முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும் ஆனால் முயலாமை ஒரு போதும் வெல்லாது. எனவே நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்வதில் தளரக்கூடாது.
போராட துணிந்த ஒவ்வொருவருக்கும் வெற்றிக்கதவு எப்போதும் திறந்தே இருக்கும். என்பதை நாமும் உணர்ந்து நமது பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும்.
முயற்சி திருவினையாக்கும் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- முயற்சியின் சிறப்பு
- முயற்சியின்மையின் இழிவு
- உழைப்பால் உயர்ந்தோர்
- முயற்சி தரும் படிப்பினைகள்
- முடிவுரை
முன்னுரை
தோல்வி எனும் தடையை தாண்டி வெற்றிப்பாதையின் முதற்பயணமே முயற்சி ஆகும். முயற்சி உடையோர் தன்னுடைய குறிக்கோளை நோக்கிய பாதையில் எவ் விதமான இடைஞ்சல்கள் வந்தாலும் அதிலிருந்து விலக மாட்டார்கள். நாம் செய்யும் முயற்சிகள் தவறலாம் ஆனால் ஒரு போதும் முயற்சி செய்ய தவறக்கூடாது.
முயற்சியின் அவசியத்தை நாம் விளங்குவதற்காகவே வள்ளுவர் அவரின் பொன் மொழிகளில் ஒன்றான “முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார்” எனும் பொன் மொழியை தந்து சென்றுள்ளார்.
முயற்சியின் சிறப்பு
மனிதர்கள் மட்டுமல்லாமல் பூமியில் வாழும் மற்றைய உயிரினங்களும் கூட அதன் முயற்சியை நம்பிதான் உயிர் வாழ்கின்றன.
அதாவது எறும்புகள் தம் முயற்சியினாலேயே மழைக்காலத்தில் மகிழ்ச்சியாக வாழ உணவை சேமிக்கின்றன.
தேனிக்கள் தேன் கூடு கட்டுவது, சிலந்தி வலை பின்னுவது, குருவிகள் கூடு கட்டுவதும் முயற்சியின் சிறப்புக்களை மனிதராகிய நமக்கு கூறும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
முயற்சியின்மையின் இழிவு
முயற்சி செய்யாமல் வெற்றியை தொட்டவர் இவ்வுலகில் யாருமில்லை. முயற்சிக்காமல் இருப்பது குடும்ப வறுமையை தருவதோடு குடும்பத்திற்கு உள்ள மரியாதையையும் பெருமையையும் அழித்து விடும்.
தோல்வியையும் முயற்சியையும் அடைந்தவன் மட்டுமே வாழ்வில் முன்னேற முடியும். அந்த வகையில் முயற்சி செய்யாமல் இருப்பவன் முட்டாள்களுக்கு சமமாக கருதப்படுகின்றான்.
உழைப்பால் உயர்ந்தோர்
நம் மனதில் இடம்பிடித்த சாதனையாளர்கள் எல்லாம் கடின முயற்சியால் வெற்றிப் பாதையை அடைந்தவர்களே. அந்த வகையில் தோமஸ் அல்வா எடிசன் 999 தடவை தோல்விகளை சந்தித்து 1000 வது தடவை தான் மின்குமிழை கண்டு பிடித்து இந்த உலகிற்கு வெளிச்சத்தை தந்தார்.
அதுபோலவே ஜமைக்கா நாட்டில் வறிய குடும்பத்தில் பிறந்த உசைன் போல்ட் அவரின் கடின முயற்சியால் 3 தடவைகள் தொடர்ச்சியாக ஒலிம்பிக்கில் தங்க பதக்கங்களை வென்றார். எவ்வளவு திறமை இருந்தாலும் சரியான முயற்சி இல்லாவிட்டால் வாழ்க்கையே புதிராய் போய்விடும்.
முயற்சி தரும் படிப்பினைகள்
முயற்சி தரும் படிப்பினைகளாக நாம் பலவற்றை கூறலாம். தொடங்குவது மட்டுமல்ல வெற்றி அடையும் வரை ஓடுவதே முயற்சியாகும்.
பயத்தை தூக்கி எறிந்தால் தான் குறிக்கோளை அடைய முடியும். நெருப்பை மூட்டாமல் வெளிச்சம் வராது வியர்வை சிந்தாமல் என்றும் உயர்வு வராது. முயற்சி செய்தால் மட்டுமே உலகம் நம்மை உயர்ந்த இடத்தில் வைத்து நோக்கும்.
இதனால் தான் தோமஸ் அல்வா எடிசன் “முயற்சி என்னை கைவிட்டது ஆனால் முயற்சியை நான் கைவிட்டதில்லை” என கூறியுள்ளார்.
முடிவுரை
கடலின் அலைகள், பூமியின் சுழற்சி, சூரியனின் உதயம் இவையெல்லாம் எப்படி மாறுவதில்லையோ அது போலவே நாமும் முயற்சியை கைவிடாது போராடினால் ஒரு நாள் வெற்றி பெற முடியும். ஆகவே நாம் நம் மனதை கட்டுப்படுத்தி தியாக உணர்வோடு இலக்கை நோக்கி செல்வோம். சாதிப்போம்.
You May Also Like: