது.
காப்பியம் என்பது
காப்பியம் ஆங்கிலத்தில் EPIC எனப்படுகிறது. இச்சொல் EPOS என்ற கிரேக்க சொல்லின் அடிப்படையில் இருந்து உருவாகியது. இதற்கு சொல் அல்லது பாடல் என்பது பொருளாகும்.
காவியம் எனும் வட சொல்லின் தமிழ் வடிவமே காப்பியம் எனக் கொள்வதுண்டு. காவியம் என்பது கவியினால் செய்யப்பட்டது என பொருள் தரும்.
காப்பியம் என்பதை காப்பு+ இயம் என்றும் பிரித்தும் பொருள் காணலாம். இப்பெயர் தொடக்கத்தில் இலக்கண நூல்களை சுட்டுவதற்காகவே அமைந்தது.
இடைக்காலத்தில் வடமொழி தொடர்பால் ஒருவகை இலக்கிய வடிவத்தை குறிக்கப் பயன்படுத்தப்பட்டது என கூறப்படுகிறது. காப்பியத்தை தொடர்நிலைச் செய்யுள் எனவும் குறிப்பர்.
இரட்டைக் காப்பியம் என்ற பெயருக்கான காரணம்
ஐம்பெரும் காப்பியங்களினுள் ஒன்றாக காணப்படும் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என அனைவராலும் சிறப்பாக அழைக்கப்படுகிறது.
எனினும் இவை இரண்டும் கதை வேறு களம் ஒன்று என்ற அமைப்பில் அமைந்துள்ளதோடு, சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி நூலாக மணிமேகலை கூறப்படுகிறது.
இக்காப்பியத்தில் வருகின்ற கதைமாந்தர்களும் தொடர்புடையவர்களாக காணப்படுகின்றனர். இதனால் இந்த இரண்டு நூல்களும் இரட்டைக்காப்பியங்கள் என அழைக்கப்படுகிறது.
சிலப்பதிகாரத்தின் நூலமைப்பு
சிலப்பதிகாரம் இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட காப்பியம் ஆகும். தமிழறிஞர்களால் மிகுதியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நூலாக காணப்படுகின்ற சிலப்பதிகாரமானது நூலின் முகத்தில் உரைப்பாட்டினையும், கானல்வரி, வேட்டுவவரி, ஆற்றுவரி, ஊசல்வரி, கண்புகுவரி எனும் இசை பாட்டுக்கள் நிறைந்ததாக காணப்படுகிறது.
இது புகார் காண்டம், மதுரை காண்டம் மற்றும் வஞ்சி காண்டம் என மூன்று காண்டங்களை கொண்ட அமைந்துள்ளது.
புகார் காண்டமானது பத்து காதைகளையும், மதுரை காண்டமானது 13 காதைகளையும், வஞ்சிக்கண்டமானது ஏழு காதைகளையும் கொண்டு அமைந்துள்ளது. சிலப்பதிகாரத்தின் பிரதான கதை மாந்தர்களாக கண்ணகி, கோவலன், மாதவி என்பவர்கள் காணப்படுகின்றனர்.
காப்பியங்களுக்கான இலக்கண முறைப்படி அமைந்த சிலப்பதிகாரத்தில், காவிரி, வைகை முதலான ஆறுகளும் புகார், உறந்தை, மதுரை, வஞ்சி முதலான நகரங்களும் குரவை கூத்து முதலிய கூத்துக்களும் திருமால் முதலிய தெய்வங்களும், அடர்ந்து வளர்ந்த பெருங்காடுகளும் சிறப்பான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
சிலப்பதிகாரம் அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்னும் முப்பெரும் உண்மைகளை எடுத்துரைக்கின்றது. சிலப்பதிகாரம் இல்லறத்தை வலியுறுத்தும் நூலாக காணப்படுகிறது.
மணிமேகலையின் நூலமைப்பு
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாக காணப்படுகின்ற மணிமேகலையை சீத்தலைச் சாத்தனார் இயற்றியுள்ளார். மணிமேகலை துறவறத்தை வலியுறுத்துகிறது.
சங்கமருவிய காலத்தில் பௌத்த சமயம் தமிழகத்தில் விரிவாக பரவி மக்களிடையே செல்வாக்கு பெற்றது. புத்தருடைய வரலாறு புலவர் சாத்தனாருடைய உள்ளத்தை பெரிதும் கவர்ந்தது. அதன் வெளிப்பாடாகவே மணிமேகலை தோற்றம் பெற்றது.
இது கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகளாகிய மணிமேகலையின் வரலாற்றை கூறும் காப்பியமாக அமைந்துள்ளது. மணிமேகலை பௌத்த சமயத்தை சார்ந்து துறவியாகி பௌத்த சமயத்தை போற்றிப் பரப்பிய முறையை இக்காப்பியம் கூறுகிறது.
இந்நூலில் 30 காதைகள் அமைந்து காணப்படுகிறது. இக்காப்பியத்தில் இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை செல்வம் நிலையாமை என மூன்று கருத்துகளும் அழுத்தமாக கூறப்படுகிறது.
முடிவுரை
தமிழ் இலக்கியங்களில் இந்த இரட்டை காப்பியங்கள் இரண்டும் தனித்துவமானவையாக காணப்படுகின்றன.
இவை இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது மாத்திரமின்றி, அக்காலத்து அழகான வாழ்வியலை பிரதிபலிப்பதோடு பிற்கால இலக்கியங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்தும் காணப்படுகிறது.
You May Also Like: