இன்றைய உலகில் இயற்கையின் சீற்றங்களும் அதனால் ஏற்படும் அழிவுகளும் மனிதனது நடத்தைகளினாலும் இயற்கைக்கு மாறான செயற்பாடுகளாலும் இடம்பெற்று வருவதுடன் இயற்கை தான் இருப்பதனை அடிக்கடி மனிதனுக்கு நினைவூட்டி வருவதனையும் உணர முடிகின்றது.
உலகில் எல்லா நாடுகளிலும் இயற்கை அனர்த்தங்களான வெள்ளம், சுனாமி, கடலரிப்பு, பனிப்பொழிவு, சூறாவளி, வறட்சி போன்ற பலவித அனர்த்தங்கள் காலத்திற்கு காலம் இடம்பெற்று வருகிறதனைக் காணமுடிகின்றது.
உலகின் பல இயற்கை அனர்த்தங்கள் அவ்வப்போது நிகழ்ந்து பேரழிவினை ஏற்படுத்தியும் சில சமயங்களில் பேரழிவினை ஏற்படுத்தாமலும் மறைவதுண்டு.
ஆனாலும் ஒரு சில குறிப்பிட்ட இயற்கை அர்த்தங்கள் மட்டும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதை காணலாம்.
புவியில் அமைந்துள்ள பெரும்பாலான பகுதி நீர்ப்பகுதியாக உள்ளது. இதனால் நீரின் மூலம் ஏற்படும் அனர்த்தங்கள் அதிகமாக உள்ளன. அவ்வகையில் தான் கடலரிப்பும் இன்றும் முக்கிய பிரச்சினையாக கடற்கரை அண்டியுள்ள பிரதேசங்களில் தலைதூக்கி இருக்கின்றது.
கடலோரங்களில் வாழும் மீனவ குடும்பங்கள் காலம் காலமாக பல இன்னல்களையும், சிரமங்களையும் எதிர்நோக்கிய வண்ணமே தமது இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
கரையோரங்களில் வசிக்கும் மீனவ குடும்பங்கள் புயல், கடல் சீற்றம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் கடல் நீர் உட்புகுந்து அவர்களது வாழ்க்கையை பாதித்து வருவது தொடர்கதையாகி வருகின்றது. இதனால் உயிரிழப்புக்கள் ஏற்படுவதோடு சொத்துக்கள் அழிவடையும் சந்தர்ப்பங்களும் உண்டு.
பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் மீனவ குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் அல்லது மானியங்களை வழங்கும் போதிலும் அதனை தடுக்கும் வகையிலும், கடல் அலை தாக்கத்தை குறைக்கும் வகையிலும் தூண்டில் வளைவுகளை அமைத்துக் கொடுக்க வேண்டிய தேவையும் உள்ளது.
தமிழகத்தில் பல இடங்களில் பலகோடி ரூபாய் செலவில் அரசு தூண்டில் வளைவுகளை அமைத்துக் கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
எனினும் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படாத கடல் சீற்றம் அதிகமாக உள்ள கரையோர மீனவ கிராமங்களில் அவ்வப்போது கடல் தண்ணீர் ஊருக்குள் புகுந்து விடுவதனால் இதனை தடுக்க அரசு தூண்டில் வளைவு அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் எனத் தொடர் கோரிக்கைகளை மீனவ மக்கள் முன்வைத்து வருகின்றனர்.
தூண்டில் வளைவு என்றால் என்ன
கடல் அரிப்பை தடுக்கும் விதமாக அமைக்கப்படுவது தூண்டில் வளைவாகும். அதாவது கரையோரங்களில் கட்டப்படும் நேர்க்குத்தான சுவரையே தூண்டில் வளைவு என்பர்.
தூண்டில் வளைவுகளின் பயன்கள்
தூண்டில் வளைவுகள் கடல் நீர் ஓட்டத்தை தடுப்பதனால் மண்ணரிப்பு குறையும். இதனால் கடற்கரையோர மீனவ குடும்பங்கள், வீடுகள், படகுகள், வலைகள் சேதம் அடையாமல் பாதுகாக்கப்படுகின்றன.
மேலும் பலத்த காற்று, ராட்சத அலைகள் போன்றவற்றால் படகுகள் இழுத்துச் செல்லப்படுவதையும் தூண்டில் வளைவுகள் தடுக்கின்றன.
தூண்டில் வளைவுகள் படகுகள் நிறுத்தவும் கட்டப்படுவதுண்டு. மண்ணரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான இறுதி ஆயுதமாக தூண்டில் வளைவுகள் உள்ளன.
பருவமழை தாக்கத்தினாலும், புயல்கள் வீசும் சந்தர்ப்பங்களிலும் கரையோரங்களில் நிறுத்தப்பட்டு இருக்கும் விசைப் படகுகள் தூண்டில் வளைவால் சேதமடையாமல் பாதுகாக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன.
கடல் அரிப்பின் காரணமாக உப்பு நீர் உட்புகுவதால் நிலத்தடி நீர் உப்புத் தன்மை கொண்டதாகின்றது. இதனால் கரையோர மக்களின் குடிநீர் ஆதாரம் பாதிப்படைகின்றது. இதனைத் தூண்டில் வளைவுகள் தடுக்கின்றன.
You May Also Like: