அனைத்து செல்வங்களும் உயர்ந்த செல்வமாக நோயற்ற வாழ்வு காணப்படுகிறது. தற்கால சூழ்நிலையில் நோயற்ற வாழ்வது என்பது பாரிய சவாலாக காணப்படுகிறது.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- நோய் வரக் காரணங்கள்
- நோயின்றி வாழ எளிய வழிமுறைகள்
- நோய் தீர்க்கும் வழிமுறைகள்
- முடிவுரை
முன்னுரை
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது பழமொழி. உடல் ஆரோக்கியம் என்பதுதான் மற்ற எல்லா செல்வங்களையும் விட சிறந்தது. மற்ற செல்வங்களை பெறவும் பெற்ற செல்வத்தை அனுபவிக்கப்படும் ஆரோக்கியம் என்பது இன்றியமையாத ஒன்றாகும்.
இன்றைய சமுதாயத்தில் பிறந்த மழலை தொடக்கம் தள்ளாடும் முதியவர்கள் வரை பலரும் பல்வேறு விதமான நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இக்கட்டுரைகள் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள், நோயின்றி வாழ எளிய முறைகள், நோய் ஏற்பட்ட பின் அதிலிருந்து விடுபடும் முறைகள் என்பவற்றை நோக்குவோம்.
நோய் வரக் காரணங்கள்
மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்தது தான் நோய் வர முதன்மையான காரணமாகும். மாறிப்போன உணவுமுறை, மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் இவை மூன்றும் குறிப்பிடத்தக்க காரணங்களாக காணப்படுகின்றது.
இன்றைய வாழ்க்கை சூழலில் ஓய்வின்மை, காலம் தவறிய உணவு, உணவு பழக்கவழக்க மாற்றம், உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட பல்வேறு உடல் நல பாதிப்புகளுக்கு மூலக்காரணமாகின்றன.
நோயின்றி வாழ எளிய வழிமுறைகள்
- நாம் வசிக்கும் இடத்தில் சூரிய வெளிச்சமும், சுத்தமான காற்றும் தாராளமாக கிடைக்க கூடியவாறு இருத்தல் வேண்டும்.
- நிற்கும்போதும், நடக்கும் போதும் நமது உடல் நிமிர்ந்து இருக்க வேண்டும்.
- நோக்கிருமிகள் உடலில் நுழையாத வண்ணம் சுகாதார விதிகளை பின்பற்ற வேண்டும்.
- உழைப்புக்கு ஏற்ற உணவை சாப்பிட வேண்டும் மற்றும் உணவை நன்றாக மென்று, மெதுவாக, அளவோடு சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் உணவில் உள்ள சத்துக்கள் விரைவாகவும், முழுமையாகவும் உடலை சென்றடைகின்றது.
- பச்சைக்காய்கறிகள், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு பொருட்கள் மற்றும் சுத்தமாக காய்த்து வடிக்கட்டிய நீர் ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
- கொழுப்பு, காரம், புளிப்பு சேர்ந்த உணவுப் பொருட்களை அளவோடு சாப்பிட வேண்டாம்.
- கோபம், உணர்ச்சிவசப்படுதல், கவலை இவைகளைத் தவிர்த்து தியானங்களில் ஈடுபட்டு மனதை அமைதியுடன் வைத்திருக்க வேண்டும்.
- உடற்பயிற்சி உயிர் காக்கும். எனவே தினமும் 10 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.
நோய் தீர்க்கும் வழிமுறைகள்
“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்”
நோய் என்னவென்று ஆராய்ந்து நோயின் காரணங்களையும் ஆராய்ந்து அதை தணிக்கும் வழிகளையும் ஆராய்ந்து உடலுக்கும் பொருந்தும் படியாக செய்ய வேண்டும் என திருவள்ளுவர் இக்குறளின் மூலம் தெளிவாக கூறுகின்றார்.
அதாவது நோய் ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து வைத்தியரை அணுகி அவர்களின் ஆலோசனைகளை பெற்று அதற்கேற்ப மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
நோயற்றவர்கள் நோய் குணமாகும் வரை ஓய்வு எடுக்க வேண்டும். உணவினை உரிய நேரத்திற்கு உட்கொள்ளல், உடற்பயிற்சி, சரியான தூக்கம் போன்றவற்றை கடைபிடிப்பதன் மூலம் நோயிலிருந்து விரைவில் குணமடையலாம்.
முடிவுரை
“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது.” என்ற முன்னோரின் கருத்திற்கிணங்க, மானிடப்பிறவி என்பது அரிதான ஒரு விடயமாகும்.
இறைவன் வழங்கிய அருட்கொடையே நமது உடலாகும். அதனை நோயின்றி காப்பது எம்முடைய முதல் கடமையாகும். சுவரை வைத்து சித்திரம் வரைய வேண்டும் நமது உடலை வைத்துத்தான் உயிரை பேண முடியும். உடலை பேணுவோம் உயிரை காப்போம்.
You May Also Like: