கணக்கில் அடங்கா நூல்கள் தோன்றியிருந்தாலும் நிலைத்து நிற்கும் நூல்கள் சிலவே அவற்றுள் நான் விரும்பி படித்த நூல் திருக்குறள் ஆகும். பழமையும் பெருமையும் வாய்ந்த திருக்குறள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
நான் விரும்பும் நூல் திருக்குறள்
திருக்குறளை இயற்றியவர்
தமிழிலே படைக்கப்பட்ட மிகவும் சிறப்பு வாய்ந்த நூலாக கருதப்படுவது திருக்குறள் ஆகும். இதனை திருவள்ளுவர் இயற்றியுள்ளார்.
இவர் தேவர், நாயனார், செந்நாப்போதர், பெருநாவலர், பொய்யில் புலவர், மாதானுபங்கி, பொய்யாமொழிப்புலவர், தெய்வ பாவலர், முதற்பாவலர் எனப் பல்வேறு சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகின்றார்.
இவரது வாழ்க்கைக் காலம் சரியாக வரையறுக்கப்படாத போதும் இவர் சங்க காலத்தில் வாழ்ந்த புலவராகக் கொள்ளப்படுகின்றது. வள்ளுவரின் தாய் தந்தையர் பற்றிய விபரங்கள் ஏதும் அறியப்படவில்லை. இவருடைய மனைவி பெயர் வாசுகி ஆகும்.
திருக்குறளின் அமைப்பு
திருக்குறள் குறள் வெண்பாவால் எழுதப்பட்ட நூலாகும். அறம், பொருள், இன்பம் என்று முப்பாலாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 133 அதிகாரங்களையும் அதிகாரத்திற்கு 10 குறள்களாக 1330 குறள்களையும் கொண்டுள்ளது.
இல்லறவியல், துறவறவியல், அரசு இயல், அமைச்சு இயல், களவியல், மற்றும் கற்பியல் என அதற்குள் பல உட்பிரிவுகள் காணப்படுகின்றன. இந்த அமைப்பு என்னைக் கவர்ந்த ஒன்றாகும்.
திருக்குறளின் இயல்புகளும் பண்புகளும்
திருக்குறள் மதம், இனம், மொழி வேறுபாடின்றி, அனைவருக்கும் பொதுவான ஒரு நூலாகும். மனிதர்கள் அனைவருக்குமான அறக் கருத்துக்களைக் கூறும் நூல் என்பதால் உலகப்பொதுமறை என்று அழைக்கப்படுகின்றது. ஒரு நூல் அனைவருக்கும் பொது என்பது மிகச் சிறப்பானது.
திருக்குறள் இரண்டு அடிகளில் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் சிறப்பானது. எளிய சொற்களால் அரிய பல கருத்துக்களை அள்ளித் தரும் அறநூல் ஆகும். உயரிய நோக்கத்துடன் எழுதப்பட்ட எளிய நூலாக நிலைத்திருக்கும் குறளின் சிறப்பு பெருமைக்குரியது.
திருக்குறள் கற்றுத்தரும் நற்குணங்கள்
திருக்குறள் அரிய பல கருத்துக்களைக் கூறுகிறது. அன்பின் வழியது உயிர்நிலை என்றும் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்றும் கல்லாதவர் விலங்காவாடு என்றும் முயற்சி மன் மெய் வருத்தக் கூலி தரும் என்றும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றும் கூறுகிறது.
ஒரு மனிதன் இப்பூமியில் எவ்வாறு வாழ வேண்டுமென அனைத்து விதமான அறக்கருத்துக்களையும் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நற்குணங்களையும் கூறுகிறது.
ஒவ்வொரு மனிதனும் திருக்குறள் கூறி நிற்கும் வழியின்படி ஒழுகினால் வாழ்வில் சீரும் சிறப்பாக வாழ்வாங்கு வையகத்தில் வாழ வழிவகுக்கிறது.
திருக்குறளின் சிறப்பு
தமிழ்மொழி தவிர கிட்டத்தட்ட 80 வரையான ஏனைய பிறமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட சிறப்பைப் பெற்றுள்ளது. உலக ரீதியில் அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல்களில் திருக்குறளிற்கு மூன்றாவது இடம் வழங்கப்படுகின்றது.
பலரும் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளனர். இன்றும் பல மேடைகளில் எடுத்தாளப்படக்கூடியது. பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, தெய்வ நூல், முப்பால், உத்தரவேதம் எனப் பல பெயர்களால் சிறப்பிக்கப்படுகின்றது.
அதுமட்டுமல்லாமல் திருக்குறள் அகரமுதல என்று “அ” வில் தொடங்கி முயங்கப்பெறின் என்று “ன்” இல் முடிவடைகின்றது.
இவ்வாறு பல சிறப்புக்களைப் பெற்று, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாக திருக்குறள் விளங்குகிறது. இன்று வரை ஆய்வாளர்களால் ஆராய்ச்சி செய்யப்பட்டு வரும். ஒரு நூலாக திருக்குறள் விளங்குகின்றது.
தனிமனிதர்கள் எவ்வாறான ஒழுக்கங்களை சமூகத்தில் பேணி வாழ வேண்டும் என்பதனையும், மனிதன் செய்யக்கூடிய அறங்கள், இயற்கையோடு இணைந்து மனிதன் வாழும் வாழ்க்கையின் சிறப்புக்களை எடுத்தியம்பும் நூலான திருக்குறளை நீங்களும் கற்று பயன் பெறுவீர்களாக.
You May Also Like: