மனிதர்கள் தனியாக இருக்கும் போது எதிரிகள் சுலபமாக அவர்களை வென்றிட முடியும். ஆனால் அவர்கள் ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு செயல்பட்டால் அவர்களை வெல்வது சுலபமன்று. அவ்வாறு தான் எம்முடைய மூதாதையர்கள் ஒற்றுமையாக செயல்பட்டதன் விளைவாகவே இந்தியா சுதந்திரம் அடைந்தமையைக் காணலாம்.
வேற்றுமையில் ஒற்றுமை கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- ஒற்றுமையின் அவசியம்
- வேற்றுமைப் பண்புகள்
- வேற்றுமையின் விளைவுகள்
- ஒற்றுமையே பலம்
- முடிவுரை
முன்னுரை
வேற்றுமையில் ஒற்றுமை காணும் மக்களை யாராலும் வெல்ல முடியாது என்பது திருவள்ளுவரின் கருத்தாகும்.
அதாவது இந்திய மக்கள் பல்வேறு வகையான மொழி, சமயம், கலாச்சாரம், இனம் என வேறுபட்டு காணப்பட்ட போதிலும் மக்கள் இந்தியா என்ற தேசத்தில் ஒற்றுமையாக வாழ்கின்றனர். இந்தியர்கள் என்ற ஓர் உணர்வு அனைவரையும் ஒன்றிணைப்பதனை காண முடியும்.
ஒற்றுமையின் அவசியம்
மனிதர்கள் அனைவரும் மனிதம் என்ற ஒற்றைச் சொல்லில் ஒன்றுபடுபவது அவசியமாகும். இதன் அடிப்படையில் ஒற்றுமையாக உள்ள நாடுகள் என்றும் முன்னேறிய செல்கின்றன.
எடுத்துக்காட்டாக அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் இன்று உலகில் முதல் தர நாடுகளாக திகழ்வதற்கான காரணம் அந்நாட்டு மக்களினுடைய ஒற்றுமை ஆகும்.
இன்றுவரையிலும் பல இனங்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமையாக காணப்படுவதற்கு காரணம் அவர்களுக்கு இடையில் ஒற்றுமையின்மையே ஆகும்.
வேற்றுமை பண்புகள்
இந்தியா நாடானது 29 மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் கொண்டுள்ள உலகின் ஏழாவது மிகப் பெரிய நாடாகும். இங்கு சனத்தொகையானது கிட்டத்தட்ட 1.38 பில்லியனாக காணப்படுகின்றது.
மக்கள் இந்தியர்கள் என ஒற்றுமை கண்டாலும் பல்வேறு வேறுபட்ட மொழி பேசும் மக்கள், கலாச்சாரத்தை பின்பற்றுபவர்கள், வெவ்வேறு கால நிலை, புவியியல் அம்சங்கள், பல்வேறு வளங்களைக் கொண்ட மாநிலங்கள், வெவ்வேறு மதத்தவர்கள், இனத்தவர்கள் போன்ற பல்வேறு வேற்றுமை பண்புகள் இந்தியாவில் காணப்படவே செய்கின்றன.
வேற்றுமையின் விளைவுகள்
ஒற்றுமையின் மூலம் வெற்றியையும் வேற்றுமையின் மூலம் தோல்வியுமே அடைய முடியும். மக்கள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்த போதிலும் தனியாக எதையும் செய்ய முடியாது ஒரு குழுவாக ஒன்றிணையும் போதே அங்கு வெற்றி கிட்டும்.
இந்தியர்கள் இனம், மதம், மொழி, சாதி என தமக்குள் தாமே அடித்துக் கொள்கிற போது பிறநாட்டவர்கள் இந்தியாவை இலகுவாகவே வீழ்த்திட முடியும்.
ஒற்றுமையே பலம்
“அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்று பழமொழி எமது மூதாதையர்களினால் கூறப்பட்டு வருகின்றது. அதாவது சமூகம் ஒற்றுமையாகவும், உறுதியாகவும் இருந்தால் யாராலும் அவர்களை பிளவு படுத்த முடியாது என்பதே அதன் கருத்தாகும்.
மனிதர்கள் திறமை, புத்திசாலித்தனம், வலிமை என்பவற்றை விரும்புகின்றார்களே தவிர ஒற்றுமையை தற்காலங்களில் காண்பது குறைவாகவே உள்ளது.
மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். ஒற்றுமையாக அனைவரும் ஒன்றாக செயல்பட்டாலே சாதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்க உண்மையாகும்.
முடிவுரை
இந்தியாவில் பல்வேறு வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும் எமது முன்னோர்கள் அனைவரும் ஒன்றிணைந்தே சுதந்திரத்தினை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அனைவரும் ஒன்றுபட்டாலே ஒரு தேசத்தின் வளர்ச்சி ஆரம்பிக்கும் அதாவது எம் நாடு இன்றும் முன்னேற்றம் அடையாமல் இருக்க காரணம் ஒற்றுமையின்மையும், அரசியலில் காணப்படும் ஊழல்களுமே ஆகும். இந்நிலையை மாற்ற வேண்டுமாயின் மக்கள் வேற்றுமையிலும் ஒற்றுமை காண வேண்டும்.
You May Also Like: