யாதும் ஊரே யாவரும் கேளிர் கட்டுரை

yathum oore yavarum kelir tamil katturai

கணியன் பூங்குன்றன் அவர்களினால் உலகில் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் உருவாக்கும் நோக்கில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வரிகள் பாடப்பட்டுள்ளன. இதன் மூலம் எல்லா ஊரும் எம் ஊரே எல்லா மக்களும் எம் உறவினர்களே என குறிப்பிடப்பட்டிருப்பதனைக் காணமுடியும்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • சமத்துவத்தை பேணுதல்
  • சமத்துவத்தின் நன்மைகள்
  • உலக ஒழுங்கில் சமத்துவம்
  • தமிழர் வாழ்வும் சமத்துவமும்
  • முடிவுரை

முன்னுரை

உலகில் சமாதானத்தையும், அமைதியும், நீதியையும் கட்டி எழுப்புவதற்கான அடித்தளம் சங்க காலங்களிலே இடப்பட்டுள்ளது என்பதனை தெளிவுபடுத்தும் ஓர் எடுத்துக்காட்டாக “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வரிகள் காணப்படுகின்றது.

உலகில் பலராலும் பேசப்படும் காந்தியடிகள், அப்துல் கலாம் போன்ற அறிஞர்கள் கூட பல்வேறு மேடைகளில் இவ்வரிகளை பயன்படுத்தி உள்ளமையைக் காணலாம்.

வீணான வேற்றுமைகளையும், பகைமைகளையும் களைந்து மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதையே இவ்வரிகள் உணர்த்துக்கின்றன.

சமத்துவத்தை பேணுதல்

நாம் வாழக்கூடிய இந்த உலகானது பல்வேறு வகையான மக்களைக் கொண்டுள்ளது. அதாவது பல்வேறு மொழி, இன கட்டமைப்புகளை கொண்ட மக்கள் இந்த உலகினில் வாழ்வதனை காணலாம்.

எனவே பிரிவினைகள் ஏற்பட்டு சாதி, மத, இன வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவர்களுக்கு இடையில் சமத்துவம், சகோதரத்துவம் என்பது அழிந்து கொண்டு செல்வதையும் காணமுடிகின்றது.

சமூகத்தில் இவ்வாறான நிலைமைகள் அகற்றப்பட வேண்டும். என்பதனை எடுத்துக்காட்டும் ஓர் செய்யுட்பாவாகவே “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பது காணப்படுகிறது.

எல்லா ஊரும் எங்களது ஊரே எல்லா மக்களும் எங்களுடைய உறவினர்களே என்பதன் ஊடாக இங்கு சமத்துவம் வலியுறுத்தப்படுவதனை காணலாம்.

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என கூறுவதன் ஊடாக மக்கள் அனைவரும் மனித இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அனைத்து மக்களும் ஒருவனே இறைவனாகக் கொண்டு வழிபடுகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏழை, பணக்காரன் என்பவற்றையெல்லாம் தாண்டி ஒவ்வொரு மனிதனும் சமத்துவம், சகோதரத்துவத்தை பேணி நடக்க வேண்டும். என்பதே கணியன் பூங்குன்றன் அவர்களின் எதிர்பார்ப்பாகும்.

சமத்துவத்தின் நன்மைகள்

இன்று நாம் வாழும் உலகானது பல்வேறு குழப்பங்களும் பிரச்சினைகளும் நிறைந்த ஒன்றாகவே காணப்படுகின்றது. அதாவது உலகில் ஏதோ ஒரு மூலையில் மனிதக் குழுக்களுக்கு இடையே போராட்டங்களும், போர்களும் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளன.

இவ்வாறான நிலமையை தடுப்பதற்கு உலகில் சமத்துவமே உதவுகின்றன. உலகத்தில் பல்வகைமையான மக்களும் இதனை புரிந்து கொண்டு சமூகத்தில் ஏனையவர்களையும் மதித்து இன, மத பேதங்கள் இன்றி நல்லுறவினை உருவாக்குவதும் சமத்துவத்தின் நன்மையாகும்.

மேலும் ஏழை மக்களுக்கு பணக்காரர்கள் உதவி புரிவதும், அரசாங்கம் அவர்களுடைய வருமானத்துக்காக நிதி திட்டங்களை அறிமுகப்படுத்துவதும் ஏழை மக்களுக்கு நன்மை பயப்பனவாகவே காணப்படுகின்றன.

உலக ஒழுங்கில் சமத்துவம்

நாம் வாழும் இந்த உலகமும், எம்முடைய வாழ்வும் நிலையற்றது என்பது அனைவரும் அறிந்த ஓர் உண்மையாகும். எனவே பிறரோடு இணைந்து எமது வாழ்வினை மகிழ்ச்சியாக வாழ்வதே சிறந்ததாகும்.

ஆனால் இன்று மக்களுக்கிடையே போர்களும், போராட்டங்களுமே அதிகரித்துள்ளன. சமத்துவம் என்பது அழிந்து கொண்டு வருவதாகவே காணப்படுகின்றது.

ஆனால் மிக சமீப காலத்தில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றினால் மக்கள் பாதிக்கப்பட்ட போது அவர்களின் உயிரை காப்பாற்ற ஒவ்வொருவரும் பிராத்தித்தமையும், மிகவும் மோசமான நிலைமையில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பொருளாதார உதவிகளை வழங்கியமையும் இந்த சமத்துவத்தை உயிர்ப்பித்த ஒன்றாகவே காணப்படுகின்றது.

எனவே நாம் அசாதாரண சூழ்நிலைகளில் மட்டுமின்றி உலக ஒழுங்கில் எப்பொழுதும் சமத்துவத்தை கடைபிடிப்பது அவசியமானதாகும்.

தமிழர் வாழ்வும் சமத்துவமும்

உலக வரலாற்றில் தமிழர்கள் சகோதரத்துவம், சமத்துவம் என்னும் கோட்பாடுகளை கால காலமாக பின்பற்றி வருபவர்கள் என அறியப்படுகின்றது. அதாவது சமத்துவத்தை கடைபிடிக்கின்றனர் என்பதற்கு பல்வேறு இலக்கிய ஆதாரங்களும் காணப்படுகின்றன.

அதில் சங்கமருவிய காலத்தில் எழுந்த மணிமேகலை இலக்கியத்தில் வறுமையால் வாடுபவர்களுக்கு உணவளித்து, வாழ்விடம் அளித்து காப்பதே மிகச் சிறந்த அறம் என போதிக்கப்பட்டுள்ளதை காண முடியும்.

இவ்வாறாக தமிழர்களுடைய பண்பாட்டில் பசியினால் வாடுபவர்களுக்கு அன்னதானம் அளிக்கும் முறை, நீர் பந்தல் அமைத்து தாகம் தீர்க்கும் முறை, ஆதரவற்றவர்களை ஆதரிக்கும் வகையிலான இல்லங்கள் என சமத்துவத்தையும் உண்டாக்கும் பல்வேறு நடைமுறைகள் கைக்கொள்ளப்பட்டு வருவதனைக் காண முடிகின்றது.

முடிவுரை

இன்று நாம் வாழும் உலகம் நவீன யுகம் என்று மார்தட்டி கொண்டாலும் மக்களிடையே போட்டியும், பொறாமையும், மத, இன, சாதி வேறுபாடுகளும் நிறைந்து காணப்படுகின்றன.

ஆனால் ஒவ்வொரு மனிதனும் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கு சமத்துவம் என்பது அடிப்படையானதாகும் என்பதை நாம் புரிந்து நடந்து கொள்வதோடு நம்முடைய இளம் சந்ததியினருக்கும் இவற்றை கற்றுக் கொடுத்து சமத்துவத்தினைப் பேணி நடப்பது அவசியமான ஒன்றாகும்.

You May Also Like:

அறம் செய்ய விரும்பு கட்டுரை தமிழ்

சிறுவர் துஷ்பிரயோகம் கட்டுரை