பெண்மை பற்றிய கட்டுரை

penmai katturai in tamil

பழங்காலம் தொட்டு இன்றுவரையிலும் பெண்மை என்பது பிரதான ஒரு கருப்பொருளாகவே கொள்ளப்படுகின்றது. அதாவது பெண்களுடன் தொடர்புடைய பாரம்பரியமான பண்புக் கூறுகள், குணாதிசயங்கள், மற்றும் பாத்திரங்களின் தொகுப்பு என்பனவே பெண்மை என போற்றப்படுகின்றன.

பெண்மை பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • பெண்மையின் அடையாளங்கள்
  • பெண்மையின் உணர்ச்சி வெளிப்பாடுகள்
  • தமிழர் பண்பாட்டில் பெண்மை
  • பெண்மை சார் பிரச்சினைகள்
  • முடிவுரை

முன்னுரை

தற்கால உலகினில் மனிதன் பல்வேறு சிக்கல்களை தாண்டி வாழ வேண்டிய நிலை காணப்படுகின்றது. இந்த நவீன யுகத்தில் மனிதன் பெண்மை என்பதனை புரிந்து கொண்டு பெண்களுக்கான மதிப்பினையும், கௌரவத்தினையும் கொடுக்க வேண்டும் என்பதே முக்கிய ஒரு விடயமாகும்.

பெண்மையின் அடையாளங்கள்

சமூகத்தினால் பெண்களுக்காக என வரையறுக்கப்பட்டுள்ள பண்புகள், நடத்தைகள், மற்றும் கடமைகள் போன்றனவையே பெண்மை என வரையறுக்கப்படுகின்றன.

அதாவது பெண்களுக்காக கலாச்சார ரீதியாக வழங்கப்படுகின்ற பண்புகளே பெண்மை என்ற சொல்லைக் கொண்டு அடையாளப்படுத்தப்படுகின்றது.

மேலும் பெண்மையின் அடையாளங்களாக உடல் அமைப்பு மற்றும் ஆடை அணிகலங்களும் காணப்படுகின்றன.

அத்தோடு நடை, உடை, பாவனை அங்க அசைவுகள், முகத்தோற்றம் போன்ற அனைத்தும் இந்த பெண்மையை வெளிப்படுத்தும் அம்சங்களாகவே பெண்களுக்கு காணப்படுகின்றன என்பதே குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

பெண்மையின் உணர்ச்சி வெளிப்பாடுகள்

பெண்களின் உணர்வுகள் ஒழுக்கம், கௌரவம், புனிதம் எனும் பெயரில் அடையாளப்படுத்தப்படுகின்றன.

மனம் என்பது மானிடர்களுக்கு பொதுவான ஒன்றாக காணப்பட்டாலும் ஆண்களினால் பெண்களின் மனமானது அடக்கி ஆளப்படுகின்றது. அதாவது ஒரு பெண் ஆணாதிக்கத்திற்கு அடி பணிந்து வாழும் நிலையே தற்கால சமூகத்திலும் நிலவுகின்றது.

இதனால் தனக்கான விருப்பு வெறுப்புகளை மனதுக்குள்ளையே புதைத்த நிலையில் சோகத்துடனும், ஏகத்துடனும் வாழும் நிலைமையினை காணலாம். பெண்கள் தங்களுடைய விருப்பு வெறுப்புகளை சுயமாக தீர்மானித்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன.

மேலும் பெண்கள் அன்புக்காகவும், அரவணைப்புக்காகவும் ஏங்குபவர்களாக சித்தரிக்கப்படுகின்றார்களே தவிர, அவர்களுடைய சாதனைகள், பதவி, அதிகாரம் என்பன சமூகத்தில் உயர் நிலையில் பேசப்படுவதும் இல்லை என்பதனையும் காணலாம்.

தமிழர் பண்பாட்டில் பெண்மை

பொதுவாகவே தமிழர் பண்பாட்டில் பெண்மை என்பது போற்றப்படும் ஒரு அம்சமாகவே காணப்படுகிறது. அதாவது பெண்களை தெய்வமாக போற்றும் தன்மையினைக் காணலாம்.

உதாரணமாக சரஸ்வதி, பார்வதி லட்சுமி போன்ற பெண் தெய்வங்களினைக் குறிப்பிடலாம்.

தமிழர் பண்பாட்டில் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்பன பெண்மையின் குணாதிசயங்களாகவே குறிப்பிடப்படுகின்றன.

இன்றும் நதிகளுக்கு கூட காவேரி, யமுனா, சரஸ்வதி என பெண்களின் பெயர்களை சூட்டி அழைப்பதனையும் காண முடிகின்றது.

இவ்வாறாக தமிழர் பண்பாட்டில் பெண்களை போற்றும் குணம் காலப்போக்கில் ஆணாதிக்கத்திற்கு உட்பட்டு பெண்களை அடிமைகளாக பார்க்கும் நிலை ஏற்பட்டது. இதனை எதிர்க்கும் வகையிலேயே பாரதியாரும் பெண்கள் விடுதலை கும்மி, பெண் விடுதலை போன்ற கவிதைகளை எழுதியுள்ளமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

பெண்மை சார் பிரச்சினைகள்

தற்காலங்களில் பெண்கள் கல்வி, சுகாதாரம், மருத்துவம், திருமணம் போன்ற அனைத்து அம்சங்களிலும் பிரச்சினைகளை எதிர் கொள்ளக்கூடியவர்களாகவே காணப்படுகின்றனர்.

அதாவது கல்வி, பொருளாதாரம், திருமணம் போன்ற அனைத்திலும் பெண்களுக்கு என ஒரு ஆசை காணப்பட்டாலும், அவை வெறும் கனவுகளாகவே அமைந்து, மற்றவர்களின் வெறுப்புகளுக்கு கட்டுப்படும் நிலையினையே சமூகத்தில் காணலாம்.

இன்று பெண்கள் தனித்து இயங்க முடியாதவர்களாகவும், மிகவும் அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்படுபவர்களாகவுமே காணப்படுகின்றனர்.

இவ்வாறாக பெண்களை விட்டுக் கொடுப்பவர்களாகவும், தியாகிகளாகவும் சித்தரிப்பதற்காக இந்த சமூகம் அவர்களது உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறித்து விடுகின்றது என்பதைக் காண முடிகின்றது.

முடிவுரை

பெண்மை என்ற அம்சம் தொண்டு தொட்டு போற்றப்பட்டு வருகின்ற போதிலும் அதனைப் பற்றிய சரியான தெளிவும், புரிதலும் சமூகத்தில் கொண்டுவரப்பட வேண்டும் என்பது அவசியமான ஒன்றாகும்.

எனவேதான் பெண்களுக்கு எதிராக தற்கால சமூகங்களில் நிகழும் சீர்கேடுகள், குற்றச் செயல்கள், மற்றும் அநீதிகள் போன்றன குறைக்கப்பட்டு சமூகம் சீராகவும், சிறப்பாகவும் இயங்க முடியும்.

You May Also Like:

நான் விரும்பும் நூல் திருக்குறள்

அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரை