எமது சமூகத்தில் பழையன எனப்படுபவை பழையது என தவிர்க்கப்பட வேண்டியதும் அல்ல, புதியன என்று போற்றப்படுபவை அனைத்தும் வரவேற்கத்தக்கதும் அல்ல என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
புதியதோ, பழையதோ எமது வாழ்க்கையை சீராக்கும், நெறிப்படுத்தும் செயற்பாடு எதுவாக இருந்தாலும் அதனை ஏற்று நடைமுறைப்படுத்துவதே சிறந்ததாகும்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- பவணந்தி முனிவரின் கருத்து
- பழையனவும் மனித வாழ்வும்
- புதியனவும் மனித வாழ்வும்
- மனிதனின் கலப்படமான மனநிலை
- முடிவுரை
முன்னுரை
“பழையன கழிதலும் புதியன புகுதலும்” தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்றாகும். காலத்துக்கு பொருந்தாத, பயன்படாத அல்லது வளர்ச்சி பாதையில் நடை போடாத எதையும் தவிர்த்து, காலத்துக்கு பொருத்தமான வளர்ச்சி பாதையில் நடை போடக்கூடிய பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதனை இந்த முதுமொழி நினைவு கூறுகின்றது.
இவ்வாறு புதியது பொருத்தமானது, பழையது பொருத்தமற்றது என தெரிவு செய்கையில் மிகவும் நுணுக்கமாக செயற்படும் தேவையும் காணப்படுகின்றது.
பவணந்தி முனிவரின் கருத்து
காலமாற்றங்களோடு பொருந்தி போகாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சி பாதையில் நடை போடாதவற்றை தவிர்த்து, கால மாற்றங்களோடு மேம்படுத்திக் கொண்டு வளர்ச்சி பாதையில் நடை போடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
என்பதனை வலியுறுத்துவதாகவே “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்று நன்னூலில் பவணந்தி முனிவர் குறிப்பிட்டுள்ளார்.
பழையனவும் மனித வாழ்வும்
பழையன கழிதல் என்ற வரிகளை வைத்துக்கொண்டு நாம் எம் வாழ்வினை காலம் காலமாக நெறிப்படுத்தும் விடயங்களை விட்டு விடுதல் என்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
அதற்காக பழையன யாவும் நன்மை தருபவை என்ற கருத்தும் கிடையாது. பழையன என நாம் கருதும் சில விடயங்கள் இறந்த காலத்துக்கு மட்டுமல்லாமல் நிகழ்காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் பொருந்தும் வகையிலும் காணப்படுகின்றன.
அவ்வாறான சில விடயங்களாக எமது பண்பாடு, பழக்கவழக்கங்கள், கலாச்சாரம் போன்றவற்றை குறிப்பிடலாம். இவை பழமையானதாக காணப்பட்டாலும் எக்காலத்துக்கும் சந்ததி சந்ததிகளாக பின்பற்றுபட்டு வரும் மரபுகளாகும்.
புதியனவும் மனித வாழ்வும்
தற்கால உலகானது நாகரீகம் என்ற பெயரில் வளர்ந்து கொண்டே செல்கின்றது. இவ்வாறு வளர்கையில் புதிய பொருட்களும், புதிய பழக்கவழக்கங்களும் நடைமுறைக்கு வருவதனை நாம் தவிர்க்க முடியாது.
இன்றைய இந்த தொழில்நுட்ப உலகானது புதுப்புது மாற்றங்களை நிகழ்த்திய வண்ணமே உள்ளது.
எனவே அம்மாற்றங்களையும் ஏற்றுக் கொண்டே நாம் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காரணம் புதிய விடயங்கள் மனித வாழ்க்கைக்கு புதிய உத்வேகத்தை அளிப்பதாகவும் சில சமயங்களில் இருக்கக்கூடும்.
மனிதனின் கலப்படமான மனநிலை
மனிதன் புதியவை அறிமுகமாகும் போதெல்லாம் ஒரு சிக்கல் நிலைக்குள் கொண்டு செல்லப்படுகின்றான். அதாவது பழையதை என்ன செய்வது புதியதை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியுமா? என்ற கலப்படமான மனநிலைக்கு உள்ளாகின்றான்.
எனவே காலத்தின் தேவை, அவசியம் என்பனதான் “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பதன் அவசியத்தை உணர்த்துகின்றன.
முடிவுரை
மனிதர்களாகிய எம்முடைய வாழ்க்கைக்கு தேவையான அம்சங்கள் அனைத்தும் அவை புதியனவாக இருந்தாலும் சரி, பழையனவாக இருந்தாலும் சரி அவசியமானவையாகும்.
அதாவது எம்முடைய வாழ்க்கையை நெறிப்படுத்தி சீராக்கும் அம்சங்கள் பழையனவாக அல்லது புதியனவாக எதுவாக இருந்தாலும் அவற்றை ஏற்றுக்கொண்டு நாம் செயற்படுதே சிறந்ததாகும்.
எனவே பழையன என்பவை எல்லாம் தவிர்க்கப்பட வேண்டியதும் அல்ல, புதியன என்பவை எல்லாம் வரவேற்கப்பட வேண்டியதும் அல்ல. என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
You May Also Like: