உலகில் பல்வேறு மரங்கள் காணப்பட்டபோதும், மனிதனுக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாகவே இந்த வாழை மரங்கள் காணப்படுகின்றன. வாழையில்லாத வைபவங்களை இல்லை எனும் அளவுக்கு அதன் சிறப்புகள் காணப்படுகின்றன. வாழை மரத்தின் பயன்களை அறிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும்.
வாழை மரம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- வாழை மரத்தின் பாகங்கள்
- உணவுப் பயன்பாடுகள்
- மருத்துவ பயன்பாடுகள்
- சடங்குகளின் போது வாழை மரத்தின் பயன்கள்
- முடிவுரை
முன்னுரை
தென்கிழக்கு ஆசியாவில் அதிக பயன்தரும் தாவர இனமாகவே வாழை மரங்கள் காணப்படுகின்றன. இது அறிவியல் வகைப்பாட்டில் பூண்டு தாவரங்களில் பேரினமாகும். தமிழர் பண்பாடோடு நெருக்கமான தொடர்பு கொண்ட வாழை மரங்களின் பயன்பாடுகளை இக்கட்டுரை மூலம் அவதானிக்கலாம்.
வாழைமரத்தின் பாகங்கள்
வாழை மரங்கள் பொதுவாகவே மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் பயன்படுவதாக காணப்படுகின்றன. அந்த வகையில் வாழை மரத்தின் பாகங்களை பார்ப்போமேயானால்.
வாழைப்பூ – தசைகளை உறுதிப்படுத்தும் தன்மை உடையது, வாழை இலை – உணவு பரிமாறுவதற்கு பயன்படும், வாழைக்காய் – மாவுச்சத்துக் கொண்ட உணவாகும், வாழைப்பழம் – அதிக கலோரி மற்றும் பொட்டாசியம் நிறைந்த உணவாகும்,
வாழைத்தண்டு – உடலில் உள்ள உப்பை வெளியேற்றும் ஒரு உணவாகும், நார்பகுதி – மாலைகள் கட்டுவதற்கு பயன்படும், கிழங்கு – புதிய வாழை மரங்களை உருவாக்க பயன்படும் இவ்வாறாக வாழை மரத்தின் பாகங்கள் ஒவ்வொன்றும் மனிதனுக்கு ஏதோ ஒரு வகையில் உதவக்கூடியனவாகவே உள்ளன என்பதை காணமுடியும்.
உணவுப் பயன்பாடுகள்
பொதுவாகவே வாழை மரத்தின் அதிகமான பாகங்கள் உணவுக்காக பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் வாழைப்பூ, வாழைப்பழம், வாழைக்காய் முதலானவை உணவாக உட்கொள்ளப்படுகின்றன.
வாழைப்பூவை வறுத்து உண்ணலாம். இதில் விட்டமின் ஏ,பி,சி, கால்சியம், இரும்பு, பொற்றாசியம், நார்ச்சத்துக்கள் போன்றன காணப்படுகின்றன.
வாழைக்காயை சமைத்து உண்ண முடியும். வாழைக்காயில் பொற்ராசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து போன்றன உள்ளன. இவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தருகின்றன.
வாழைத் தண்டும் உணவாக பயன்படுத்தப்படுகின்றன. வாழை இலையில் உணவு பரிமாற்றம் செய்யும்போது அதில் மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து இருப்பதனால் சூடான உணவை வைத்து உண்ணும் போது, அதில் இருக்கும் சத்துக்கள் நம் உடலிலும் சேர்க்கப்படுகின்றன. இவ்வாறாக வாழை மரத்தின் மூலம் பல்வேறு உணவுகள் கிடைக்கப் பெறுகின்றன.
மருத்துவ பயன்பாடுகள்
வாழை மரத்தின் பெரும்பாலான பாகங்கள் மருத்துவ குணமிக்கவையாகவே காணப்படுகின்றன.
அந்த வகையில் வாழை மரத்தின் பூ, பிஞ்சு, காய் ஆகியன வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்தும், தண்டு நீர் இரத்தப்போக்கினை கட்டுப்படுத்துவதோடு, தண்டு பித்தப்பையை கட்டுப்படுத்தும், சிறுநீரை பெருக்கும்.
இலை குளிர்ச்சியை உண்டாக்கும், பழம் உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும் உடலை பலப்படுத்தும், உடலில் நீர்ச்சத்து குறையும் போது இயற்கையான குளுக்கோஸாக வாழைப்பழம் பயன்படும்.
மற்றும் மாதவிடாய் கோளாறுகளினால் ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கு நோய்களை கட்டுப்படுத்த வாழைத்தண்டு உதவுகின்றது.
சடங்குகளின் போது வாழைமரத்தின் பயன்கள்
தமிழர் பண்பாட்டில் எந்த ஒரு சடங்காக இருந்தாலும் வாழைமரத் தோரணம் கட்டுதல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். திருமணம்,பொங்கல் நிகழ்வு, திருவிழா, காது குத்து போன்ற மங்களகரமான நிகழ்ச்சிகளில் வாழை மரம் வாசலில் தோரணமாக கட்டப்படும்.
எனவே சுப நிகழ்வுகளுக்கு வாழைமரம் மற்றும் அதன் பழங்கள் உதவுகின்றன எனலாம். மேலும் சடங்கு சம்பிரதாயங்களின் போது விருந்தாளிகளுக்கு வாழை இலையில் உணவு படைப்பது தமிழர்களின் பண்பாடாகவே காணப்படுகின்றது.
முடிவுரை
நாம் வாழும் சுற்றுச்சூழலில் காணக்கூடிய ஒன்றாகவே இந்த வாழை மரங்கள் காணப்படுகின்றன. ஆனால் அதன் பயன்பாடுகளை உணர்ந்து செயல்படுபவர்கள் குறைவாகவே உள்ளோம்.
வாழை மரங்களின் மூலம் மனிதன் அடைந்து கொள்ளும் பயன்களையும், நன்மைகளையும் அறிந்து கொள்வதோடு, வாழை மரங்களை வளர்த்து அதனை சிறந்த முறையில் பராமரிப்பதும் எம் ஒவ்வொருவரதும் கடமையாகும்.
You May Also Like: