இன்றைய காலத்தில் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கத்தினால் வசிப்பு என்பது அழிவடைந்து வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.
வாசிப்பு பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- வாசிப்பின் வகைகள்
- வாசிப்பின் நன்மைகள்
- வாசிப்பின் சிறப்பு
- வாசிப்பின் முக்கியத்துவம்
- முடிவுரை
முன்னுரை
“ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன்” என்றார் மகாத்மா காந்தி. நூலகம் என்பது அவ்வளவு பெருமை வாய்ந்த ஒரு விடயமாகும்.
புதிய விடயங்களை கற்று அறிவை வளர்த்துக் கொள்ளவும், பரந்துப்பட்ட அளவிலான உலக அறிவை பெற்றுக் கொள்ளவும் உறுதுணையாக அமைவது வாசிப்பு ஆகும். அத்தகைய சிறப்பு வாய்ந்த வாசிப்பை எமது அன்றாட பழக்கமாக்கிக் கொள்வது சிறந்தப் பண்பாகும்.
வாசிப்பின் வகைகள்
வாசிப்பு இரண்டு வகைப்படும். அவையாவன உரக்கவாசித்தல், மௌனமாக வாசித்தல் என்பவை ஆகும்.
உரக்க வாசித்தல் என்பது எழுத்துக்களை கண்களால் பார்த்து அதற்கேற்ப அதை வாயால் ஒலி வடிவத்தில் உச்சரித்து சொல்லி பொருளை உணர்த்துபவை ஆகும். இதன் மூலம் மாணவர்கள் தடுமாற்றம் இன்றி விரைவாக படித்ததை சோதிக்க முடியும். இதனால் மாணவர்களிடையே நிலவி வரும் உச்சரிப்பு பிழைகள் திருத்தப்படுகிறது.
மௌனமாக வாசித்தல் என்பது உடல் உறுப்புக்களின் அசைவின்றி மனதுக்குள்ளேயே படிப்பதைக் குறிக்கிறது. இது அதிக பயனை கொடுக்கிறது. இதன் மூலம் பேச்சுக்கருவிகளுக்கு வேலை இல்லாததால் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பில்லை. கண்ணும், மனதும் மட்டுமே ஈடுபடுவதன் மூலம் வாசிக்கும் விடயங்கள் மனதில் ஆழமாக பதிகிறது.
வாசிப்பின் நன்மைகள்
வாசிப்பதன் மூலமாக ஒரு மனிதன் பூரணத்துவம் அடைகின்றான் அதாவது வாசிப்பு என்பது அறிவினை மாத்திரமின்றி சிந்திக்கின்ற ஆற்றல், கற்பனை திறன், புதிய விடயங்களை படைக்கும் திறன், பொறுமை, மன ஒருநிலைப்பாடு மற்றும் சஞ்சலமற்ற மனநிலை போன்ற நற்குணங்களை வளர்கின்றது.
அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகளை வாசிக்கின்றபோது அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள், சம்பவங்கள் என்பவற்றை வைத்து சரியான தீர்மானங்களை எடுக்க இயலும்.
உதாரணமாக, மகாத்மா காந்தியின் சத்திய சோதனை என்ற புத்தகம் தான் “மார்டின் லூதர் கிங்” என்பவரை உருவாக்கியது.
நல்ல நூல்கள் எமக்கு சிறந்த வழிகாட்டியாக அரவணைக்கும் தாயாக, தைரியம் தரும் தந்தையாக, கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் நண்பனாக பல்வேறு பாத்திரங்களை வகித்து துணையாக அமைந்து வழிகாட்டுகிறது.
வாசிப்பின் முக்கியத்துவம்
இன்று நம்மிடையே குறைந்து வரும் பழக்க வழக்கங்களில் ஒன்றாக வாசிப்பு காணப்படுகின்றது. வாசிப்புப் பழக்கத்தை வாழ்வோடு தொடர்புடைய அம்சமாக பார்க்க வேண்டும்.
வாசிப்புப் பழக்கத்தை அதிகரித்துக் கொள்வதில் ஒருவரின் மனநிலை பிரதான பங்கு வகிக்கின்றது. வாழ்வோடு ஒன்றிணைந்த செயற்பாடாக வாசிப்பினை மாற்றிக்கொள்ள வேண்டும்.
புத்தகங்களை வாசிப்பதன் மூலம் எமது வாழ்க்கையானது வெற்றிப் பக்கங்களை நோக்கி பயணிக்கும் என்பதனை நினைவு கொள்ள வேண்டும். சிறு வயதிலிருந்தே வாசிப்புப் பழக்கங்களை வளர்க்க வேண்டும்.
வாசிப்பதற்காக ஒரு இலக்கை தீர்மானித்தல் வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு பக்கமோ அல்லது ஒரு மாதத்திற்கு ஒரு புத்தகமே என்று ஒரு இலக்கை நிர்ணயித்து வாசிக்க ஆரம்பிக்க வேண்டும்.
அமைதியான சூழலை தேர்ந்தெடுத்தல் வேண்டும். தினமும் வாசிப்பதற்கு என நேரத்தை ஒதுக்குவது அவசியம்.
பயன் தரும் நூல்களைத் தெரிவு செய்து நமது வருமானத்தின் ஒரு பகுதியை நூலுக்காகச் செலவிட வேண்டும். வாசித்தைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
முடிவுரை
மனிதனை வளப்படுத்தும் பயிற்சிகளில் ஒன்றாக காணப்படுகின்ற வாசிப்பானது இன்று அரிதான ஒரு விடயமாக காணப்படுகிறது. சமூக வலைத்தளங்களின் அதீத பயன்பாட்டின் காரணமாக புத்தக வாசிப்பு என்பது இளைஞர்களிடையே மந்த நிலையில் காணப்படுகிறது.
புத்தக வாசிப்பின் நன்மைகளை சரிவர அறிந்து புத்தகங்களை பேணி பாதுகாத்து, வாசிப்பு பயிற்சியை அதிகரிப்பது எம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
You May Also Like: