மணிமேகலை கட்டுரை – Manimegalai

manimegalai katturai in tamil

இலக்கியங்களை காலம் காட்டும் கண்ணாடி என்பர். மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களில் ஒன்றாகும். இக் காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார் ஆவார்.

இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இரண்டும் முழுக்க முழுக்கத் தழிழ்ச் சமுதாயத்தின் கோட்பாடுகளைக் காலங்கடந்தும் தெரிவிக்கும் தக்க சான்றுகளாக விளங்குகின்றன.

மணிமேகலை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • இயற்றப்பட்ட காலம்
  • காப்பிய நோக்கம்
  • காப்பியச்சிறப்பு
  • முடிவுரை

முன்னுரை

சீத்தலைச்சாத்தனார் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் பௌத்த சமயத் தலைவரான புத்தரின் சிந்தனைகளைத் தமிழக மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் பாட்டுடைச் செய்யுளாகப் படைத்த காப்பியம் மணிமேகலை ஆகும்.

இதைப்போலவே தமிழ் மொழியில் தமிழைப்பரப்புவதற்காக பாரதிதாசன் மரபில் வந்த கவிஞர் முடியரசன் இயற்றிய காப்பியம் பூங்கொடி. இது சாத்தனாரின் மணிமேகலையின் மீட்டுருவாக்கம் எனலாம்.

இயற்றப்பட்ட காலம்

இக் காப்பியத்தின் காலம் தொடர்பாக முரண்பட்ட கருத்துகள் இருந்து வருகின்றன. இது நியாயப் பிரவேசத்தைப் பின்பற்றி தோன்றியது என்று கருதப்படுகிறது. இதைப் பின்பற்றி மணிமேகலையின் காலம் பொ. ஊ 450-550 என்று சோ. ந. கந்தசாமி கருதுகின்றார்.

ஆய்வுகளில் இருந்து மாறுபட்ட எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் மணிமேகலை திண்ணாகருக்கும் நியாயப் பிரவேசத்திற்கும் முற்பட்டது என விளக்குகின்றார். அதன்வழி மணிமேகலை பொ. ஊ. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்று குறிப்பிடுகிறார்.

காப்பிய நோக்கம்

பௌத்த சமயத்தை அடிப்படையாக கொண்டு எழுந்த நூல் என்பதால் மக்களிடையே பௌத்த சமய உணர்வு மேலோங்கவும் சமயக் கொள்கைகளை பரப்பிடவும் அதனை நடைமுறையில் பின்பற்றவும் எழுந்த சமயப் பிரச்சார விளக்க நூலாக உள்ளது.

இது பௌத்த சமயத்தை பரப்பிய முறையை கூறுகிறது. இந்நூலில் அமைந்த 30 கதைகளிலும் ஊடுருவிச் செல்லும் மணிமேகலையின் வரலாற்றின் மூலமாக காப்பியத்தின் இந்த நோக்கம் நிறைவேறி இருக்கிறது எனலாம்.

காப்பியச்சிறப்பு

மணிமேகலை காப்பியமானது தன்னகத்தே பல சிறப்புக்களை கொண்டுள்ளது. கள்ளுண்ணாமை, பரத்தைமையை ஒழித்தல் போன்ற சீர்திருத்தக் கருத்துக்களையும் சமுதாய மேம்பாட்டையும் வலியுறுத்திக் கூறுகின்றன.

மணிமேகலை சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வுகளை அகற்றி உயர்ந்த சமுதாயத்தைப் படைத்துக் காட்டுவதற்கு எழுந்த காப்பியமாகும். சுகபோக வாழ்க்கை கிடைப்பதையும் பொறுட்டாக எண்ணாமல் துறவு வாழ்க்கைக்கு போன இளம் பெண்ணின் கதை இதுவாகத்தான் இருக்கும்.

மணிமேகலைக் காப்பியத்திலுள்ள கதைகளின் எண்ணிக்கை 30ம் மொத்த அடிகள் 4286ம் ஆகும். மேகலை என்னும் இடை அணி உள்ள பெருமையுடைய காப்பியமாகும்.

முடிவுரை

மணிமேகலை அறம் தலைக்கப் பாடுபட்டாள். பூங்கொடி தமிழ் தலைக்கப் பாடுபடுகின்றாள். சாத்தனார் விழாவறை காதையில் சோழமன்னர்களால் நிகழ்த்தப்பெற்ற இந்திரவிழா நிகழ்வைக் கவிஞர் முடியரசன் அதை தமிழர்த் திருநாளாம் தை முதல் நாள் கொண்டாடப்படும் பொங்கல் விழாவாகப் படைத்துள்ளார்.

பௌத்த அறத்தை நிலைக்கச் செய்ய படைக்கப்பட்ட மணிமேகலையைப் போலவே கவிஞர் முடியரசனாரின் எண்ணம் போற்றத்தக்கது. தமிழ்மொழி வளர்ச்சியே தன் வாழ்க்கையின் குறிக்கோளாய் எண்ணி தன்னுடைய இன்பங்களையும் துன்பங்களையும் மறந்து மொழிநலம் காத்த பூங்கொடி வாழ்க.

You May Also Like:

இரட்டை காப்பியங்கள் கட்டுரை

தஞ்சை பெரிய கோவில் கட்டுரை