தில்லையாடி வள்ளியம்மை கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- வள்ளியம்மை இளமைக்காலம்
- வெள்ளையரிற்கு எதிரான போராட்டம்
- காந்தியடிகளின் கருத்து
- வள்ளியம்மையின் இறப்பு
- முடிவுரை
முன்னுரை
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கு அளப்பரியதாக் காணப்பட்டது. வேலுநாச்சியார், ராணி சென்னம்மா, ராணி லட்சுமிபாய் போன்ற பல பெண்கள் இந்தியாவின் சுதந்திரத்திற்காக அயராது உழைத்தனர்.
இவர்களைத்தவிர நாடுகடந்த இந்தியர்களிற்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து போரடியவர்களுள் தில்லையாடி வள்ளியம்மை முக்கியமானவராக கருதப்படுகின்றார்.
வள்ளிமையின் பிறப்பு
வீரமங்கையான வள்ளியம்மை தஞ்சை மாவட்டத்திலுள்ள தில்லையாடி என்ற ஊரை பூர்வீகமாகக் கொண்ட முனுசாமி என்பவரிற்கும் மங்களத்தம்மாள் ஆகியோரிற்கு மகளாக 1898ம் ஆண்டு பிறந்தார்.
வள்ளியம்மையின் பெற்றோர்கள் அவர் பிறப்பதற்கு முன்பே தென்னாபிரிக்கா சென்று அங்கு வணிகம் சார் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். வள்ளியம்மையின் பிறப்பிடம் தென்னாபிரிக்கா ஆகும்.
வெள்ளையரிற்கு எதிரான போராட்டம்
இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளை ஆக்கிரமித்த ஆங்கிலேயர்கள் அங்கு வாழ்கின்ற மக்களை கொடுமைப்படுத்துவதோடு மட்டுமல்லாது அந்த நாடுகளிலுள்ள வளங்களை சுரண்டுவதிலும் ஈடுபட்டு வந்தனர்.
தொழில் நிமித்தம் தென்னாபிரிக்கா சென்ற இந்தியர்களும் ஆங்கிலேயர்களால் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வந்தனர்.
பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களாக தென்னாபிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களிற்கு ஆதரவாக குரல் கொடுத்தோடு மட்டுமல்லாது காந்தியடிகளின் தலைமையில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் வள்ளியம்மை பங்கு பற்றினார்.
கிறிஸ்தவ முறைப்படி நடாத்தப்படும் திருமணங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என ஆங்கிலோயரினால் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத்தை எதிர்த்தும் ஆங்கிலேயர்களால் விதிக்கப்பட்ட அதிகப்படியான வரியை எதிர்த்தும் நடைபெற்ற போராட்டங்களில் பங்குபற்றி சிறை சென்றார்.
காந்தியடிகளின் கருத்து
மகாத்மா காந்தியடிகள் மோகனதாஸ் கரம்சந்த் காந்தியாக தென்னாபிரிக்காவில் வழக்கறிஞராக கடமையாற்றிய காலப்பகுதியில் வெள்ளையர்களின் அடக்குமுறைகளை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நிகழ்த்தினார்.
அப்போரட்டங்களில் கலந்து கொண்ட வள்ளியம்மை ஆங்கிலேயரை மிகக் கடுமையாக எதிர்த்தார்.
காந்தியடிகள் வள்ளியம்மையைப் பற்றிக் குறிப்பிடும் போது தனக்கு முதன்முதலில் விடுதலை உணர்வை ஊட்டியவர் என்ற பெருமைக்குரியவர் வள்ளியமை எனக் கூறினார்.
இந்திய மக்களின் நலனுக்காக சிறை சென்ற அவர் மனந்தளராமல் இந்தியர்களின் வாழ்வுரிமைக்காக பாடுபட்டார்.
வள்ளியம்மையின் இறப்பு
வள்ளியம்மை வெள்ளையர்களிற்கு எதிரான போராட்டம் ஒன்றில் கலந்து கொள்ளும் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் பல்வேறு சித்திரவதைகளிற்கு ஆளான அவரிற்கு சரிவர உணவு வழங்காமையினால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டன.
காய்ச்சலால் அவதியுற்ற வள்ளியம்மை 1914ம் ஆண்டு மாசி மாதம் 23ம் திகதி தனது பதினாறாவது வயதில் மரணம் அடைந்தார்.
வெள்ளையர்களிற்கு எதிரான போராட்டத்தில் வீரமங்கையாக விளங்கிய அவரின் உயிரை வெள்ளையரின் அரசாங்கமானது அநியாயமாக காவு வாங்கியது. அவரது மரணத்தைப் பற்றி காந்தியடிகள் குறிப்பிடுகையில் தனது சகோதரியின் மரணத்தை விட வள்ளியம்மையின் மரணம் வருத்தத்தை தந்ததாக குறிப்பிட்டார்.
முடிவுரை
இந்திய மக்களின் நலனிற்காக தனது உயிரை தியாகம் செய்த வள்ளியம்மையை கௌரவிக்கும் முகமாக தமிழக அரசாங்கமானது அவரது சிலையை நிறுவியுள்ளது.
அதுமட்டுமின்றி தமிழக நெசவாளர் கூட்டுறவுச் சங்கமானது தனது அறுநூறாவது விற்பனை மையத்திற்கு வள்ளியம்மை மாளிகை என பெயரிட்டு அவரைப் பெருமைப்படுத்தியுள்ளது.
வீரப்பெண்களிற்கு உதாரணமாகத் திகழ்ந்த வள்ளியம்மை சிறுவயதிலே மரித்தாலும், அவர் அந்நாட்டு மக்களிற்கு அளித்த அளப்பரிய சேவை அவரை மாமனிதர்களுள் ஒருவராக மாற்றியுள்ளது.
You May Also Like: