மனிதனின் அன்றாட அடிப்படை தேவைகளுள் நீர் இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது.
வளர்ந்த நாடுகள் தண்ணீரை சரியான முறையில் பாவனை செய்து அவற்றை மீள் சுழற்சி செய்து பயன்படுத்தி வருகின்றன. ஆனால் சில நாடுகள் தண்ணீரை மோசமாக வீண்விரயம் செய்கின்றன.
நீரின்றி அமையாது உலகு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- நீரின் சிறப்புகள்
- நீரின் பயன்பாடுகள்
- நீர் மாசடைதல்
- நீர் பாதுகாப்பு
- முடிவுரை
முன்னுரை
பூமியில் இருக்கும் திரவங்களில் உயிரினங்களுக்கு மிக அத்தியாவசியமானது நீர் ஆகும்.
நீரின் முக்கியத்துவத்தினை அறிந்த திருவள்ளுவர் தனது திருக்குறளிலே, “நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வானின்றி அமையாது ஒழுக்கு.” என்று கூறுகிறார்.
பூமியின் ஆதாரமாக காணப்படுகின்ற நீரானது இந்த உலகத்தின் எல்லா தொழில்பாடுகளுக்கும் அடிப்படையாக அமைகின்றது. இந்த நீரினை பற்றி நோக்குவோம்.
நீரின் சிறப்புகள்
இந்த பூமியானது 71 சதவீதம் நீரினால் சூழப்பட்ட நீலக்கோளாக காணப்படுகிறது. புவியில் காணப்படும் மொத்த நிலப்பரப்பு 29 சதவீதம் மாத்திரமே ஆகும்.
இந்த 71% நீர்ப்பரப்பு 97.50 சதவீதம் கடல் நீராகும். மீதமுள்ள 2.5சதவீதமே நன்னீராகும். இவற்றில் மூன்றில் ஒரு பங்கு பனிக்கட்டிகளாகவும் காணப்படுகின்றது.
பஞ்சபூதங்களில் ஒன்றான இந்த பூமியில் நீரானது திண்மம், திரவம், வாயு என மூன்று நிலைகளில் காணப்படுகிறது.
புரதான காலம் தொடக்கம் தற்காலம் வரை மனிதர்கள் தனது வாழ்விடத்தை நீர்நிலைகளை அண்டி அமைத்து வாழ்ந்து வருகின்றனர். ஏனெனில் ஒருவனுடைய வாழ்வில் நீர் மிகவும் இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது.
புரதான காலத்தில் நம் முன்னோர்கள் நீரை தெய்வமாக போற்றி வாழ்ந்தனர். அத்தோடு சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு நதிகளின் கரைகளில் தான் நாகரிகங்கள் தோன்றின.
நீரின் பயன்பாடுகள்
ஒரு மனிதனின் வாழ்வில் அடிப்படையான விடயங்களுள் நீரும் ஒன்றாக காணப்படுகின்றது. தாவரங்கள், பறவைகள், விலங்குகள் என அனைத்து உயிரினங்களின் நிலைத்திருப்பிற்கும் நீர் இன்றி அமையாத ஒன்றாக காணப்படுகிறது.
நீரை மனிதர்கள் குடிப்பதற்கு, சமைப்பதற்கு, குளிப்பதற்கு, போக்குவரத்துக்கு போன்ற பல்வேறு அடிப்படை தேவைகளுக்கு பயன்படுத்துவதோடு மாத்திரமல்லாமல் விவசாயம் செய்தல், மின் உற்பத்தி செய்தல் போன்ற பல்வேறு செயற்பாடுகளுக்கும் பயன்படுத்துகின்றனர்.
நீர் மாசடைதல்
அனைத்து உயிரினங்களினதும் நிலைத்திருப்பதற்கும் முக்கியமாக அமைகின்ற நீரானது பல்வேறு காரணிகளினால் மாசாகி வீணாகும் நிலையினை அடைந்து வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.
இயற்கை அனர்த்தங்களான எரிமலை வெடிப்பு, நிலநடுக்கம், புயல், சூறாவளி போன்றவற்றினாலும் மனிதர்கள் குப்பைகளை நீர்நிலைகளில் கொட்டுதல், வாகன கழிவுகளை நீர் நிலைகளில் கலத்தல், கைத்தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் நச்சு பதார்த்தங்கள், கழிவுப் பொருட்கள், அமிலங்கள் என்பவற்றை நீர் நிலைகளில் கொட்டுவதன் மூலம் நீர் அதிகளவில் மாசடைகிறது.
அதுமட்டுமல்லாது ஆழ்துளைக்கிணறுகள் மூலமாக நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவதன் மூலம் நிலத்தடி நீர் வளம் அரிதாகிச் செல்கின்றது. இது தற்காலத்தில் பாரிய பிரச்சினையாக காணப்படுகிறது.
நீர் பாதுகாப்பு
நீரின்றி எந்த உயிரினமும் வாழ இயலாது என்பதை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து நீர் வீண் விரயத்தை தவிர்த்து சிக்கனமாக பயன்படுத்த பழகுதல் வேண்டும்.
மக்களிடையே நீரின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல் வேண்டும்.
தொழிற்சாலை கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றாதவர்களின் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு நீரின் அவசியத்தன்மையினை தெளிவூட்டுதல் வேண்டும்.
மாரி காலத்தில் கிடைக்கப்பெறும் மழை நீரை சரியான முறையில் நீர்த்தேக்கங்கள் அமைத்து சேகரித்து கோடைகாலத்தில் பயன்படுத்துதல் வேண்டும்.
இவ்வாறான பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் நீரை மாசடையாமலும் வீண்விரயமாவதையும் தவிர்த்து நீர்வளத்தை பாதுகாக்க முடியும்.
முடிவுரை
நிறை தேவையற்ற முறையில் வீண்விரயம் செய்வதன் மூலம் எதிர்வரும் காலங்களில் நீருக்காக மூன்றாவது உலகப்போர் நடைபெற கூட வாய்ப்புக் காணப்படுகிறது.
எனவே பல்வேறு நன்மைகளை மனிதருக்கு ஆற்றுகின்ற இந்த நீர் வளத்தை சரியான முறையில் பாதுகாத்து நம்முடைய எதிர்வரும் சந்ததியினருக்கு வழங்குதல் எம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.
You May Also Like: