பொங்கல் விழா கட்டுரை

pongal vizha katturai in tamil

எம் ஒவ்வொருவரின் வாழ்வியலோடு கலந்த ஓர் இனிய நாளாகவும், தமிழர்களுக்கு உரிய திருநாளாகவும் காணப்படும் பண்டிகை பொங்கல் திருநாளே ஆகும்.

பொங்கல் விழா கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பொங்கல் பண்டிகை வரலாறு
  3. பொங்கல் பண்டிகை சிறப்பு
  4. தைப்பொங்கல்
  5. மாட்டுப் பொங்கல்
  6. முடிவுரை

முன்னுரை

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான தை பொங்கல் தினமானது, சூரியன் மகர ராசியில் நுழையும் ஆறு மாத பயணத்தின் தொடக்க நாளாகும்.

இது வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட விவசாயத் திருநாளாகும். அத்துடன் இது தமிழர் கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்தும் அவர்களின் உன்னதமான திருநாளாகும். இப்பொங்கல் விழா பற்றி மேலும் நோக்குவோம்.

பொங்கல் பண்டிகை சிறப்பு

தமிழ் பேசும் மக்களால் உலகெங்கும் கொண்டாடப்படும் மிகவும் பழமையான பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகையானது நமக்கு உணவளிக்கும் விவசாயத்திற்கு உதவும் சூரியன், உழவர்கள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது.

தைப்பொங்கல் பண்டிகையை உழவர் திருநாள், தமிழர் திருநாள், அறுவடை திருநாள், தைத்திருநாள் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது.

இந்தப் பொங்கல் பண்டிகை தமிழகத்தில் மட்டுமல்லாது இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிஷியஸ், தென்ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ் மக்களால் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தைப்பொங்கல்

அனைத்து மக்களும் பசியின்றி வாழ்வதற்காக வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் உழவர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர்களின் உழைப்புத் திருநாளாக தைப்பொங்கல் காணப்படுகிறது. இதன் சிறப்பினை திருவள்ளுவர் பின்வருமாறு கூறுகிறார்.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்வார்.”

தை முதலாம் நாள் கொண்டாடப்படுகின்ற தைப்பொங்கலானது பெரும் பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது. உழவர்களின் உன்னத நாயகனாக இருப்பவர் சூரிய பகவான் ஆவார்.

இந்த நாளில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் அதிகாலை தூக்கம் விட்டெழுந்து நீராடி, சுத்தமான ஆடைகள் அணிந்து கதிரவனை போற்றும் வகையிலே

கதிரவனுக்கு படையலில் வெற்றிலை, பாக்கு, தேங்காய் மற்றும் முக்கனிகளுடன் இஞ்சியும், மஞ்சளும், கரும்பும், அருகம்புல்லும், பூசணிப்பூவும் வைத்து அனைவரும் கூடி புதுப்பானையில் குத்தரிசி இட்டு பொங்கல் வைத்து “பொங்கலோ பொங்கல்” என குழவை இட்டு நெஞ்சில் நன்றி பொங்க பொங்கல் விழாவை கொண்டாடுகின்றனர்.

மாட்டுப் பொங்கல்

கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் முகமாக மாட்டுப்பொங்கல்  கொண்டாடப்படுகிறது. இது “பட்டிப்பொங்கல்” என்றும் அழைக்கப்படுகிறது.

அன்றைய தினம் மாடுகளை குளிக்க வைத்து, அதன் கொம்பகளுக்கு வர்ணம் தீட்டி அவற்றை அலங்கரித்து, கழுத்தில் சலங்கை கட்டி, நெற்றியில் மஞ்சள் பூசி குங்குமப் பொட்டு வைத்து பட்டியினுள் பொங்கல் வைத்து அவற்றுக்கு பொங்கலை படைத்து வழிபடுவர்.

விவசாயத்திற்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் ஒரே இனம் தமிழரினமாகும்.

மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நிகழ்வானது சிறப்பாக தமிழகமெங்கும் இடம் பெறுகின்றது. இந்நிகழ்வானது வீரத்திற்கு அடையாளமாக இருந்தாலும் எருதுகளை அன்போடு தழுவி, அதற்கு உடம்பில் சிறுகாயம் கூட ஏற்படாத வண்ணம் இயன்றளவும் இவ்விழா நடைபெறுவது இதன் தனிச்சிறப்பு ஆகும்.

காணும் பொங்கல்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் இறுதி நாளாக காணும் பொங்கல் இடம்பெறுகின்றது.

இந்நாளில் தம்மை சுற்றி உள்ள மக்கள், பெரியவர்கள், உறவினர்கள், நண்பர்கள் உடன் அவர் தம் இல்லம்  சென்று அவர்களை வணங்கி, அன்புடன் உரையாடி மகிழ்தலே இந்நாளின் பிரதான நோக்கமாக காணப்படுகிறது. தமிழ்நாட்டு மண்ணுக்குரிய நாட்டுப்புற கலைகளான கும்மி, கோலாட்டம் போன்றன இந்நாளில் சிறப்பாக இடம் பெறுகின்றன.

முடிவுரை

தமிழர்களின் திருநாளாக கொண்டாடப்படுகின்ற பொங்கல் பண்டிகையை தமிழக அரசானது தமிழ்ப்புத்தாண்டு தினமாக அறிவித்துள்ளது.

எமது பாரம்பரிய விழாவாக காணப்படுகின்ற தைப்பொங்கல் விழா செய்வதன் சரியான காரணங்களை அறிந்து, எமது பாரம்பரியத்தை பாதுகாக்கும் பொறுப்பு எம்மிடம் காணப்படுகிறது. அதனை அடுத்த தலைமுறையினருக்கு சரியான முறையில்  கொண்டு செல்லுதல் வேண்டும்.

You May Also Like:

தமிழ் மொழியின் சிறப்பு கட்டுரை

சங்க இலக்கியத்தின் சிறப்புகள் கட்டுரை