இணையவழிக் கல்வி கட்டுரை

inaya vazhi kalvi katturai

கல்வி என்பது ஏழை, பணக்காரன், அரசன், ஆண்டி என யார்  வாய்க்கேட்பினும் அதன் சிறப்பை அறியாதவன் யாரும் இல்லை என சொல்வதே சாலச்சிறந்தது எனலாம். கல்வி அந்தளவு மகத்துவம் பொருந்தியது.

இணையவழிக் கல்வி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • இணைய வழி கல்வி
  • இணைய வழி கல்வி ஊடகங்கள்
  • சாதகங்களும் பாதகங்களும்
  • முடிவுரை

முன்னுரை

“மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்த்தூக்கின் மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் மன்னற்குத் தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்புண்டு” என்கிறார் ஔவையார். இது அல்லவா கல்வியின் சிறப்பு.

அரிச்சவடி கொண்டு அகரம் படித்த காலமெல்லாம் கடந்து நிகழ்நிலையில் நடைபழகும் குழந்தை கூட படிக்கும் காலம் வந்துவிட்டது எனலாம். அந்த வகையில் இணைக்கல்வி முறைமை இன்று எமக்கு பழக்கப்பட்ட ஒன்றாக அமைந்துவிட்டது.

இணைய வழி கல்வி

இணையவழிக்கல்வி என்பது கல்வியை கணனி மற்றும் இணையத்தின் உதவியுடன் கற்பது என கூறலாம். ஒரு நாட்டின் அபிவிருத்தி அடைந்து வரும் வீதம் அந்நாட்டின் கல்வியறிவு வீதத்தில் தங்கியுள்ளது.

அந்தவகையில் காலந்தோறும் கல்வி கற்கும், கற்பிக்கும் முறைகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இன்றைய நவீன காலகட்டத்தில் இணைய வழி கல்வி முறைமையானது மிகவும் பிரசித்தமான பயன் தரக்கூடிய கல்வி முறைமையாக உள்ளது.

தகவல் தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சி மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் மக்களுக்கு ஏற்பட்ட நோய்த்தொற்று சூழல் காரணமாக ஏற்படுத்தப்பட்ட முடக்கம் என்பன இணைய வழிக்கல்வியின் தேவையை உணர்த்தியது.

அபிவிருத்தியடைந்த நாடுகளில் பல ஆண்டுகளாக இக்கற்றல் முறை பழக்கத்தில் இருந்தாலும் எம்மைப்போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் சில வருட காலங்களாகவே இம்முறை அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது எனலாம்.

இணைய வழி கல்வி ஊடகங்கள்

அறிதிறன் பேசி(smart phone), மடிக்கணினி(laptop), கணினி(computer) முதலான தொழில்நுட்பக் கருவிகள் இன்று கல்வி கற்க பெரிதும் துணைசெய்கின்றன.

மேலும் பல வசதிகளோடு உதாரணமாக webinar, Google meet, Zoom, Teamlink, Powerpoint presentation இக்கல்வி முறைமை மேலும் இலகுவாக்கப்படுகிறது.

இணையக்கல்வி முறை மூலம் குறித்த ஒரு ஆசிரியரிடம் ஒரு முறையின் கீழ் மட்டும் படித்த பாடங்களை பல ஆசிரியர்களிடம் பல்வேறுபட்ட முறைகளில் பல உசாத்துணை நூல்களின் உதவியுடன் கற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது.

சாதகங்களும் பாதகங்களும்

இணைய வழி கல்வியானது நகரத்திலும் கிராமத்திலும் வாழக்கூடிய மாணவர்களுக்கு ஒரேயளவான தரமான கல்வியை வழங்கக் கூடியதாக உள்ளது. கல்வியை பெற்றுக்கொள்வதில் மாணவர்களிடம் இருந்த ஏற்றத்தாழ்வு இக்கல்வி முறை மூலம் ஒழிக்கப்பட்டுள்ளது.

இது எல்லா வசதிகளோடும் எங்கிருந்தும் மாணவர்களின் கற்றல் திறனையும் அறிவுத்திறனையும் மேம்படுத்திக் கொள்ளக்கூடியதாக உள்ளது.

ஆசிரியர்களால் பல தரவுகள் பயன்மிக்கத் தகவல்களாக மாற்றப்பட்டு பல உதாரணங்கள் முன்வைக்கப்பட்டு இருவழி கலந்துரையாடல்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்களின் ஐயங்களும் தெளிவூட்டப்படுகின்றன.

நாணயத்தின் இரு பக்கங்களை போன்று இணைய கல்வியினால் மாணவ சமூகம் பாதிப்பும் அடைவது மறுக்க மடியாத உண்மையே. இணையவழியில் நடக்கும் நீண்ட கால வகுப்புகளினால் தொழில்நுட்ப சாதனங்கள் பலவீனம் அடைவதோடு அதன் வேகமும் படிப்படியாக வீழ்ச்சியடைகின்றது.

அதேவேளை மாணவர்களுக்கு கண் பாதிப்பு, கண்ணெறிச்சல், தலைவலி போன்ற உடல் ரீதியான பிரச்சினைகளும் மனழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்பட அதிக வாய்ப்புகளுண்டு.

மேலும் கிராமங்களில் வசிக்கும் சில மாணவர்களுக்கு அறிதிறன்பேசி, இணையம் உள்ளிட்ட வசதிகள் கிடைக்காமல் இருக்கலாம். இவ்வாறான பல பாதகங்களையும் இணையக்கல்வி ஏற்படுத்தியுள்ளது.

முடிவுரை

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கிணங்க கல்வி முறையில் பல புதியன புகுந்தாலும் எந்த வகையிலும் நம் முன்னோர் போராடி பெற்றத்தந்த இலவசக்கல்வி முறை பாதிக்காமல் எம் எதிர்க்கால சமூகம் பயனடைய வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது.

இணையக்கல்வியேயாயினும் அதிலுள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டியது அனைவரினதும் கடமையே.

You May Also Like:

கல்வியே அழியாத செல்வம் கட்டுரை

கல்வியின் முக்கியத்துவம் கட்டுரை