புறம்போக்கு எனும் சொல்லானது சோழர் காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வந்த சொல்லாகும். புறம்போக்கு நிலங்கள் அரசின் சொத்தாக உள்ளன.
இந்நிலங்கள் தனியார் அல்லாத அரசுத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதாவது மாநில அரசு, நடுவன் அரசு, மற்றும் உள்ளுராட்சி அமைப்புகள் போன்றவற்றால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு கிராமத்திலும் அரசு புறம்போக்கு நிலங்களை சர்வே எண் வாரியாக வகைப்படுத்தி தனி கணக்கு பதிவேடு வைத்திருப்பார்கள்.
நீர்நிலை புறம்போக்குகளை ஆக்கிரமிப்புச் செய்யக்கூடாது என்பதற்காக தனி அரசு உத்தரவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். புறம்போக்கு நிலங்களை அரசு பொது மக்களுக்கு இனாமாகவோ அல்லது விலைக்கோ கொடுக்க முடியும் என்பது சட்ட ரீதியான வழிமுறையாகும்.
அரசு புறம்போக்கு நிலங்களுக்கு இலவசமாகப் பட்டா கொடுக்கின்றது. குறிப்பாக புறம்போக்கு நிலங்களில் ஏழை மக்களுக்கு வீடு கட்டிக்கொடுப்பதற்கும், தொழில் செய்வதற்கும், கல்வி நிலையங்கள் கட்டுவதற்கும் பொதுப்பயன்பாட்டிற்கும் பட்டா சான்றிதழ்களை வழங்குகின்றது.
அதேசமயம் சொந்த வீடு இல்லாத மக்கள் ஒருங்கிணைந்து புறம்போக்கு நிலத்தை தங்களுக்கு கிரயம் செய்து தருமாறு அரசிடம் கோரிக்கை வைப்பதற்கும் மக்களுக்கு உரிமை உண்டு.
குறிப்பிட்டதொரு ஆண்டு காலம் வரை புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் மக்கள் பட்டா வேண்டி வட்டாட்சியாளரிடம் விண்ணப்பம் செய்யலாம்.
தகுதி இருப்பின் அவர் பட்டயம் வழங்குவார். சில சமயங்களில் பட்டா பெறுவதற்கான தகுதி இல்லை என்ற போதிலும் பணம் கொடுத்து பட்டா பெறும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.
புறம்போக்கு நிலம் என்றால் என்ன
வருவாய் ஆவணங்களுக்கு புறம்பாக இருப்பதால் புறம்போக்கு என வரையறை செய்யப்பட்டுள்ளது. மேலும் புறம்போக்கு நிலம் என்பது யாருடைய பராமரிப்பிலும் இல்லாமல் இருக்கக்கூடிய நிலம் எனவும் கூறலாம். இங்கு பட்டாதாரர் பெயர் உள்ள இடம் காலியாக இருக்கும்.
மேலும் கல்லாங்குத்து மேடு போன்று இருக்கும் நிலங்களை அரசு தீர்வை ஏற்படுத்தாத தரிசு என்று வகைப்படுத்தி தீர்வை ஏற்படுத்தவில்லை என்றாலும் அந்நிலங்களையும் புறம்போக்கு நிலங்கள் என்றே கூறுவர்.
அரசு புறம்போக்கு நிலங்களின் வகைகள்
தீர்வை ஏற்படுத்தப்படாத அரசு புறம்போக்கு நிலங்களாக 16 வகை புறம்போக்கு நிலங்கள் உள்ளன. அவையாவன,
- மந்தவெளிப் புறம்போக்கு
- மேய்ச்சல் புறம்போக்கு
- தோப்பு புறம்போக்கு
- ஓடைப் புறம்போக்கு
- களத்து மேட்டுப் புறம்போக்கு
- பாட்டை புறம்போக்கு
- ஊறல் கரை புறம்போக்கு
- குட்டைப் புறம்போக்கு
- கல்லாங்குத்து புறம்போக்கு
- இடுகாடு புறம்போக்கு
- சுடுகாடு புறம்போக்கு
- ஏரிப் புறம்போக்கு
- ஆத்துப் புறம்போக்கு
- குளத்து புறம்போக்கு
- கோயில் புறம்போக்கு
- அனாதிபம் புறம்போக்கு
நீர்நிலைப் புறம்போக்கு
ஏரி, குளம், குட்டை, கால்வாய், ஓடை, நீர்பிடி, ஏந்தல் போன்ற நீர்நிலைகள் மற்றும் அதனை அண்டியுள்ள அரசு நிலங்களையே நீர்நிலைப் புறம்போக்கு என அழைப்பர். இந்நிலங்களுக்கு எப்போதும் பட்டா வாங்க முடியாது.
இந்நிலங்களை வாங்குவதோ விற்பதோ கூடாது. அரசு இந்நிலங்களை எப்போது வேண்டுமானாலும் ஆக்கிரமிப்புச் செய்யலாம்.
நீர்நிலைப் புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பைக் கண்டறிந்து அகற்றுவதற்கு உள்ள நடவடிக்கைகளைத் திறம்பட கண்டறிதல், கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு மாவட்ட மற்றும் மாநில அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கமானதாகும்.
You May Also Like: