பருவ காலங்கள் கட்டுரை

paruva kalangal katturai in tamil

பருவ காலங்கள் கட்டுரை

உலகின் சமநிலையை தீர்மானிப்பதில் பருவகாலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பருவ காலத்தில் ஏற்படும் மாறுதல்கள் உலகின் சமநிலையிலும் மாறுதல்களை ஏற்படுத்துகின்றது.

பருவ காலங்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பருவ காலங்கள்
  3. பருவகாலங்களின் வகைகள்
  4. தமிழர் பருவ காலங்கள்
  5. பருவகாலங்களால் ஏற்படும் மாற்றங்கள்
  6. முடிவுரை

முன்னுரை

வாழ்க்கை எனும் நெடும் பயணத்திலே எமக்கு காலமே திசைகாட்டியாக நின்று வழிகாட்டி கொண்டிருக்கிறது. “பருவத்தே பயிர் செய்”, “நேரம் பொன்னானது” போன்ற பழமொழிகள் வாழ்வியலில் காலத்தின் முக்கியத்துவத்தின் தொகுப்புகளாகும்.

நாட்டில் நிலவும் பருவகால மாற்றங்களுக்கு ஏற்ப மனிதனும் தன்னைத் தயார்ப்படுத்தி அதற்கேற்ப வாழ்வை அமைத்துக் கொள்ள பருவ காலங்கள் நெறிப்படுத்துகிறது.

பருவகாலங்கள்

பூமியின் அனைத்து பகுதிகளிலும் காலநிலை ஒரே மாதிரியாக இருப்பதில்லை. பூமியின் அச்சு சாய்வாக இருப்பதாலும், அது சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருவதாலும் ஏற்படும் வானிலை மாற்றங்கள் பருவ காலங்கள் எனப்படுகிறது.

இந்தியாவின் காலநிலையிலும், நிலத்தோற்றத்திலும் இடத்திற்கிடம் மிகப்பெரும் வேறுபாடுகள் நிறைந்து காணப்படுகின்றது.

கோடை காலத்திற்கும் குளிர் காலத்திற்கும் இடையே தங்களது திசையை முழுவதும் மாற்றிக்கொண்டு வீசும் பருவக்காற்றுக்களே பருவகாலங்களை மாற்றி அமைக்கின்றன.

பருவகாலங்களின் வகைகள்

பருவ காலங்கள் பிரதானமாக நான்கு வகைப்படுத்தப்படுகிறது. அவை வசந்தகாலம், கோடைகாலம், இலையுதிர்காலம், குளிர் காலம் என்பனவாகும்.

இந்த நான்கு பருவகாலங்களும் பூமியில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாறி மாறி வருகின்றன.

வசந்தகாலம் என்பது கோடைகாலத்திற்கும் குளிர் காலத்திற்கும் இடையில் அமைவது ஆகும். இக்காலத்தில் மரங்களில் புதிய இலைகளும் மலர்களும் துளிர்க்கும். இரவும் பகலும் ஒரே அளவாக இருக்கும்.

கோடைகாலம் என்பது வெப்பம் அதிகமாக நிலவும் காலப்பகுதி ஆகும். இக்காலப்பகுதியில் பகல் பொழுது நீண்டும் இரவு பொழுது குறுகியும் காணப்படும்.

இலையுதிர்காலம் என்பது குளிர் காலத்திற்கும் கோடை காலத்திற்கும் இடையே அமையும் காலம் ஆகும். இக்காலத்தில் சில மரங்கள் தங்கள் இலைகளை உதிர்க்கின்றன. இரவும் பகலும் ஒரே அளவாக இருக்கும்.

குளிர் காலத்தில் அதிக குளிர் காணப்படுவதோடு பகல் பொழுது குறுகியும் இரவுப் பொழுது நீண்டும் காணப்படும். சில நாடுகளிலும் மலைப்பிரதேசங்களிலும் பனிப்பொழிவு காணப்படும்.

தமிழர் பருவ காலங்கள்

தமிழர் பருவ காலங்கள் என்பது பண்டைக்காலம் முதல் தமிழ் நாட்டில் வழக்கில் இருந்த பருவகாலப் பிரிவுகளை குறிக்கும்.

தமிழர்கள் ஓர் ஆண்டை ஆறு பருவகாலங்களாக பிரித்தார்கள். அத்துடன் பருவ காலங்களை காலத்தின் மாற்றங்களாக மட்டும் கருதாமல் மக்கள் வாழ்வியலுடனும், அவர்கள் வாழும் நிலத்துடனும் பிணைத்துப் பார்த்தார்கள்.

இதன்படி முல்லை நிலத்துக்கு கார்காலமும், குறிஞ்சி நிலத்துக்கு கூதிர் காலமும், முன்பனிக்காலமும், மருதத்துக்கும் நெய்தலுக்கும் எல்லாப் பருவகாலங்களும், பாலை நிலத்திற்கு இளவேனில், முதுவேனில், முன்பனி ஆகிய காலங்களும் உரியன என பருவகாலங்களைப் பற்றி தொல்காப்பியம் கூறுகிறது.

மழை மேகங்களால் சூழ்ந்த ஆடி, ஆவணி மாதங்கள் கார் காலம் எனவும், குளிர் காற்று வீசும் புரட்டாதி, ஐப்பசி மாதங்கள் கூதிர்காலம் எனவும், விடயலில் பனி பெய்யும் கார்த்திகை, மார்கழி மாதங்கள் முன்பனிக்காலம் எனவும்,

காலையில் பனி பெய்யும் தை, மாசி மாதங்கள் பின்பனிக்காலம் எனவும், வசந்த காலமான பங்குனி, சித்திரை மாதங்கள் இளவேனிற்காலம் எனவும், கோடைகாலமான வைகாசி, ஆனி மாதங்கள் முதுவேனிற்காலம் எனவும் வகைப்படுத்தப்படுகிறது.

பருவ காலங்களினால் ஏற்படும் மாற்றங்கள்

பருவகால மாற்றங்களுக்கு ஏற்ப மனிதர்கள் உண்ணும் உணவும், அணியும் ஆடைகளும் வேறுபடுகின்றன.

விவசாயத்திலே பயிர்ச்செய்கையை தீர்மானிக்கும் காரணியாகவும் பருவகாலங்களே விளங்குகின்றன. பருவ காலங்கள் மாற்றங்களுக்கு ஏற்ப தாவரங்கள் காய், கனிகளை தருகின்றன. சில தாவரங்கள் குளிர் காலத்தில் மலர்கின்றன. சில தாவரங்கள் கோடை காலத்தில் மலர்கின்றன.

சில விலங்குகளும் பறவைகளும் பருவகால மாற்றங்களுக்கு ஏற்ப தமது வாழிடத்தையே மாற்றுகின்றன. எடுத்துக்காட்டாக ஆர்க்டிக்கடல் குளிர் காலத்தில் உறைந்து விடும் என்பதால் அங்கு வாழும் திமிங்கிலங்கள் குளிர் காலத்திற்கு முன்பே வட அமெரிக்காவிலிருந்து கடல் வழியாக கலிபோர்னியா வளைகுடா கடற்கரைக்கு சென்று விடுகின்றன.

கடும் குளிர் உள்ள பனிப்பிரதேசத்தில் வாழும் பறவைகள், குளிர் காலம் ஆரம்பிக்கும் முன்பே புலம்பெயர்ந்து இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் உள்ள சரணாலயங்களை வந்தடைகின்றன.

இவ்வாறாக பருவ காலங்கள் பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களிடத்திலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

முடிவுரை

பருவ காலங்கள் தாவரங்கள் முதல் மனிதன் வரை அனைத்து உயிரினங்களினதும் வாழ்க்கை முறையை தீர்மானிக்கும் காரணியாக காணப்படுகின்றன.

பருவகால மாற்றங்களைக் கருத்தில்கொண்டு எதிர்கால செயல்பாடுகளை திட்டமிட்டால் மட்டுமே வாழ்வில் வெற்றி பெற முடியும்.

ஆகவே இயற்கையின் விதிப்படி நிகழும் பருவகால மாற்றங்களுக்கு ஏற்ப இயற்கையின் சமநிலையை சீர்குலைக்காதபடி எமது வாழ்வையும் திட்டமிட்டு சிறப்புற வாழ்வோம்.

You May Also Like:

அறிவியல் அழிவு கட்டுரை