வள்ளலார் பற்றிய கட்டுரை

vallalar katturai in tamil

தமிழக மெய்ஞானிகளில் ஒருவராகவும், சைவ அறிஞராகவும், கவிஞராகவும், அறியப்படுகின்ற ஒருவரே இந்த வள்ளலார் ஆவார். இவருக்கு பல்வேறு சிறப்பு பெயர்களும் காணப்படுகின்றது. அவற்றையெல்லாம் பின்வருமாறு அறியலாம்.

வள்ளலார் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • வள்ளலாரின் ஆன்மீக வாழ்க்கை
  • சமூகப் பணி
  • வள்ளலாரின் இலக்கியங்கள்
  • வள்ளலாரின் கட்டளைகள்
  • முடிவுரை

முன்னுரை

திருவருட பிரகாச வள்ளலார் மற்றும் ராமலிங்க வள்ளலார் போன்ற பெயர்களால் அறியப்படும் இவர் கடலூர் மாவட்டத்தில் மருதூரில் 1823 அக்டோபர் 5ம் தேதி அன்று பிறந்தார்.

இவருடைய தாயார் சின்னம்மையார் தந்தையான இராமையாபிள்ளை கிராமக் கணக்காளராக இருந்தார். இராமலிங்கம் எனும் இயற்பெயர் கொண்ட வள்ளலார் சைவ சமயத்தில் அதிகப்பற்று கொண்டமையினால் பல தலங்களுக்கு சென்று ஸ்தோத்திரப் பாடல்களை பாடியுள்ளார்.

சைவ சமயத்தின் ஆச்சாரப்படி திருநீறு அணிந்திருப்பார். இவர் திருநீறின் மகிமை பற்றி பத்து பாடல்களுக்கு மேல் பாடி உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

வள்ளலாரின் ஆன்மீக வாழ்க்கை

இளமை காலத்தில் இருந்தே ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட இவர் இளமைக் காலத்திலிருந்தே தியானத்திலும், வழிபாடுகளும் ஈடுபடக் கூடியவராக காணப்பட்டார்.

இவருடைய அருட்பாவின் முதல் மூன்று திருமுறையின் பல பாடல்கள் ஒற்றியூர் இறைவன் மீது பாடப்பட்டவை ஆகும். இவர் சிதம்பரத்தில் 1865 ஆம் ஆண்டு சமரச வேத சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். பிற்காலத்தில் அந்த பெயரை “சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்” என்றும் மாற்றி அமைத்தார்.

கடவுள் ஒருவரே அக்கடவுளை ஒளி வடிவில் வழிபட வேண்டும், சிறு தெய்வ வழிபாடு கூடாது, தெய்வங்களின் பெயரால் உயிர்பலி கூடாது, புலால் உண்ணக்கூடாது, சாதி சமய வேறுபாடுகள் கூடாது, எல்லோரையும் தன்னுயிர் போல் எண்ண வேண்டும். போன்ற கருத்துக்களைக் கொண்டவராக வள்ளலார் காணப்பட்டார்.

சமூகப் பணி

வள்ளலார் அவர்களின் சமூகப் பணிகளில் மிகவும் முக்கியமானது அவர் ஆரம்பித்து வைத்த “சமரச சுத்த சன்மார்க்க சத்திய தர்மச்சாலை” ஆகும். அதாவது இந்த தர்மசாலையில் சாதி, மத, மொழி, இன, நிற வேறுபாடுகள் பாராமல் மூன்று வேளையும் பசித்தவருக்கு உணவளிக்கும் தொண்டை தொடங்கினார்.

1867இல் “சன்மார்க்க போதின பாடசாலை” ஒன்றை தொடங்கினார் அதன் மூலம் மாணவர்களுக்கு தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற மொழிகள் கற்பிக்கப்பட்டன.

வள்ளலார் “சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்” என்பதை உருவாக்கி எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை விளக்கப்படுத்தினார். இவ்வாறாக இவருடைய சமூகப் பணிகள் தொடர்ந்தன.

வள்ளலாரின் இலக்கியங்கள்

வள்ளலாரின் இலக்கிய வரலாற்றை பார்ப்போமே ஆனால் அவர் பாடிய ஆயிரம் பாடல்களின் திரட்டு “திருவருட்பா” என்று அழைக்கப்படுகின்றது. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டுள்ளன. இதில் வரும் எல்லா பாக்களும் சமரசம், ஜீவகாருண்யம் ஆகிய இரண்டு அடிப்படைகளை கொண்டவை ஆகும்.

சிவபெருமான் உலா வரும்போது கண்டு காதல் கொண்ட காதலியாக கற்பனை செய்து பாடிய பாடல்கள் திருவுலா பேறு, திருவுலா வியப்பு, திருவுலாத் திறம் போன்றவை நாரையும், கிளியும் இறைவனிடம் தூது அனுப்பும் தூது வகை பாடல்களும் எழுதியுள்ளார்.

மேலும் வள்ளலார் மனுமுறை கண்ட வாசகம் எனும் மனுநீதி சோழன் நீதி முறை செய்த வரலாற்றை விளக்கும் உரைநடை நூலை எழுதியுள்ளார்.

வள்ளலாரின் கட்டளைகள்

வள்ளலார் சைவ சமய லட்சியத்தை ஆரம்ப காலங்களில் வைத்திருந்தாலும் அவற்றை பிற்பட்ட காலங்களில் கைவிட்டு எல்லா சமய, மத, மார்க்கம் அதன் ஆச்சாரங்கள், உலக ஆச்சாரங்களிடத்தும் இலட்சியம் கூடாது என கட்டளை இட்டார்.

அத்தோடு நாத்திகம் என்பதை கண்டித்தும் உள்ளார். சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள் ஆகிய சமய, மத, ஆச்சார சங்கற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும் என வேண்டுகிறார்.

முடிவுரை

இராமலிங்க வள்ளலாரின் மெய்யியல் என்பது ஒரு பக்கம் நவீன யுகத்துக்குரிய மனிதாபிமான நோக்கம், சமத்துவ பார்வை, பகுத்தறிவு சார்ந்த அணுகுமுறை கொண்டு அமைந்ததாக காணப்பட்ட போதிலும். மறுபக்கம் ஆழத்தில் அது சித்தர்கள் முன்வைக்கும் அகவயமான தியான முறைகளும், யோகப் பயிற்சிகளும், ஒருமை நோக்கமும் அடங்கியது.

எனவே இவ்வாறான வள்ளலாரின் சிந்தனைகளையும், கருத்துக்களையும் கற்றுக்கொண்டு அதன் மூலம் எமது வாழ்க்கையில் ஒரு தெளிவினைப் பெறுவது அவசியமானதாகும்.

You May Also Like:

யாதும் ஊரே யாவரும் கேளிர் கட்டுரை

யோகா என்றால் என்ன