தற்காலத்தில் அதிகரித்து வரும் நகரமயமாக்கம் காரணமாக பாரிய அளவிலான காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றது இது இயற்கை சமநிலைக்கும் பூமியின் நிலைத்திருப்பிற்கும் ஆபத்தானது ஆகும்.
மரம் இயற்கையின் வரம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- மரங்களினால் கிடைக்கும் நன்மைகள்
- மரங்களை அழிப்பதனால் ஏற்படும் விளைவுகள்
- மரங்களை அழிப்பதனால் மனிதன் எதிர்கொள்ளும் சவால்கள்
- முடிவுரை
முன்னுரை
மரங்கள் மனித சமுதாயத்திற்கு பல்வேறு பலன்களை அள்ளித்தரும் பொக்கிஷங்கள் ஆகும். ஒரு தனி மரம் ஆண்டொன்றுக்கு பல மனிதர்களுக்கு தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது.
ஒரு மரம் என்பது பூமிக்கு மேலே எப்படி குடை பிடிக்கிறதோ அதை போலவே வேர்களும் பூமிக்கு கீழே குடை விரிக்கின்றன. தண்ணீரை சேமிக்க நாம் மேல்நிலைத் தொட்டியை கட்டுவது போல மரங்கள் பூமிக்கு கீழே கீழ்நிலைத் தொட்டியை கட்டி நீரை சேமிக்கின்றது.
பல சிறப்புகளைக் கொண்ட மரங்களை நன்மைகள் மற்றும் அவற்றை அழிப்பதனால் ஏற்படும் விளைவுகள் என்பன பற்றி இந்த கட்டுரையில் நோக்குவோம்.
மரங்களினால் கிடைக்கும் நன்மைகள்
மரங்கள் பறவைகள் மற்றும் விலங்குகளின் புகலிடமாக அமைகின்றன. மரங்கள் மண் அரிப்பை தடுத்து நிலத்தடி நீர் வளத்தை பேணி பாதுகாக்கின்றது. நமக்கு பூ, காய், கனி, கீரை போன்ற உணவு வகைகளையும் தருகின்றன.
அது மட்டுமல்லாது சிறந்த மருந்துகளை உருவாக்கவும் உதவுகின்றது. மேலும் வீடு கட்டுவதற்கும், கப்பல் கட்டுவதற்கும், மர வேலைப்பாடு நிறைந்த பெரிய பொருட்களை தயாரிக்கவும், தீக்குச்சி முதல் தீப்பெட்டி போன்ற சிறிய பொருட்கள் வரை பலவகையான பொருட்களை தயாரிக்கவும் உதவுகின்றன.
தொழில் வளர்ச்சியினாலும், பல மின் சாதனங்களை பயன்படுத்துவதாலும் வெளிவரும் மாசுக்கள் நிறைந்த இச்சூழலினை தூய்மையாக்குபவை மரங்களாகும்.
வளியில் காணப்படும் கார்பனீரொட்சைட்டு வாயுவை அதிகமாக உள்ளெடுத்து மனிதனின் சுவாசத்திற்கு உதவக்கூடிய ஆக்சிசன் வாயுவை வெளியிடுகிறது. மேலும் மரங்கள் நீர் ஆவியாகி மேகமாகி மழையாக பொழிய பெரிதும் துணை செய்கின்றது.
மரங்களை அழிப்பதனால் ஏற்படும் விளைவுகள்
தற்காலத்தில் அதிகரித்து வருகின்ற நகரமயமாக்கம் காரணமாக அதிகப்படியான காடுகள் அழிக்கப்பட்டு சாலை அமைத்தல், சாலை விரிவாக்கம், தொழிற்சாலைகள் அமைத்தல், கட்டிடங்கள் கட்டுதல், நீர் மின்சக்தி நிலையங்கள் அமைத்தல், விமான நிலையங்கள் அமைத்தல் மற்றும் சுரங்கப் பணிகள் உள்ளிட்ட பல செயற்பாடுகள் ஆற்றப்படுகிறது.
இதன் விளைவாக வளிமண்டலத்தில் கார்பனீரொக்சைட்டின் அளவு அதிகரித்து சூழலின் வெப்ப நிலை அதிகரிக்கிறது. இதன் மூலம் பருவ நிலைகளில் மாற்றம் ஏற்படுகிறது.
அதிகப்படியான மரங்களை அழிப்பதனால் அதிக மழை வீழ்ச்சி, மண்ணரிப்பு பாரியளவில் இடம் பெறுகிறது. மற்றும் மரங்களை அழிப்பதனால் மழை வீழ்ச்சியின் அளவும் குறைவடைகிறது.
காடுகளை இழந்த வனவிலங்குகள் மக்கள் வாழும் பிரதேசங்களுக்குள் உட்புகுவதனால் மக்களின் உடைகளுக்கும் சேதங்கள் ஏற்படுகின்றது.
மரங்களை அழிப்பதனால் மனிதன் எதிர்கொள்ளும் சவால்கள்
மனிதர்கள் தமது தேவைகள் பொருட்டு அதிகளவான மரங்களையும், காடுகளையும் அழிப்பதனால் காலநிலைகள் பாரிய மாற்றம் ஏற்பட்டு பெரும் பிரச்சினைகளை உண்டாக்குகின்றது.
பயிர் செய்யும் நேரத்தில் வறட்சியும், அறுவடை நாட்களில் வெள்ளமும் புயலும் காட்டுத் தீயும் போன்ற இயற்கை அனர்த்தங்கள் மனிதனுக்கு எதிராய் ஏற்படுகிறது. சில விளைநிலங்கள் பாலைவனமாகி தரிசு நிலங்களாக மாறிவிடுகின்றன.
வளியில் காபனீரொக்சைட்டின் வீதம் அதிகரிப்பதனால் சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் குறைவடைந்து மூச்சு திணறல் மற்றும் தோல் சார்ந்த நோய்களும் ஏற்படுகிறது.
முடிவுரை
தற்கால விஞ்ஞான ஆய்வாளர்கள் சராசரியாக ஒரு மனிதனுக்கு 422 மரங்கள் தேவை என்ற கணித்திருக்கிறார்கள். உலக மக்கள் சனத்தொகையிலும் அதிகமாக மரங்கள் இந்த பூ உலகில் காணப்பட வேண்டும் என்றும் அதுவே வளமான உலகமாக காணப்படும் என்றும் கூறுகின்றனர்.
எல்லா வளங்களையும் அழித்து நாமும் அழிந்து எமது வருங்கால சந்ததியினருக்கு அழிவை ஏற்படுத்தாமல் நாமே வித்திட்டு மரங்களை வளர்த்து நாளைய சமுதாயத்திற்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது எம்மவர் ஒவ்வொருவரின் கடமையாகும்.
You May Also Like: