புலி பற்றிய கட்டுரை

puli patri katturai in tamil

புலி தனக்கான எல்லைகளை தாமே அமைத்து வாழக்கூடிய ஒரு விலங்காகும். புலியின் உறுமல் சத்தம் மூன்று கிலோமீற்றர் வரைக்கும் கேட்கும். வலிமை விரைந்தோடும் இயல்பு, போராற்றல் ஆகியவை புலிக்கு இந்திய தேசிய விலங்கு என்று பெருமையை பெற்று தந்துள்ளது.

புலி பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • புலியின் சிறப்பு
  • புலியின் வாழ் நாள்
  • புலிகளின் வாழ்விடம் மற்றும் உணவு
  • புலியின் இனப்பெருக்கம்
  • முடிவுரை

முன்னுரை

உலகில் பரவலாக காணப்படும் பெருவிலங்குகளில் புலியும் ஒன்றாகும். புலி பூனை இனத்தை சேர்ந்தது. இது உயர்நிலை ஊன் உண்ணியாகும். புலி பாலூட்டி வகையை சேர்ந்த பேரினம் ஆகும்.

புலியின் உடலானது செங்குத்தான கருப்பு நிற கோடுகளுடன் சிவப்பு கலந்த ஆரஞ்சு நிற மென்மையான மயிர்களையும் வெளிறிய அடிப்பகுதிகளையும் கொண்டு இருக்கும். இக்கட்டுரை மூலம் புலிகளின் சிறப்புகளையும் அதன் குணாதிசயங்கள் பற்றியும் நோக்கலாம்.

புலியின் சிறப்பு

இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுடைய தேசிய விலங்காகும். புலி வாழும் வனம் வளமான வனம் என்றழைக்கப்படும். புலி மிகவும் ஆக்ரோசமான, பலமான, வேகமான விலங்காகும். சோழ அரசர்களும் கொடிகளில் புலியின் சின்னத்தையே பயன்படுத்தினர்கள்.

மணிக்கு நாற்பத்தைந்து கிலோமீற்றர் தொடக்கம் ஐம்பத்தொன்பது கிலோமீற்றர் வரைக்கும் ஓட கூடியது. புலி தூய்மையை விரும்பும் ஒரு சுத்தமான விலங்காகும். புலி தன்னுடைய ஒருவேளை உணவாக இருபத்தைந்து கிலோகிராம் தொடக்கம் நாற்பத்தைந்து கிலோகிராம் வரையான மாமிசத்தை உண்ணக்கூடியது.

புலியின் ஜீரணசக்தி ரொம்ப குறைவாக காணப்படும். இது சாப்பிடும் சாப்பாடு ஜீரணமாக மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆகும். இதன் பார்வைத்திறன் இரவு நேரங்களில் கூர்மையாக காணப்படும். இதனால் இரவு நேரங்களிலே அதிகம் வேட்டையாடும்.

புலியின் வாழ் நாள்

புலிகள் 10 முதல் 15 ஆண்டுகள் வரை வாழும். வேட்டையாடுதல் மற்றும் பிற விலங்குகளால் எந்த ஒரு பாதிப்பும் நேராமல் இருந்தால் காடுகளில் வாழும் புலிகள் 26 வருடங்கள் வரை வாழும்.

புலிகள் வாழ்விடம் மற்றும் உணவு

புலிகள் பெரும்பாலும் மறைவான இடம், அதிகம் இரை உள்ள இடம் மற்றும் நீர்நிலைகளின் அருகில் காணப்படும். சைபீரியா வெப்பக் காடுகளிலும், இந்தியத் துணைக் கண்டங்களிலும், சுமத்திரா தீவுப் பகுதிகளில் உள்ள வெப்ப மற்றும் மிதவெப்ப காடுகள் வரை பரவலாக காணப்படுகின்றன.

புலிகள் மாமிச உணவுகளை மட்டுமே உண்ணும். மான், காட்டுப்பன்றி, எருமை போன்ற விலங்குகளை விரும்பி வேட்டையாடி உண்ணும்.

புலியின் இனப்பெருக்கம்

புலிகள் தங்கள் குட்டிகளை ஈன்றெடுக்க பதினாறு வாரங்கள் ஆகும். மூன்று முதல் நான்கு குட்டிகள் வரை ஈன்றெடுக்கும். பிறந்த குட்டிகளின் எடை ஒரு கிலோகிராம் வரை இருக்கும்.

பெண் புலிகள் பாலின முதிர்ச்சி அடைய மூன்று தொடக்கம் நான்கு ஆண்டுகள் வரை ஆகும். ஆண் புலிகள் நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் பாலின முதிர்ச்சி அடைகின்றன.

முடிவுரை

புலிகளின் அழிவைத் தடுத்து நிறுத்தவும், இது தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் 2010ம் ஆண்டில் ஜுலை-29 ம் திகதியை உலக புலிகள் தினமாக கொண்டாடுகின்றோம்.

நாமும் புலிகளை பாதுகாக்க உறுதிமொழி எடுக்க வேண்டும். புலிகளின் எண்ணிக்கை சீராக இல்லை எனில் மேய்ச்சல் விலங்குகள் அதிகரித்து காட்டுவளம் குன்றிவிடும். காடுகளை பாதுகாக்கும் புலிகளினைப் பாதுகாப்பதன் மூலம் நம்மை நாம் பாதுகாக்க முடியும்.

You May Also Like:

புலி பற்றி சில வரிகள்

சிங்கம் பற்றி சில வரிகள்