பல வருடங்களுக்கு முன்னரே ஔவையார் பாடி சென்ற ஆத்திசூடியில் இடம்பெறும் ஒன்றாகவே இந்த “அறம் செய்ய விரும்பு” என்பது காணப்படுகின்றது.
அதாவது நாம் பாடசாலைகளில் கல்வி கற்கையில், ஆரம்ப பிரிவுகளிலேயே எமக்கு ஆத்திசூடியை கற்றுக் கொடுத்திருப்பர். இந்த வகையில் அறம் என்பது ஒழுங்கான தர்ம வழியில் நடத்தல் எனும் பொருள் கொள்ளக்கூடிய ஒன்றாகும்.
அறம் செய்ய விரும்பு கட்டுரை தமிழ்
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- அறம் என்றால் என்ன
- அறத்தின் முக்கியத்துவம்
- ஔவையாரின் அறம் பற்றிய கருத்து
- திருவள்ளுவரின் அறம் பற்றிய கருத்து
- முடிவுரை
முன்னுரை
எம்முடைய முன்னோர்கள் அறம், பொருள், இன்பம், வீடு என இவற்றின் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தவர்களாவர். அறம் செய்ய விரும்புதல் என்பது நல்ல விடயங்களில் ஈடுபடுதல் ஆகும்.
அறத்தின் உண்மை தன்மையை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என திருவள்ளுவர் அறத்துப்பால் எனும் அதிகாரத்தையே இயற்றியுள்ளமையைக் காண முடிகின்றது.
அறம் என்றால் என்ன
“ஆறு” என்ற வினா அடியிலிருந்து தோன்றிய ஒரு சொல்லாகவே இந்த அறம் என்பது காணப்படுகின்றது. மனிதன் தங்களுக்காக வரையறுத்துக் கொண்ட ஒழுக்க நெறிக் கோவையே அறம் எனப்படுகின்றது.
அறம் என்ற சொல்லுக்கு தர்மம், கடமை, கற்பு, துறவறம், நல்வினை போன்ற பொருள்கள் கொள்ளப்படுகின்றன. அதாவது மனிதன் வாழ்நாள் முழுவதுமாக அவனைத் தொடர்ந்து கொண்டு வரும் தீய வினைகளை அடறுத்தெறிவது அறம் என பொருள் கொள்ளப்படும்.
வள்ளுவர் அறம் பற்றி கூறுகையில் அடுத்தவர்களை துன்பமடையச் செய்யும் கெட்ட எண்ணம், பேராசை, அவச்சொல் பேசுதல் இவை போன்ற தீய எண்ணங்களை ஒழிப்பது தான் அறம் என்பதனை “அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்” என்று குறளினூடாக தெளிவுபடுத்தியுள்ளார்.
அறத்தின் முக்கியத்துவம்
மனிதர்களாகிய நாம் இவ்வுலகில் நல்வாழ்வு பெற்று மறு உலகிலும் மேன்மை பெற்று வாழ்வதற்கு அறத்தை செய்தல் அவசியமானதாகும்.
அறம் கொண்டு வாழ்பவர்களுடைய வாழ்வு எப்பொழுதுமே உயர்வானதாகவும், சிறப்புடையதாகவுமே விளங்குகின்றது.
அதாவது நேர்மை இல்லாமல் வாழ்பவர்களின் வாழ்க்கையில் பெரும் துன்பத்தைச் சந்திக்க நேரிடும் ஒழுங்கான தர்மவழியில் நிற்பவர்கள் அறத்தை கடைபிடிப்பவர்களாக, மற்றவர்களுக்கு எப்பொழுதும் கெடுதல் நினைக்காமல் நல்ல எண்ணங்களுடன் வாழ்வது அவசியமானதாகும்.
இவ்வாறான வாழ்க்கையை மேற்கொள்வதற்கு அறம் என்பது அத்தியாவசியமான ஒன்றாகவே காணப்படுகின்றது.
ஔவையாரின் அறம் பற்றிய கருத்து
மக்களாய் பிறந்த நாம் அனைவரும் இம்மையிலும், மறுமையிலும் மேன்மை பெற்று வாழ வேண்டுமானால் அறத்தை செய்ய வேண்டும் என ஔவையார் குறிப்பிடுகிறார்.
அதாவது அறத்தின் நெறி தவறியவர்கள் மறு ஜென்மத்தில் வாழ்வதற்கான தகுதியை இழந்தவர்கள், வறுமையிலும் நாம் சிறப்பான நிலையில் வாழ வேண்டுமென்றால் அறநெறியை பின்பற்றி வாழ வேண்டும். என ஔவையார் தன்னுடைய ஆத்திசூடியில் முதலில் வரிகளிலேயே அறம் செய்ய விரும்பு என்பதன் மூலமாக உரைத்துள்ளார்.
திருவள்ளுவரின் அறம் பற்றிய கருத்து
இந்த நிலை இல்லாத உடம்பு இருக்கும் பொழுதே நிலையான அறத்தை செய்து கொள்ளுதல் வேண்டும் என வள்ளுவர் வலியுறுத்தியுள்ளார்.
அதாவது அறம் செய்பவர்களிடம் பொறாமை, அவா, வெகுளி, இன்னா சொல் போன்ற நான்கு குற்றங்களும் இருக்கக் கூடாது, இக்குற்றங்களை உடையவர்கள் செய்யும் அறம், அறமாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும் குறிப்பிடுகின்றார்.
மேலும் நாம் பிறருக்கு செய்யக்கூடிய (தர்மமானது) அறமானது எப்பொழுதுமே நமக்கு துன்பத்தை தராது, அது இன்பத்தை மட்டுமே தரும் என்கின்றார். அற உணர்வு இல்லை எனில் மனிதர்களாகிய நாம் மிருகங்களாக வாழ ஆரம்பித்து விடுவோம் எனவும் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளமையைக் காணலாம்.
முடிவுரை
தற்கால உலகமானது பாவச்செயல்கள், குற்றச் செயல்கள் நிறைந்த ஒன்றாகவே காணப்படுகின்றது. இன்று அறம் என்பது அருகி விட்டதை காணமுடிகின்றது.
தவறான செயல்கள் அழிவை உண்டாக்குவது நிச்சயம், ஆனால் அறம் செய்வதனால் உண்டாகும் மகிழ்ச்சி வேறு எது செய்தாலும் கிடைக்காது. இன்றைய சூழலில் அறத்தின் வழியில் நடப்பவர்களை பார்ப்பதே மிகவும் அரிதாக உள்ளது.
இதனைத் தவிர்த்து நாம் அறத்தின் முக்கியத்துவத்தினை உணர்ந்து, எமது வாழ்வு சிறப்புப் பெற வேண்டுமானால் அறத்தின் வழி செயல்படுவது சிறந்ததாகும். என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
You May Also Like: