பீமன் வதம் செய்த அரக்கன் | பகாசுரன் |
பாண்டவர்கள்
மகாபாரதம் பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான பாரத யுத்தம் பற்றிய வரலாற்றினைக் கூறுவது பாரத நூல் ஆகும்.
மகாபாரதத்தில் பாண்டவர்கள் ஐந்து பேர். அவர்களது அண்ணன் தர்மன். கௌரவர்கள் நூறு பேர். அவர்களது அண்ணன் துரியோதனன்.
துரியோதனனும் தர்மரும் சூதாடினார்கள். இவர்கள் பந்தயம் வைத்தே சூதாடினார்கள். சூதாட்டத்தில் பாண்டவர்கள் தமது நாடு, நகரம், சொத்து, நகை எல்லாவற்றையும் இழந்தனர்.
எல்லாவற்றையும் இழந்த பாண்டவர்கள் காட்டில் வசிக்கும் சூழல் வந்தது. பாண்டவர்கள் 12 வருடம் வனவாசம் செல்ல வேண்டி ஏற்பட்டது. பாண்டவர்களுடன் அவர்களது தாய் குந்திதேவியும் வனவாசம் சென்றார்.
பாண்டவர்கள் ஏகச்சக்கர நகரம் செல்லல்
வனவாசம் செல்லும் போது, ஏகச்சக்கரம் என்று ஒரு நகரம் இருந்தது. அங்கு ஒரு பிராமணரின் வீட்டில் வாடகைக்கு பாண்டவர்களும் தாய் குந்திதேவியும் தங்கி வாழ்ந்தனர்.
தினமும் பாண்டவர்கள் ஐவரும் வெளியை சென்று பிச்சை எடுத்துக் கொண்டு வருவார்கள். அவர்கள் கிடைப்பவற்றை கொண்டு வந்து தாயிடம் கொடுப்பர். அதிலும் ஆக்கிய உணவில் பாதி உணவை பீமனுக்கு பரிமாறி விட்டு மீதி இருக்கும் உணவையே தானும் ஏனைய நால்வரும் பகிர்ந்து உண்பார்கள்.
ஏனெனில் பீமனே பாண்டவர்களுள் மிகச்சிறந்த பலசாலி ஆவான். அவனது பலத்திற்கு ஏற்றாற்போல் அவனுக்கு பசியும் அதிகம். அதனால் பீமனுக்கு சிறிதளவு உணவு அவனது பசியைப் போக்காது என்பதை அறிந்த தாயாரே அவனுக்கு நிறைய உணவு பரிமாறுவார்.
பகாசுர அரக்கனின் கொடுமைகள்
ஒரு நாள் பாண்டவர்களுக்கு வீடு கொடுத்த முதலாளியின் வீட்டில் முதலாளி, மனைவி, குழந்தை போன்றோரது அழுகைக் குரலும் வாக்குவாதமும் மாறிமாறி குந்திதேவியாருக்கு கேட்டது.
மனம் தளர்ந்த இரக்க குணமுடைய குந்திதேவி விரைந்து சென்று ஏன் இவ்வாறு அழுது கொண்டிருக்கிறீர்கள் என வினாவினார்.
அப்போது அந்த முதலாளி “இந்த ஏகச்சக்கர நகரம் பகாசுரன் என்னும் ஓர் அரக்கனுக்கு அடிமை. அவன் எமது ஊர் மக்களை மிகவும் கொடுமைப்படுத்தி வருகின்றான். சிலகாலத்திற்கு முன்பு தினமும் இங்கு வந்து தனது கண்ணில் தென்படும் எல்லாவற்றையும் அடித்து நாசம் செய்து உண்டு வந்தான் ஆடு, மாடு, மனிதர்களையும் உண்டு விடுவான்.
இதனைக் கண்டு தாங்க முடியாத நகர மக்கள் மற்றும் ராஜா எல்லோரும் சேர்ந்து அரக்கனிடம் சமாதானம் பேசினோம்.
வாரம் ஒரு முறை ஒரு வண்டில் நிறைய உணவுப் பண்டங்கள் உட்பட ஆடு, மாடு, என்பவற்றையும் அவற்றுடன் ஊரில் இருந்து ஒரு மனிதனையும் சேர்த்து அந்த வண்டிலில் அவனுக்கு அனுப்பி வைப்பதே அந்த சமாதான ஒப்பந்தம்.
அந்த வரிசையில் இன்று அந்த அரக்கனுக்கு எனது வீட்டில் இருந்து தான் ஒரு மனிதர் செல்ல வேண்டும். நாங்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்திருக்க மாட்டோம். அதனால் மூவரும் செல்வதற்கு அழுது கொண்டு இருக்கிறோம்” என்று அந்த பகாசுர அரக்கனின் கொடுமையை அழுது கொண்டு கூறினார்.
பீமன் பகாசுரனைக் கொல்ல அவனை தேடி செல்லல்
இதைக் கேட்ட குந்தி தேவியார் ஏகச்சக்கர மக்களை நினைத்து கவலையும் மன வருத்தமும் அடைந்தார். அவர்களைக் காப்பாற்ற எண்ணிய குந்தி தேவிக்கு ஒரு யோசனை கிடைத்தது.
வீட்டு முதலாளியின் குடும்பத்திற்கு பதிலாக தன்னுடைய மகன்களுள் மிகவும் பலசாலியான பீமனை அனுப்புவதற்கு திட்டமிட்டார். வண்டில் நிறைய உணவுப் பண்டங்களைக் கண்டதும் பீமனும் செல்வதற்கு சம்மதித்தான்.
செல்லும் வழியில் பீமனுக்கு பசி ஏற்பட்டது. வண்டிலை ஓரமாக நிறுத்தி விட்டு அரக்கனுக்கு கொண்டு சென்ற உணவுப் பண்டங்களை தான் உண்ணத் தொடங்கினான்.
நீண்ட நேரம் ஆகியும் உணவு வரவில்லையே என பசியால் துடித்த பகாசுரன் ஊர் மக்களுக்கு தன் மீது பயம் இல்லாமல் போய்விட்டது என கோபத்துடன் ஊருக்கு வந்து கொண்டிருந்தான்.
பீமன் பகாசுரனை வதம் செய்தல்
வழியில் பீமன் வண்டியிலிருந்த உணவுப் பண்டங்களை உண்பதைப் பார்த்த பகாசுரன் இவை எனக்கு வர வேண்டியவற்றை நீ சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாயா என கோபத்துடன் அவன் மீது பாய்ந்தான்.
பலசாலியான பீமன் பயப்படவில்லை. சளைக்காமல் அரக்கனுடன் சண்டை இட்டான். பசியால் துடித்த பகாசுரன் பலமிழந்து போனான். இறுதியில் பீமன் மரத்தை வேரோடு பிடுங்கி பகாசுரன் மீது போட்டு அவனைக் கொன்றான்.
அரக்கனின் இறந்த உடலை வண்டியில் ஏற்றி சென்று ஊர் எல்லையில் புதைத்தான். இதனை அறிந்த ஊர் மக்கள் அனைவரும் நிம்மதியும் சந்தோஷமும் அடைந்தனர். பீமனைப் பாராட்டி மாலை அணிவித்து கௌரவித்தனர். அன்று முதல் ஊர் மக்கள் அனைவரும் பீமனை தம் வீட்டு பிள்ளையாக எண்ணி அவனுக்கு உணவு அளித்து மகிழ்ச்சிப்படுத்தி வந்தனர்.
You May Also Like:
இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது