உலகில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பசி என்னும் உணர்வு தவிர்க்க முடியாதது. அவ்வுணர்வை போக்குவதற்கு உணவு என்பது தேவை அந்த உணவு தேவையை பூர்த்தி செய்யும் புனிதமான தொழில் தான் விவசாயம்.
விவசாயம் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- விவசாயத்தின் முக்கியத்துவம்
- விவசாயிகளின் முக்கியத்துவம்
- விவசாயம் எதிர் நோக்கும் சிரமங்கள்
- இயற்கை விவசாயமும் இன்றைய விவசாயமும்
- முடிவுரை
முன்னுரை
“கழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை”
என்பது வள்ளுவர் கூற்று. இதன் மூலம் வெளிப்படுவது என்னவென்றால் உழவு தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின் தான் இயங்குகின்றது. எத்தனை துன்ப, துயரங்கள் வந்தாலும் உழவு தொழில் முதன்மையானது.
விவசாயத்தின் முக்கியத்துவம்
பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவரே விவசாயத்தின் முக்கியத்துவத்தை எவ்வளவு அழகாக எடுத்து உரைத்துள்ளார்.
அது போலவே நாமும் “விவசாயம் என்பது கீழ் தரமான தொழில் இல்லை, உலகில் எல்லா தொழிலையும் விட சிறந்த தொழில் விவசாயம் ஆகும்” என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நாமும் எவ்வளவு பெரிய தொழில் செய்து எவ்வளவு தான் சம்பாதித்தாலும், எமது பசியை ஆற்ற வேறு தொழில் மூலம் நமக்கு உணவு உற்பத்தி செய்ய முடியாது.
விவசாயம் என்பது உலகத் தொழில்களின் தாய் ஆகும். ஒரு நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது. அந்த முதுகெலும்பு இன்று அழிந்து போகும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டது.
விவசாயம் அழிந்து விட்டால் பெருகி வரும் உலக மக்களின் பசியை எவ்வாறு போக்க முடியும்? செயற்கை உணவுகள் மூலம் அதிகளவு நோய் வாய்ப்பட வாய்ப்பிருக்கிறது.
சீனா, ரஷ்யா, மெக்சிக்கோ, பிரான்ஸ் இவ்வளவு ஏன் தொழில்நுட்ப நாடான ஜப்பானும் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடுகளில் முதல் ஐந்து இடத்தில் உள்ளது.
வளர்ந்துள்ள பெரிய நாடுகளே விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்றால் அனைத்து வளமும் பொருந்திய நம் நாட்டில் நாம் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம் ஆகும்.
விவசாயிகளின் முக்கியத்துவம்
“உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து” அதாவது உழவர்களே நம்மை தாங்கி நிற்பவர்கள் ஆவார்கள்.
உழவர்கள் சேற்றில் கால் வைக்காவிட்டால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது. எம் அனைவருக்குமே சோறு போடும் விவசாயி, அவன் ஒரு வேளை சாப்பிடவே கஷ்டப்படுகின்றான்.
எங்காவது உலகில் ஒரு விவசாயி, விவசாயத்தின் மூலம் பணக்காரன் ஆகியிருக்கிறான் என்று செய்தி இருக்கின்றதா? இல்லவே இல்லை. எந்த விவசாயியும் பணக்காரன் இல்லை, சிறு குடிசையில் வாழும் ஏழையாகவே இருக்கின்றான்.
தான் உண்ணவிட்டாலும் உலகத்திற்கு உணவு கொடுக்கும் விவசாயி என்றுமே விவசாயத்தை விட்டு விடுவதில்லை.
விவசாயம் எதிர்நோக்கும் சிரமங்கள்
விவசாயம் செய்வது எளிதல்ல, விவசாய நிலங்கள் அரசாங்கத்தாலோ அல்லது தனியார் நிறுவனங்களாலோ கைப்பற்றப்படல், விவசாயத்திற்கு போதியளவு நீர் கிடைக்காமை,
நீர் இறைக்கும் இயந்திரத்திற்கான எரிபொருள் கிடைக்காமை, அறுவடை மற்றும் கால போக நெற் செய்கைக்கான பங்கீடு, மற்றும் நெல்லுக்கான உத்தரவாத விலை கிடைக்காமை, போதியளவு உரமிடுவதற்கான பண பற்றாக்குறை என பல சிரமங்களை விவசாயிகள் எதிர் நோக்குகின்றனர்.
இயற்கை விவசாயமும் இன்றைய விவசாயமும்
பண்டைய காலத்தில் நம் மூதாதையர்கள் பல்லாண்டு காலம் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். காரணம் இயற்கை விவசாய முறை, அதாவது எவ்வித இரசாயனங்கள் கலக்காமல் தூய உணவுகளை விளைச்சல் செய்ததன் மூலம் நோய் நொடி அற்ற ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்தனர்.
இயற்கை பீடைக் கொள்ளிகளும், இயற்கை கிருமி நாசினிகளுமே பயன்படுத்தப்பட்டன.
ஆனால் இன்றைய விவசாயத்தில் பெறும் உணவே விஷமாகிறது. காரணம் நச்சுப் பதார்த்தங்கள் கலந்த கிருமி நாசினிகளை பயிர்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
சேதன பசளைகளுக்கு பதிலாக, அசேதன பசளைகள் பயிர்களுக்கு பயன்படுத்தப்படுவதால் பயிர்களில் இரசாயனங்கள் கலந்து புற்று நோய்கள் போன்ற கொடிய நோய்களுக்கு இந்த பரம்பரை அடிமையாகிவிட்டது.
முடிவுரை
இன்றைய சமுதாய மக்களில் பெரும்பான்மையினர் சிறு வயதிலேயே இறந்து விடுகின்றனர் காரணம் செயற்கை உணவுகளும், செயற்கை முறை விவசாயமும் தான். இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகளையும், விவசாயத்தையும் வளரச் செய்வோமாக. வாழ்க விவசாயம்!
You May Also Like: