குழந்தை கிருஷ்ணாவினைப் பற்றி கோமகள் என்பவரால் எழுதப்பட்ட கதையே பால் மனம் எனும் தலைப்பில் வெளி வந்துள்ளது. அதாவது அ.வெண்னிலா என்பவர் தொகுத்த “மீதமிருக்கும் சொற்கள்” எனும் நூலில் இச்சிறுகதை வளிவந்துள்ளமையினைக் காணலாம்.
பால் மனம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- பால் மனம் கதையின் ஆசிரியர்
- குழந்தை கிருஷ்ணாவின் செயல்கள்
- பால் மனம் கதையில் வெளிப்படும் குழந்தையின் நற்பண்புகள்
- சமூகமும் குழந்தைகளும்
- முடிவுரை
முன்னுரை
“தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை” என்ற பழமொழிக்கு இணங்க ஒரு குழந்தை சிறு வயதில் வளர்க்கப்படும் விதமே அக்குழந்தையின் எதிர்காலத்தில் செல்வாக்குச் செலுத்தும்.
எனவே பால் மனம் எனும் கதையில் பால் போன்ற தூய்மையான மனம் படைத்த குழந்தைகள் வளரும் சூழல் அவர்கள் செயல்களில் எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகின்றன என்பதை கதை ஆசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பால் மனம் கதையின் ஆசிரியர்
பால் மனம் எனும் சிறுகதை எழுதிய கோமகள் என்பவரின் இயற்பெயர் இராஜலட்சுமி என்பதாகும். இவர் வானொலி தொலைக்காட்சி நாடகங்கள், சிறுகதைகள், புதினங்கள் போன்ற பலவற்றை எழுதியுள்ளார்.
அதில் அன்னை பூமி எனும் புதினம் அவருக்கு தமிழ் நாட்டரசின் விருதையும் பெற்றுக் கொடுத்துள்ளது. மேலும் சஞ்சைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் அன்னை விருதையும் பெற்றுள்ளார்.
அன்பின் சிதறல்கள், நிலாக்கால நட்சத்திரங்கள் போன்ற நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது பால் மனம் எனும் சிறுகதை சிறப்பு வாய்ந்ததாகவே காணப்படுகின்றது.
குழந்தை கிருஷ்ணாவின் செயல்கள்
அனைவரிடமும் அன்பும் கருணையும் மிகுந்தவளாக கிருஷ்ணா காணப்படுகின்றாள். பால் மனம் எனும் இக்கதையில் கிருஷ்ணாவின் செயல்கள் அவளது மனிதநேயத்தை எடுத்துக்காட்டுவதாகவே காணப்படுகின்றன.
அந்த வகையில் தெருவில் தெரியும் நாயை தொட்டு விளையாட பார்த்தல், கீரை விற்கும் பாட்டியை தொடமுனைதல், கைவண்டி இழுத்து வரும் ஒருவர் செருப்பு இல்லாமல் இருப்பதனால் சித்தப்பாவிடம் செருப்பை கொடுக்ச் சொல்லுதல் மற்றும் தன் தம்பிக்கு வைத்திருந்த பாலை ஆட்டுக்குட்டிக்கு புகட்டுதல் போன்றவாரான செயல்களை கிருஷ்ணா மேற்கொள்கின்றாள்.
பால் மனம் கதையில் வெளிப்படும் குழந்தையின் நற்பண்புகள்
பால் மனம் எனும் கதையில் கதை ஆசிரியர் குழந்தைகளின் நற்பண்புகளாக பின்வருவனவற்றை சமூகத்துக்கு வெளிப்படுத்துகின்றார்.
அதாவது தெரு நாயையும் தன் வீட்டு நாயையும் ஒரே மாதிரியான கண்ணோட்டத்தில் குழந்தைகள் பார்த்தல், அனைத்து மனிதர்களையும் சமமாக கருதுதல், அதாவது கூலித்தொழிலாளி, கீரை விற்கும் பாட்டி போன்றோர்களை கூட தன் வீட்டில் ஒருவராக எண்ணுதல், மிருகங்களிடத்திலும் அன்பு காட்டல்.
ஆட்டுக்குட்டியின் பசியை போக்க பால் ஊட்டியமையை குறிப்பிடலாம். இவ்வாறு குழந்தையின் நற்பண்புகள் இச்சிறுகதையில் எடுத்துக்காட்டப்படுகின்றன.
சமூகமும் குழந்தைகளும்
ஒவ்வொரு குழந்தையும் வாழும் சமூகம் அக்குழந்தையின் பண்புகளில் செல்வாக்கு செலுத்தும் அந்த வகையில் இந்த பால் மனம் சிறுகதையில் நற்பண்புகளோடு வளர்ந்த கிருஷ்ணா தனது எட்டாவது வயதில் தன்னுடைய அண்ணண் அண்ணியரால் முற்றிலுமாக மாற்றப்படுகின்றாள்.
அதாவது தெரு நாய்க்கு சோறு போட மறுக்கிறாள், ஆட்டுக்குட்டிக்கு கல் எறிந்து துரத்துகிறாள், சாலை வேலை செய்பவர் தண்ணீர் கேட்டவுடன் கொடுக்க மறுக்கிறாள் இவ்வாறாக அந்த குழந்தையை அவள் வளர்ந்த சமூகம் முற்றிலுமாக மாற்றி விட்டது.
முடிவுரை
சிறுவயதில் குழந்தைகள் நற்பண்புகள் நிறைந்தவர்களாக காணப்படுகின்ற போதும் அவர்கள் வளர வளர அவர்களுடைய பெற்றோரும், அவர்களை சார்ந்த சூழலில் வசிக்கக் கூடிய மனிதநேயமற்றவர்களும் குழந்தைகளை மாற்றி விடுகின்றனர் என பால் மனம் கதை குறிப்பிடுகின்றது.
இன்று நடைமுறை உண்மையாகவும் இது காணப்படுகின்றது. எனவே நாம் ஒவ்வொருவரும் இவற்றைத் தவிர்த்து எமது குழந்தைகளை மனிதநேயம் மிக்கவர்களாக வளர்ப்பது எமது கடமையாகும்.
You May Also Like: