தொன்மை என்னும் சொல்லானது பண்டைக் காலத்தைச் சேர்ந்ததாகும். பழங்கால நூலான தொல்காப்பியத்தில் தொன்மை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
“தொன்மை தானே சொல்லுங் காலை
உரையொடு புணர்ந்த பழமை மெற்றே”
சில தொன்மைகளானவை சமய நம்பிக்கைகளையும், சடங்குகளையும் வெளிச்சப்படுத்துகின்றன. இன்னும் சில தொன்மைகள் உவமைக் கதைகளாகவும், மெய்யியல் உருவகங்களாகவும் நின்று சமுதாயத்திற்கு வழிகாட்டுகின்றவையாக அமைகின்றன.
தொன்மையை அறிவியல் முறையில் ஆய்வு செய்யவோ அல்லது, புரிந்து கொள்ளவோ முடியாது உள்ளது. அவை சமுதாயத்தின் ஆழ்மனதில் இருந்து வெளிப்படுவனாகவும், அவற்றினால் ஏற்படும் கூட்டமைப்பின் குறியீடுகளாகவும் விளங்குகின்றன.
தொன்மை என்றால் என்ன
தொன்மை அல்லது தொன்மம் என்பது பழமை அல்லது பழையது எனும் அர்த்தமாகும். அதாவது தொன்மை என்பது காலத்தின் பழமை என்று பொருள் கொள்ளலாம்.
தமிழ் மொழியின் தொன்மை
மனிதனின் சிந்தனைக்கு அடிப்படையான கருத்துக்களை வளர்த்தெடுக்கவும், தொடர்பாடல்களைப் பேணவும் உதவுவது மொழியாகும். மொழியினுடைய இயக்கமே மனித சமுதாயத்திற்கு உயிர் ஊட்டுகின்றது. தமிழ் மொழியின் தொன்மையைக் காட்ட எண்ணற்ற சான்றுகள் உள்ளன.
உலகளாவிய ரீதியில் பல்லாயிரக்கணக்கிலான மொழிகள் தோன்றி மறைந்திருக்கலாம். சில மொழிகள் கால மாற்றத்திற்கு ஏற்ப புத்தம் புது மொழிகளாகத் தோன்றி வளர்ந்தும் வருகின்றன. அவற்றில் சில மொழிகள் மட்டுமே இன்றும் அழியாமல் நிலை பெற்றுள்ளதனைக் காணலாம்.
அவ்வாறு நிலை பெற்ற மொழிகளிலும் சில மொழிகள் பேச்சு வழக்கு இழந்து இலக்கிய மொழியாக மட்டுமே திகழ்கின்றன. ஆனால் தமிழ் மொழியானது பழமையாக தோன்றி இன்றளவும் செல்வாக்குடன் வளர்ந்தும், வாழ்ந்தும் வருகின்றது.
உலகின் மிகத் தொன்மையான மொழியாகத் திகழும் தமிழ் மொழியின் தொன்மைக்கான சான்றாக பலரும் தொல்காப்பியத்தை குறிப்பிடுகின்றனர்.
உரைநடை கலந்து பழமையாகிய கதையை பொருள் எனக் கொண்டு செய்யப்படுவது தொன்மை என்னும் வனப்பின் இலக்கணமாகும். (தொல்காப்பியம் செய் 229) இந்தப் பழமைவாய்ந்த தொல்காப்பியத்தில் தமிழ் என்னும் சொல் முதன் முதலில் காணப்பெற்றுள்ளது. இதில் “தமிழென் கிளவி” “செந்தமிழ் நிலத்து” என வரும் நூற்பாத் தொடர்கள் இதற்குச் சான்றாகும்.
தமிழ் மொழியானது பழமைக்கு பழமையாக திகழ்வது மட்டுமின்றி இலக்கிய வளம் உடையதாகவும், புதுமைக் கருத்துச் செல்வம் நிறைந்ததாகவும், என்றும் இளமைப் பொலி உடையதாகவும் விளங்குகின்றது.
உலகிலேயே மொழிக்கென சங்கம் அமைத்து வளர்க்கப்பட்ட பெருமை தமிழ் மொழியையே சாரும். தமிழைச் சீர் செய்யவும், பலப்படுத்தவும், அறிவுபூர்வமாக சிந்தித்து செயலாட்டியவர்களாக சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் விளங்குகின்றனர்.
காய்ச்சினவழுதி மன்னனே தமிழினை மேலும் செழிப்புடையதாகவும், செம்மைப்படுத்துவதற்காகவும், மொழியாய்வு செய்யவும், அரும்பெரும் இலக்கியங்களை உருவாக்கவும் முதற்சங்கத்தை தோற்றுவித்தான்.
வெண்டேரச்செழியன் என்ற பாண்டிய மன்னனால் கபாடபுரத்தில் இடைச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. முடந்திடுமாறன் என்ற பாண்டிய மன்னனின் பெரும் முயற்சியால் மதுரை நகர எனப்படும் கூடல் மாநகரில் கடைச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வாறு முச்சங்கம் அமைத்து தமிழ் வளர்க்கப்பட்டது.
பழங் கன்னடம், பழைய மலையாளம், துளுவம் முதலிய பழைய மொழிகள் தமிழை ஒத்திருக்கின்றன. இது தமிழின் தொன்மையைக் காட்டுகின்றது.
பழந்தமிழ் எழுத்துக்களாலும், வட்டெழுத்துக்களிலும் பழைய கல்வெட்டுக்கள் எழுதப்பட்டுள்ளமை தமிழின் தொன்மைக்கான மற்றுமோர் சான்றாக விளங்குகின்றது. “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிப் பிறந்த மூத்தகுடி” எனக் கூறுவதனூடாகவும் தமிழின் தொன்மையைக் காணலாம்.
You May Also Like: